Published:Updated:

``மொழித் திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும்!" - வைகோ காட்டம்

``அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்கி, நாட்டின் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழிகள் ஆக்கிட வேண்டும்.'' - வைகோ

``மொழித் திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும்!" - வைகோ காட்டம்

``அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்கி, நாட்டின் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழிகள் ஆக்கிட வேண்டும்.'' - வைகோ

Published:Updated:

ஆட்சிமொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை குறித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், ``இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மொத்தம் 112 பரிந்துரைகள் கொண்ட 11-வது அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கிறது. ஆட்சி மொழி எனும் பெயரால் முழுக்க முழுக்க இந்தி மொழியை வலிந்து திணிப்பதற்கான பரிந்துரைகளை அளித்திருப்பது, இந்தி பேசாத மக்கள்மீது தொடுக்கப்பட்டிருக்கும் போர் என்றே கருத வேண்டியுள்ளது.

ஏனெனில் கடந்த செப்டம்பர் 14-ம் தேதி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘இந்தி நாள்’ விழாவில் உரையாற்றியபோது, `ஆங்கிலத்தை அறவே அகற்றிவிட்டு, இந்தி மொழியை அனைத்து நிலைகளிலும் கட்டாயமாக்குவதுதான் பா.ஜ.க அரசின் நோக்கம்' என்று அறிவித்தார். உள்துறை அமைச்சரின் இந்தித் திணிப்புத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் அக்டோபர் 6-ம் நாள் சென்னையில் என் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பாஜக - அமித் ஷா, மோடி
பாஜக - அமித் ஷா, மோடி

ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் துணைத் தலைவரான ஒடிசா பிஜூ ஜனதா தளத்தைச் சேர்ந்த பார்த்ருஹரிமஹ்தப், குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்டிருக்கும் பரிந்துரை அறிக்கையில் இடம் பெற்றுள்ளவை குறித்து விளக்கியிருக்கிறார். அதில், `தேசிய கல்விக் கொள்கை 2020-ன் படி, கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழியாக இந்தி அல்லது மாநில மொழி இருக்க வேண்டும்' என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் பிரிவு ‘ஏ’ மாநிலங்களில் இந்தி மொழிக்கு முதன்மையான இடம் அளிக்கப்பட வேண்டும். அது நூறு விழுக்காடு பின்பற்றப்படவும் வேண்டும். இந்தி பேசக்கூடிய மாநிலங்களில் இருக்கும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மத்திய பல்கலைக் கழகங்கள், கேந்திர வித்யாலயா, நவோதயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில், பயிற்று மொழியாக உள்ள ஆங்கிலத்தை அகற்றிவிட்டு இந்தியைப் பயன்படுத்த வேண்டும். இந்தி மொழியில்தான் பாடத்திட்டம் இருக்க வேண்டும். உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை இந்தியில் மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டும்.

``மொழித் திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும்!" - வைகோ காட்டம்

மேற்கண்ட பரிந்துரைகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆட்சி மொழிக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் 37-வது கூட்டத்துக்குப் பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே பண்பாடு என்று கூப்பாடு போட்டு வரும் இந்துத்துவ சக்திகள், இந்து ராஷ்டிரத்தை கட்டி எழுப்பி, 'ஒரே மொழி; அது சம்ஸ்கிருதம் அல்லது அதன் சாயலில் உள்ள இந்தி மொழி' என்பதை நிலைநாட்ட ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு கட்டாயமாக திணிக்க முனைந்திருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்கி, நாட்டின் ஆட்சி மொழி மற்றும் அலுவல் மொழிகள் ஆக்கிட வேண்டும். அப்போதுதான் நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்கும். இல்லையெனில் மொழித் திணிப்பால் சோவியத் யூனியன் வீழ்ந்த நிலைதான் இந்தியாவிலும் ஏற்படும். எனவே ஆட்சிமொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளை ஒன்றிய அரசு செயல்படுத்தக்கூடாது என வலியுறுத்துகிறேன்'' எனத் தெரிவித்திருக்கிறார்.