Published:Updated:

`ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்!’ - உ.பி துப்பாக்கிச் சூட்டில் வெடித்த சர்ச்சை #CAA

காவல்துறை அதிகாரி ஓ.பி. சிங்
காவல்துறை அதிகாரி ஓ.பி. சிங் ( twitter )

போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது தொடர்பாகக் காவல்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள முரண்பாடான தகவல், சமூக ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக உத்தரப்பிரதேச மாநிலத்தில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. போராட்டக்களத்தில் பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், பலர் துப்பாக்கிச் சூடு காயங்களுடன் இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில், உ.பி காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டக்களம்
போராட்டக்களம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு போராட்டம் தீவிரக் கட்டத்தை எட்டியது. போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை மற்றும் கலவரங்களில் பலர் பலத்த காயமடைந்தனர். பதினைந்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இதுகுறித்து மாநிலத் தலைமை காவல் அதிகாரி ஓ.பி.சிங்கிடம் கேள்வி எழுப்பியபோது ``போராட்டக்காரர்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

ஆனால், உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னூர் நகரின் காவல்அதிகாரி, நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இறந்துள்ளதாக என்டிடிவி ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகப் பேசிய பிஜ்னூர் காவல் அதிகாரி சஞ்சீவ் தியாகி, ``போராட்டக்களத்தில், எங்கள் கான்ஸ்டபிள் ஒருவரின் துப்பாக்கியைப் போராட்டக்காரர்கள் பறித்தனர். அதைத் திரும்பப்பெற முயற்சி செய்தபோது போராட்டத்தில் இருந்தவர்களில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். தற்காப்புக்காக போராட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினார் காவலர். இதில், சுலைமான் என்பவர் இறந்தார். மேலும், அனிஷ் என்ற போராட்டக்காரரும் இறந்துள்ளார்” என்று கூறியுள்ளார். சஞ்ஜீவ் மற்றும் ஓ.பி.சிங் ஆகிய இருவரும் கூறியுள்ள முரண்பட்ட கருத்துகளால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

போராட்டக்களம்
போராட்டக்களம்

சுலைமானின் குடும்பத்தினர் என்டிடிவி ஊடகத்திடம், ``சுலைமான், தர்காவில் தொழுகை நடத்தச் சென்றிருந்தார். வீட்டுக்கு அருகில் உள்ள மசூதிக்குச் செல்லாமல் வேறொரு மசூதிக்குச் சென்றுள்ளார். தொழுகை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. வீட்டுக்கு வெளியில் காவல்துறையினர் லத்தியால் தாக்கிக் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசிக்கொண்டிருந்தனர்.

இதற்கிடையே, அவரைப் பிடித்துச் சென்று சுட்டுக் கொன்றனர். சுலைமான் ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தார். அவருக்கும் போராட்டத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளனர். மேலும், இதுதொடர்பாக காவல்துறையினர் தங்களை மிரட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு