Published:Updated:

டஃப் கொடுக்கும் அகிலேஷ்... யோகிக்காகக் களமிறங்கிய அமித் ஷா... உ.பி நாற்காலி யாருக்கு?

யோகி, அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
யோகி, அமித் ஷா

‘பா.ஜ.க வெற்றிபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். ஆனால், பா.ஜ.க-வே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்’ இதுவரை வந்துள்ள கருத்துக் கணிப்புகள் அனைத்தும் இப்படித்தான் சொல்கின்றன

டஃப் கொடுக்கும் அகிலேஷ்... யோகிக்காகக் களமிறங்கிய அமித் ஷா... உ.பி நாற்காலி யாருக்கு?

‘பா.ஜ.க வெற்றிபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். ஆனால், பா.ஜ.க-வே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்’ இதுவரை வந்துள்ள கருத்துக் கணிப்புகள் அனைத்தும் இப்படித்தான் சொல்கின்றன

Published:Updated:
யோகி, அமித் ஷா
பிரீமியம் ஸ்டோரி
யோகி, அமித் ஷா

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் களத்தில், பா.ஜ.க-வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையிலான இருமுனைப் போட்டி, நாளுக்கு நாள் கூர்மையடைந்துகொண்டேவருகிறது. ஆளும் யோகி ஆதித்யநாத்துக்குக் கடுமையான போட்டியாகக் களத்தில் நிற்கிறார் அகிலேஷ் யாதவ். எப்படிப் பார்த்தாலும் முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றுவது இருவருக்குமே எளிமையாக இருக்கப்போவதில்லை என்கிறது உ.பி நிலவரம். என்ன நடக்கிறது களத்தில்?

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில், இந்தியாவின் மொத்த கவனத்தையும் ஈர்த்திருப்பது உ.பிதான். இங்கு கிடைக்கும் வெற்றியைப் பொறுத்தே, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வின் வெற்றி வாய்ப்பு இருக்கப்போகிறது என்பதுதான் அதற்கான காரணம். தேர்தலுக்கு ஒரு வாரமே இருக்கும் நிலையில், அங்கு நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்துவருகிறது. நாளொரு கட்சித்தாவல் செய்தியும், பொழுதொரு பரபர ஸ்டேட்மென்ட்டும் எனக் களைகட்டுகிறது உ.பி. யோகி ஆதித்யநாத் அமைச்சரவையிலிருந்து ஓ.பி.சி சமூகத்தில் செல்வாக்குமிக்க மூன்று அமைச்சர்களும் சில எம்.எல்.ஏ-க்களும் சமாஜ்வாடி கட்சிக்குத் தாவியதால் பா.ஜ.க-வுக்குப் பேரதிர்ச்சி. அகிலேஷ் யாதவின் தம்பி மனைவி அபர்ணா யாதவ் பா.ஜ.க-வுக்குத் தாவியதால், சமாஜ்வாடி கட்சிக்கு ஷாக் எனப் பரபரப்பு தொடர்கிறது.

டஃப் கொடுக்கும் அகிலேஷ்... யோகிக்காகக் களமிறங்கிய அமித் ஷா... உ.பி நாற்காலி யாருக்கு?

‘ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களாக இருந்தபோதிலும், தங்களுக்கு எந்த மரியாதையும் அதிகாரமும் இல்லை’ என்று ஓ.பி.சி சமூகங்களைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் சுமார் 100 பேர் சட்டமன்றத்துக்குள் ஓராண்டுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். அதன் தொடர்ச்சிதான், தேர்தல் நேரத்தில் நடைபெற்ற கட்சித்தாவல்கள். இது, பா.ஜ.க-வுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்பட்ட நிலையில், பா.ஜ.க-வின் பலவீனங்களைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்யும் வேலைகளில் இறங்கினார் அமித் ஷா. அதில் முக்கியமானது ஜாட் தலைவர்களுடனான சந்திப்பு. வேளாண் சட்டங்களுக்கு எதிராக மேற்கு உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் ஜாட் சமூகத்தினர். பா.ஜ.க-வின்மீது கோபத்திலிருக்கும் ஜாட் சமூகத்தின் தலைவர்கள் சிலரை, அமித் ஷா சந்தித்துள்ளார். அப்போது, ‘650 ஆண்டுகளுக்கு முன்பு முகலாயர்களை எதிர்த்துப் போராடியவர்கள் ஜாட் சமூகத்தினர். நாம் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்’ என்று பேசியிருக்கிறார் அமித் ஷா. ஆனால், மத்திய பா.ஜ.க அரசு அளித்த வாக்குறுதியை நம்பி விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றோம். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமாக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், பா.ஜ.க அரசு துரோகமிழைத்துவிட்டது என்று ஜாட் சமூகத்தினர் மத்தியில் செல்வாக்குள்ள பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் குற்றம்சாட்டியுள்ளார். அவரது அழைப்பின் பேரில் ஜனவரி 31 அன்று விவசாயிகள் ‘துரோக நாள்’ என அனுசரித்தார்கள். எனவே அமித் ஷாவின் பேச்சும் முயற்ச்யும் எந்தளவுக்கு எடுபடும் என்பது கேள்விக்குறிதான்.

`வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் மரணமடைந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்’ என்பது போன்ற வாக்குறுதிகளால், மேற்கு உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. மேலும், ராஷ்டிரிய லோக் தளம் மற்றும் சில ஓ.பி.சி கட்சிகளுடனான கூட்டணி சமாஜ்வாடி கட்சிக்குக் கூடுதல் பலம். மேற்கு உ.பி-யில் பரவலாக இருக்கும் முஸ்லிம்கள் மத்தியிலும் சமாஜ்வாடி கட்சிக்குக் கணிசமான வாக்குவங்கி உண்டு.

தங்களின் ‘உயர்சாதி’ வாக்குவங்கி உறுதியாக இருக்கிற நிலையில், ஓ.பி.சி மற்றும் தலித் வாக்குகளைக் குறிவைத்துக் காய்நகர்த்திவருகிறது பா.ஜ.க. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதும், தேர்தல் சமயத்தில் காசி, மதுரா பிரச்னையைக் கையிலெடுத்ததும் பா.ஜ.க-வுக்குச் சாதமாக அமையும் என்று கருது கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தலித் வாக்குவங்கியைக் குறிவைத்து, கோரக்பூரில் ஒரு தலித் வீட்டில் முதல்வர் யோகி உணவருந்தினார். ‘தலித் மகளை நள்ளிரவில் எரிக்கச் சொல்லிவிட்டு, அவர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இப்போது தலித் வீட்டில் சாப்பிடுகிறார்’ என்று ஹத்ராஸ் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி எதிர்த்தரப்பு கொந்தளித்தது. இப்படியாக, அனல்பரக்கிறது வாக்கு வேட்டைக்கான முஸ்தீபுகள்!

டஃப் கொடுக்கும் அகிலேஷ்... யோகிக்காகக் களமிறங்கிய அமித் ஷா... உ.பி நாற்காலி யாருக்கு?

‘பா.ஜ.க வெற்றிபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். ஆனால், பா.ஜ.க-வே மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்’ இதுவரை வந்துள்ள கருத்துக் கணிப்புகள் அனைத்தும் இப்படித்தான் சொல்கின்றன. சமாஜ்வாடி கட்சி நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையிலிருக்கும் அகிலேஷ் யாதவ், கருத்துக் கணிப்புகளைச் சாடுகிறார். “இது Opinion Poll அல்ல... Opium Poll” என்று அவர் விமர்சித்துள்ளார். 21 சதவிகிதம் தலித் வாக்கு வங்கியைக்கொண்ட உ.பி-யில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிதான் வாக்குகளைப் பிரிக்கும் வேலையைச் செய்யும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

உ.பி-யில் சுரத்தே இல்லாமலிருக்கும் காங்கிரஸ் கட்சியின் புதிய முகமாக மாறியிருக்கிறார் பிரியங்கா காந்தி. பெண்களுக்கு இலவச பஸ் பாஸ், மாணவிகளுக்கு இலவச லேட்டாப் எனத் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் காங்கிரஸ் வியூகம் அமைத்துள்ளது. ஆனாலும், 2017-ல் வெறும் 7 இடங்களைப் பெற்ற காங்கிரஸின் நிலையில், இம்முறையும் பெரிய மாற்றம் இருக்காது என்றே கணிக்கப்படுகிறது.

அயோத்தியிலும் கோரக்பூரிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா, மதுராவில் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தார். அப்போது, “உ.பி சட்டமன்றத் தேர்தல் எம்.எல்.ஏ-க்களையோ, மந்திரிகளையோ, முதல்வரையோ தேர்வுசெய்யும் தேர்தல் மட்டுமல்ல... இந்தத் தேர்தல்தான் நாட்டின் தலைவிதியையே தீர்மானிக்கப்போகிறது” என்றார் அமித் ஷா. 2024-ல் மத்தியில் ஹாட்ரிக் அடிக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இருக்கும் பா.ஜ.க-வின் தலைவிதியைத் தீர்மானிக்கப்போகும் தேர்தல் என்பதால், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள அரசியல் பார்வையாளர்கள் கவனம் உ.பி-யில்தான் குவிந்துள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism