அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

காயத்ரியைப்போல், எனக்கும் பல்வேறு சிக்கல்கள் வந்திருக்கின்றன!

வானதி சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
News
வானதி சீனிவாசன்

- உடைத்துப் பேசுகிறார் வானதி சீனிவாசன்

‘பா.ஜ.க-வில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை...’ என்ற குற்றச்சாட்டு, ஆளுநரால் சட்டமன்றத்தில் நடந்த அனல் காட்சிகள் எனத் தமிழ்நாட்டு அரசியல் தடதடக்கிறது. இந்தச் சூழலில், அனைத்துக்கும் பதில் கேட்டு பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசனை அவரது சென்னை இல்லத்தில் சந்தித்தேன்...

“ஒரு சட்டமன்ற உறுப்பினராக, சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வை எப்படிப் பார்க்கிறீர்கள்..?”

“நடந்து முடிந்த சம்பவம், வார்த்தைப்போர் என்பதையும் தாண்டி, ஆளுநர் - அரசுக்கு இடையேயான மோதல் போக்காகத்தான் இது அமைந்திருக்கிறது. முதன்முறை எம்.எல்.ஏ என்ற அடிப்படையிலும், ஒரு வழக்கறிஞர் என்ற வகையிலும் இந்த விஷயத்தை ஆர்வத்தோடு பார்த்தாலும், சட்டமன்றத்தில் மக்களுக்கான முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்க முடியாமல், இது போன்ற நிகழ்வுகளுக்கு ஒரு சாட்சியாக இருக்கிறோமோ என்று வருத்தமாக இருக்கிறது.”

காயத்ரியைப்போல், எனக்கும் பல்வேறு சிக்கல்கள் வந்திருக்கின்றன!

“பிரச்னையின் தொடக்கப்புள்ளியாக இருந்த ஆளுநரின் நடவடிக்கையை வருத்தத்தோடு பார்க்கிறீர்களா?”

‘‘இந்தக் கேள்விக்கு ‘ஆம்’ என்று நான் பதில் சொன்னால், ‘ஆளுநரின் நடவடிக்கையை வருத்தத்தோடு பார்க்கிறேன்’ என்று தலைப்பு போடுவீர்கள்... (சிரிக்கிறார்). இந்த ஆரம்பம் என்பது ‘ஏன் வந்தது, எப்படி வந்தது’ என்று பார்க்க வேண்டும். தி.மு.க கூட்டணிக் கட்சிகள் ஆளுநருக்கு எதிராக கோஷமிடும்போது பேரவைத் தலைவர் வேடிக்கை பார்ப்பதும், ஆளுநர் உரை முடிந்தவுடனே அரசு, தீர்மானத்தைக் கொண்டுவருவதும் சரியா... ஆளுநரின் திருத்தங்களை ஏற்றுக்கொண்டு இறுதியாக முடிவெடுப்பதை விட்டுவிட்டு, அறிக்கை அனுப்பி அவரிடம் கையெழுத்து வாங்கிய பிறகு ‘பிரின்ட்டுக்குக் கொடுத்துவிட்டோம், அதைத்தான் படிக்க வேண்டும்’ என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம்?”

“ ‘பா.ஜ.க ஆளாத மாநிலங்களில், ஆளுநர்களின் இது போன்ற செயல்பாடுகள் மட்டும் நியாயமானவையா’ என்றும் எதிர்த்தரப்பில் கேட்கிறார்களே?”

“எப்போதெல்லாம் ஆளுங்கட்சிக்கு விரோதமாக அல்லது அவர்களுக்கு இணக்கமாக ஆளுநர் இல்லையோ... அப்போதெல்லாம் இவர்கள் ‘ஆட்டுக்கு தாடி...’ என்கிற பழைய கோஷத்தை எடுத்துக்கொள்வார்கள். அடிப்படை அதிகார மையங்களாக இருக்கக்கூடிய நிதி, நீதி, நிர்வாகம் என்கிற மூன்றுக்கும் ‘சமமான அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும்’ என்று டாக்டர் அம்பேத்கர், ஒரு நெகிழ்வுத் தன்மையோடு நம் அரசியல் சட்டத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதை தி.மு.க உணர்ந்துகொள்ள வேண்டும்!”

“ஆனால், அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பெயரைச் சொல்லவே ஆளுநர் மறுக்கிறாரே?”

“ஆளுநர் ஏன் அப்படிச் செய்தார் என்பதற்கான விளக்கம் சொல்லும் ஆளுநர் தரப்பின் பிரதிநிதியாக என்னைப் பார்க்க முடியாது. அதேசமயம், ஆளுநர் தரப்பில் பேசுவதற்கு அதிகாரம் பெற்ற நபர்கள் யாரேனும் இருக்கிறார்களா... அந்தப் பக்கம் என்ன நடக்கிறது என்பதாவது நமக்குத் தெரியுமா... ஏனென்றால், அரசியலமைப்புச் சட்டத்துக்கென்று அப்படியொரு வரைமுறை இருக்கிறது. இதை நாம் எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்?”

“அப்படியென்றால், ஆளுநரும் தன்னை விமர்சிக்காத அளவுக்கு நடந்துகொள்வதுதானே சரியானதாக இருக்கும். ஆனால், தமிழக ஆளுநர் தீவிர அரசியல் பேசுகிறாரே?”

“ஏன் ஆளுநர் அரசியல் பேசக் கூடாது... அவர் அப்படிப் பேசுகிறார் என்றால், அதற்கான பதிலை எடுத்துவையுங்கள். திராவிடம், மொழி போன்றவையெல்லாம் அரசியல்வாதிகளுக்கு மட்டும் சொந்தமானதா என்ன... ஆளுநர் சொல்லும் கருத்து பிடித்திருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள்... இல்லையென்றால் புறம் தள்ளுங்கள். தமிழகத்தில், பெண் போலீஸுக்கே பாதுகாப்பில்லை. அரசு நிர்வாகத்தின் பலவீனத்தை, ஆளுநர் விஷயத்தைக் கொண்டு மடைமாற்றாதீர்கள்.”

“ `தி.மு.க அரசில், பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்கிறீர்கள். ஆனால், ‘தமிழக பா.ஜ.க-வில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை’ என்கிறாரே காயத்ரி?”

“காயத்ரி, கொஞ்சம் உணர்ச்சிவசப்படக்கூடிய, தவறு என்றால் உடனடியாகச் சொல்லக்கூடிய தைரியம் மிகுந்த பெண்மணி. ஆனால், கட்சிக்கு என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. உங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு, கட்சிக்குள் இருக்கக்கூடிய அமைப்புரீதியான விஷயத்தைப் பின்பற்றித்தான் நியாயம் பெற வேண்டும். அதை விட்டுவிட்டு தலைவர்களைப் பொதுவெளியில் விமர்சிப்பதன் மூலமாக, பிரச்னையை வெளியே கொண்டுவரலாமே தவிர, நீதி கிடைக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.”

“கட்சிக்குள் பலமுறை அவர் தரப்பைச் சொல்வதற்கு முயன்று, ஏதும் நடக்காததால்தானே பொதுவெளியில் பேசுகிறார்?”

“இது எல்லாக் கட்சிகளிலும், சமுதாயத்திலும், துறைகளிலும் இருக்கக்கூடிய பிரச்னைதான். இதைப் புரிந்துகொண்டு பிரச்னைகளை எப்படி லாகவமாக, தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாம்தான் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கும் இது போன்ற பல்வேறு சிக்கல்கள் வந்திருக்கின்றன. அதையெல்லாம் பொறுமையாகவும், சட்டரீதியாகவும் தகர்த்தெறிந்திருக்கிறேன். அதனால் அந்த நம்பிக்கையைவிட்டு வெளியே செல்லக் கூடாது.”

‘‘பத்திரிகையாளர் சந்திப்பைச் சிறப்பாக அணுகக்கூடியவர் நீங்கள்... ஒரு அக்காவாக அண்ணாமலைக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’

“நிச்சயம் ஊடகத்தின் மூலம் சொல்ல மாட்டேன். தனிப்பட்ட முறையில் சொல்வேன்!”