Published:Updated:

`காங்கிரஸ் 30%தான்...பா.ஜ.கதான் 70%' - வைகோ சொன்ன `அட்டாக்' கணக்கு

மலையரசு
கே.ஜெரோம்

`காங்கிரஸ் தயவில் நான் எம்.பி-யாகவில்லை. ஒரு இனத்தை அழித்த பாவிகள் காங்கிரஸ்' என்று பதில் கொடுக்க, மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனோ வைகோவை `நம்பர் 1 துரோகி; நன்றி மறந்தவர்' என்று குறிப்பிட்டு பேசினார்.

வைகோ
வைகோ

தமிழக அரசியலில் தற்போதையை ஹாட் டாப்பிக் என்றால் அது வைகோ - காங்கிரஸ் இடையேயான மோதல்தான். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய வைகோ பாஜகவுடன் சேர்த்து காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் நடவடிக்கை, எமெர்ஜென்சி காலத்தில் இந்திராவின் நடவடிக்கை குறித்து பேசினார். இது காங்கிரஸார் மத்திய சலசலப்பை ஏற்படுத்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வைகோவுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு, `காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் தயவில்தான் வைகோ எம்.பி-யாகி இருக்கிறார். அதை நினைவில் கொள்ள வேண்டும்' என்று கூறினார்.

வைகோ
வைகோ

இதற்கு வைகோ, `காங்கிரஸ் தயவில் நான் எம்.பி-யாக வில்லை. ஒரு இனத்தை அழித்த பாவிகள் காங்கிரஸ்' என்று பதில் கொடுக்க, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனோ வைகோவை `நம்பர் 1 துரோகி; நன்றி மறந்தவர்' என்று குறிப்பிட்டு பேசினார். இப்படி கடுமையான வார்த்தை போர் நடக்க இன்று சென்னையில் உள்ள ம.தி.மு.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் வைகோ. அப்போது,``சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது குறித்து கலந்தாலோசிக்கலாமா என்பதைக் கூட பிரதமர் மோடி கேட்கவில்லை. ஆனால் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது குறித்தோ, பொது சிவில் சட்டம் குறித்தோ கேள்வியே எழவில்லை. இந்தியாவின் நிலையை உணர்ந்துகொண்டு, மதச்சார்பினைமையைப் பாதுகாத்தால்தான் மக்களாட்சித் தத்துவம் நிலைக்கும் என்பதை உணர்ந்துகொண்ட தலைவராக அவர் இருந்தார். அவர்தான் உண்மையான ஜனநாயகவாதி.

கடந்த 4-ம் தேதி இரவு ஃபரூக் அப்துல்லாவிடம் நான் பேசினேன். அப்போது, காஷ்மீரில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க மசோதா கொண்டு வருவது குறித்த செய்தி பற்றிக் கேட்டேன். அதற்கு, தான் மறுநாள் இரவு டெல்லி வருவதாகவும், என்னைச் சந்திப்பதாகவும் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். ஆனால், மறுநாள் காலையிலேயே ஜனநாயகத்திற்குக் கொள்ளி வைக்கும் இப்படி ஒரு வேலையைச் செய்வார்கள் என யாருக்கும் தெரியாது. பாஜகவில் இருக்கும் நிறைய பேருக்கே இது தெரியாது. அதன்பிறகுதான் தான் வீட்டுச் சிறையில் வைத்திருந்ததை செய்தியாளர்களைச் சந்தித்து சொன்னார் ஃபரூக் அப்துல்லா. இதேபோல தான் ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி போன்றவர்களையும் வீட்டு சிறையில் உள்ளார்கள்" என்று பேசியவரிடம், ``மாநிலங்களவையில் உங்கள் பேச்சின் பெரும்பகுதி காங்கிரஸை சாடியே இருக்கிறது என கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். உங்களது பேச்சால் கூட்டணியில் விரிசல் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?'' எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

எழுந்துச் சென்ற வைகோ
எழுந்துச் சென்ற வைகோ

அதற்கு, ``நீங்கள் எந்தப் பத்திரிக்கை எனச் சொல்லுங்கள். என்ன பத்திரிகை என்று கூறினால்தான் பதில்'' எனக் கூறினார் வைகோ. தொடர்ந்து அதற்கு மற்ற பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அவர்களிடமும் `நீங்கள் எந்தப் பத்திரிகை, தொலைக்காட்சி எனச் சொல்லுங்கள்' என தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார். மேலும், ``காங்கிரஸை தாக்கியதை விட பா.ஜ.க-வை தான் கடுமையாக தாக்கியிருக்கிறேன். எனது பேச்சில் 30 சதவிகிதம் காங்கிரஸை தாக்கினேன் என்றால், 70 சதவிகிதம் பா.ஜ.க-வை லெஃப்ட், ரைட், சென்டர் என தாக்கியிருக்கிறேன். நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்.. இந்தியாவை துண்டுதுண்டாக பிரிக்கிறீர்கள் என பாஜகவை பார்த்து கடுமையாக விமர்சித்து இருக்கிறேன்" எனக் கூறியதுடன் பாதியிலேயே பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பினார் வைகோ.