Published:Updated:

`உ.பி, பீகாரில்கூட நடப்பதில்லை... ஆனா தமிழகத்தில் நடக்கிறதே?’- ஜெயக்குமாரை சீண்டும் வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்தியாவிலேயே அதிகமான நபர்களைத் தமிழகத்தில்தான் கைது செய்திருக்கிறார்கள்.

``தமிழகத்தை மையமாக வைத்துதான் பல தீவிரவாத அமைப்புகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஏன், இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்தபோதுகூட என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழகத்தில் வந்துதான் கைது செய்தார்கள். நாங்கள் சொல்வதை அரசியலாகப் பார்க்காமல் களநிலவரங்களைப் புரிந்துகொண்டு பேசுங்கள்" என அமைச்சர் ஜெயக்குமாருக்குப் பதிலடி கொடுத்திருக்கிறார் பா.ஜ.க பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன்.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

அண்மையில் அரியலூரில் மாவட்டத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ``தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. இதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்திலிருந்தே இதை நான் சொல்லி வருகிறேன்" என்று அ.தி.மு.க அரசு மீது அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்தார்.

வானதி சீனிவாசன், பா.ஜ.க
வானதி சீனிவாசன், பா.ஜ.க

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ``பா.ஜ.க தலைவர் பதவி கிடைக்காத விரக்தியால் தமிழக அரசைப் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சிக்கிறார். நல்லாட்சி நடப்பதாகத் தமிழக அரசைப் பாராட்டிய மத்திய அரசைப் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சிக்கிறாரா? மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழகத்துக்குப் பொன்.ராதாகிருஷ்ணன் என்ன செய்தார்?" என்று காட்டமாகப் பேசினார்.

இதுகுறித்து தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனிடம் தொடர்புகொண்டு பேசினோம். ``அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களாகவே மத பயங்கரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. இவற்றை யாராலும் மறுக்க முடியாது.

பொன்.ராதாகிருஷணன்
பொன்.ராதாகிருஷணன்

சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தாலும்கூட ஒரு சில தீவிரவாத குழுக்கள் தமிழகத்தை மையமாகக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்தபோது கூட என்.ஐ.ஏ அதிகாரிகள் தமிழகத்தில் வந்துதான் அந்த பயங்கரவாதிகளைக் கைது செய்து அழைத்துச் சென்றார்கள். ஆக வெறும் சட்டம் ஒழுங்கை அன்றாடம் நடக்கும் நிகழ்வாகப் பார்க்காமல் ஒரு சில தீவிரவாத, மத பயங்கரவாத அமைப்புகளுக்குத் தமிழகம் மையக் களமாக இருக்கிறது என்பதை ஜெயகுமார் புரிந்துகொள்ள வேண்டும்.

என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்தியாவிலேயே அதிகமான நபர்களைத் தமிழகத்தில்தான் கைது செய்திருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கினால் மட்டுமே இவற்றைத் தடுக்க முடியும். இல்லையென்றால் நிலைமை கேள்விக்குறிதான். அதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் ஒரு அரசியல் கட்சிகூட கண்டிக்கவில்லை என்றால் மத பயங்கரவாதிகளுக்கு இன்னும் ஊக்கத்தைக் கொடுத்ததுபோல் ஆகிவிடும்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

கொலை செய்தவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதைப் பார்க்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு முஸ்லிம்கள் அதிகம் வாழும் உ.பி, பீகார் மாநிலங்களில்கூட இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதில்லை. ஆனால், தமிழகத்தில்தான் கோவை குண்டுவெடிப்பில் தொடங்கி எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டனர். ஏன் இன்று வரையிலும்கூட எங்களது கட்சி நிர்வாகிகளுக்கு போலீஸார் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக இது மாதிரியான படுகொலைகள் நிகழும்போது அரசியல் கட்சியினர் சொல்லும் விஷயத்தை அரசியலாகப் பார்க்காமல் ஜெயக்குமார் களநிலவரங்களைப் புரிந்துகொண்டு எதிர்வினை ஆற்ற வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு