அரசியல்
Published:Updated:

கட்சித்தாவல்... உட்கட்சிப்பூசல்... உத்தரகாண்ட் அரசியல் அதகளம்!

காங்கிரஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
காங்கிரஸ்

உ.பி-யைப்போலவே உத்தரகாண்ட்டின் முடிவுகளும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்

உத்தரகாண்ட்டிலிருக்கும் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. மார்ச் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்படவிருக்கின்றன. இதில், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க-வும், இந்த முறை எப்படியும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என காங்கிரஸும் தீவிரமாகக் களத்தில் மோதுகின்றன. இவையில்லாமல், மூன்றாவது அணியாக ஆம் ஆத்மியும் முதன்முறையாக உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் சலங்கைகட்ட... தேர்தல் மேடை சூடுபிடித்திருக்கிறது. முதலமைச்சர் வேட்பாளர் முதல் எம்.எல்.ஏ சீட் வரை, வாய்ப்புக்காக அடித்துக்கொள்வதும், கோஷ்டி பிரிவதும், சீட் கிடைக்காத விரக்தியில் மாற்றுக் கட்சிக்குத் தாவுவதுமான அரசியல் கூத்துகள் அத்தனை கட்சிகளிலும் அரங்கேறிவருகின்றன. அனைத்தையும் கடந்து, அரியணையில் அமரப்போவது யார்?

கட்சித்தாவல்... உட்கட்சிப்பூசல்... உத்தரகாண்ட் அரசியல் அதகளம்!

கலகலத்திருக்கும் காங்கிரஸ் கூடாரம்!

உத்தரகாண்ட்டில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் முதல்வராக இருந்த ஹரீஷ் ராவத்துக்கும், உத்தரகாண்ட் மாநிலப் பொறுப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளருமான தேவேந்திர யாதவுக்கும் இடையே நிலவிவந்த நீண்டகாலப் பனிப்போர் கடந்த டிசம்பர் மாதத்தில் முற்றியது. ஹரீஷ் ராவத் தனது ட்விட்டரில், ``எதிர்வரும் தேர்தல் போர்க்களத்தில், முதலைகள் நிறைந்த கடலில் நீந்துவதுபோல் நீந்த வேண்டும். ஆனால், மாநில அமைப்பு சரியான ஒத்துழைப்பு வழங்காமல் எதிர்மறையாகச் செயல்படுவதால், என் கை கால்கள் கட்டப்பட்டிருக்கின்றன” என வெளிப்படையாகவே மாநில காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த புகைச்சலை வெளிப்படுத்தினார்.

கட்சித்தாவல்... உட்கட்சிப்பூசல்... உத்தரகாண்ட் அரசியல் அதகளம்!

அதேசமயம், முதல்வர் வேட்பாளர் யார் என்ற போட்டியில் உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியாலுக்கும், ஹரீஷ் ராவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருந்தது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த காங்கிரஸ் தலைமை, ஹரீஷ் ராவத்தை நேரில் அழைத்து முதல்வர் வேட்பாளராக அறிவித்து, சமாதானம் செய்தது. அடுத்த பிரச்னையாக உத்தரகாண்ட் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிஷோர் உபாத்யாயா, பா.ஜ.க-வுடன் கள்ளக்கூட்டு வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த ஜனவரி 12-ம் தேதி, உபாத்யாயா வகித்துவந்த தேர்தல் குழு, உயர் மட்டக்குழு என அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவரை காங்கிரஸ் தலைமை அதிரடியாக நீக்கியது. காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டதும், தனது ஆதரவாளர்களோடு பா.ஜ.க கூடாரத்துக்குத் தாவினார் உபாத்யாயா.

இன்னொரு புறம், தற்போது உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் மகளிரணித் தலைவரும், நைனிடால் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சரிதா ஆா்யா, தனது தொகுதியில் மீண்டும் போட்டியிட காங்கிரஸ் கட்சி சீட் வழங்காததால் கட்சியிலிருந்து விலகி, பாஜக-வில் இணைந்திருக்கிறார். தொடர்ச்சியாகக் கட்சிக்குள் நிலவிவரும் அரசியல் குழப்பங்கள் காங்கிரஸுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றன.

ஹரக் சிங் ராவத், அனுகீர்த்தி கசன்
ஹரக் சிங் ராவத், அனுகீர்த்தி கசன்

அதிருப்தித் தலைவர்களால் அல்லாடும் பா.ஜ.க!

காங்கிரஸின் நிலை இப்படியிருக்க, ஆளும் பா.ஜ.க-வின் நிலையோ இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் திரிவேந்திர சிங் ராவத், பிறகு தீரத் சிங் ராவத் தற்போது புஷ்கர் சிங் தாமி என அடுத்தடுத்து மாற்றப்பட்ட முதல்வர்களால், மாநில பா.ஜ.க-வில் ஒரு நிலையற்ற தன்மையே நிலவுகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் பா.ஜ.க அமைச்சராக இருந்த ஹரக் சிங் ராவத், தனது மருமகள் அனுகீர்த்தி கசன் உள்ளிட்ட குடும்பத்தினருக்குத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்க, அவருடன் மோதலில் இருந்துவந்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, சீட் வழங்க மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

மறுப்பு தெரிவித்ததோடு நிற்காமல், ஹரக் சிங் ராவத் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டி, அவர் வகித்துவந்த அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அதிரடியாக நீக்கினார். காங்கிரஸிலிருந்து பா.ஜ.க-வுக்கு வந்த ஹரக் சிங் ராவத், மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.

கடந்த அக்டோபர் மாதம் பா.ஜ.க மூத்த தலைவரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான யஷ்பால் ஆர்யா, தனது மகன் எம்.எல்.ஏ சஞ்சீவ் ஆர்யாவுடன் பா.ஜ.க-விலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்திருந்தார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்தடுத்த பா.ஜ.க தலைவர்கள் காங்கிரஸ் நோக்கிப் படையெடுத்து வருவது, தேர்தல் சூழ்நிலையில் பா.ஜ.க-வுக்குப் பெருத்த பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. காங்கிரஸிலிருந்து தாவிவந்த பலருக்கும் சீட் கொடுக்கப்பட்டதால், கட்சியில் பல காலமாக இருந்துவரும் பா.ஜ.க-வினரின் அதிருப்தி அலை கட்சித் தலைமையைக் கவலையடையச் செய்திருக்கிறது. அதேசமயம், மறைந்த ராணுவத் தளபதி பிபின் ராவத்தின் சகோதரர் கர்னல் விஜய் ராவத் பா.ஜ.க-வில் இணைந்திருப்பது, மக்கள் மத்தியில் அக்கட்சிக்கு பாசிடிவ் இமேஜை அதிகமாக்கும் என்று நம்புகிறது பா.ஜ.க.

சரிதா ஆர்யா
சரிதா ஆர்யா

கருத்துக்கணிப்புகள் சொல்வது என்ன?

காங்கிரஸ் - பா.ஜ.க இரு தரப்பிலும் சரிக்குச் சமமாக, தேர்தல் நேர அரசியல் குழப்பங்கள் நடைபெற்றுவருவதால், வெற்றி வாய்ப்பு யாருக்கு எனும் கருத்துக்கணிப்பில் இழுபறியே நீடித்துவருகிறது. சில கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க வெற்றிபெறும் என்றும், சில கருத்துக்கணிப்புகள் முதல்வர் ரேஸில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் ஹரீஷ் ராவத் முந்துவதாகவும் தெரிவிக்கின்றன. ஆனால் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் இரு கட்சிகளுக்குமே குறைந்த அளவு வாக்கு வித்தியாசமே காணப்படுகிறது. முதன்முறையாக உத்தரகாண்ட் தேர்தலில் பங்கெடுக்கும் ஆம் ஆத்மி கட்சி, 13 சதவிகித வாக்குகள் வரை பெற்று, பல தொகுதிகளில் வாக்குகளைச் சிதறவைத்து, வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்கிறார்கள்.

புஷ்கர் சிங் தாமி - விஜய் ராவத்
புஷ்கர் சிங் தாமி - விஜய் ராவத்

தற்போதைய கள நிலவரம்தான் என்ன?

கொரோனா இரண்டாம் அலை உச்சத்திலிருந்தபோது, ஹரித்வாரில் சுமார் 70 லட்சம் பேர் கூடிய கும்பமேளா நிகழ்ச்சியை அனுமதித்தது பா.ஜ.க அரசு. அதனால், கொரோனாவைச் சரியாகக் கையாளவில்லை என்கிற குற்றச்சாட்டும் மாநில அரசுக்குத் தலைவலியாக அமைந்திருக்கிறது. வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரச் சிக்கல் ஆகியவையும் அங்கே பிரதான பிரச்னைகளாக இருக்கின்றன. உத்தரப்பிரதேசத்திலிருந்து பிரிந்த மாநிலம் என்பதால், உத்தரகாண்ட்டிலும் மத அரசியலைக் கையிலெடுத்திருக்கிறது பா.ஜ.க. உத்தரகாண்ட்டில், சுமார் 60 சதவிகிதம் பேர் ஆதிக்கச் சாதியினர். இவர்களில் பெரும்பாலானவர்கள் எந்தச் சூழலிலும் பா.ஜ.க-வின் பக்கமே நிற்பார்கள் என்று சொல்லப்படுகிறது. புதிய கட்சிக்கு வாக்களிக்கலாம் என்ற மனநிலையில் இருப்பவர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டிருக்கும் ஆம் ஆத்மியால், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். உத்தரகாண்ட்டைப் பொறுத்தவரை, கடந்தகாலங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் அதிகம் வெற்றிபெறும் மாநிலமாக இருந்துவருகிறது. ஒருவேளை தொங்கு சட்டசபை ஏற்பட்டால், சுயேச்சை வேட்பாளர்களின் உதவியோடு ஆட்சியமைக்கும் சூழல் ஏற்படும்.

உ.பி-யைப்போலவே உத்தரகாண்ட்டின் முடிவுகளும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், இரு கட்சிகளுமே கடைசிகட்டப் பரபரப்பில் இருக்கின்றன. ஆளும் பா.ஜ.க தொடருமா அல்லது காங்கிரஸ் மீண்டும் கோட்டையைப் பிடிக்குமா என்ற கேள்விக்கான விடை, மார்ச் 10-ம் தேதி தெரிந்துவிடும்!