Published:Updated:

புதுக்கோட்டை: `நடிகர் விவேக்குக்கு நேர்ந்ததைத் தடுப்பூசியுடன் இணைக்காதீர்கள்! - அமைச்சர் விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

`கொரோனோ தடுப்பூசியால் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை என்பதைத் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். அரசுத்துறை, மருந்து, மருத்துவர்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கை வைப்பது அவசியம். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’ என்கிறார் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் உட்பட அ.தி.மு.க வேட்பாளர்கள் பார்வையிட்டனர்.

பின்னர், அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம், "சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக்கின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியளிக்கிறது. மரங்களை நடுவதில் அக்கறை காட்டியவர். அவருக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் விவேக் தடுப்பூசி எடுத்தது குறித்து அரசு சுகாதாரத்துறைச் செயலர் மற்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். நாளொன்றுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனோ தடுப்பூசியால் எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை என்பதைத் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம். அரசுத்துறை, மருந்து, மருத்துவர்கள் மீது பொதுமக்கள் நம்பிக்கை வைப்பது அவசியம்.

புதுக்கோட்டை: `நடிகர் விவேக்குக்கு நேர்ந்ததைத் தடுப்பூசியுடன் இணைக்காதீர்கள்! - அமைச்சர் விஜயபாஸ்கர்

அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். குறிப்பாக 45வயதுக்கும் மேற்பட்டோர் தற்போது தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம். தடுப்பூசி போட்டுக்கொண்டதையடுத்து விவேக்குக்கு நேர்ந்ததைத் தடுப்பூசியுடன் இணைக்க வேண்டாம். அதற்கான விளக்கத்தை மருத்துவர்கள் கொடுத்திருக்கின்றனர். கொரோனா தொடர்பான ஆய்வுப் பணியில் ஈடுபடுவதில் நான் தயாராக உள்ளேன்.

ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளால் செய்ய முடியாமல் தவிக்கிறேன். ஆனாலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுடன் நான் தொலைப்பேசியில் பேசி தமிழகத்தின் நிலையை எடுத்துக் கூறியதுடன் ரெம்டெசிவிர் மருந்து தங்கு தடையின்றி தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று கேட்டேன். தமிழகத்தில் சுகாதார கட்டமைப்புகள் வலுவாக இருக்கிறது. ஆனாலும், பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் அலட்சியமாக இருந்தால், வரக்கூடிய 3 வாரங்கள் நமக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துவிடும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு