Published:Updated:

``அப்போதைய சூழல்... அப்படி பேசியிருக்கலாம்..!” - முரசொலி நில விவகாரத்தில் வைகோ

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று நான் கூறியதாக தெரிவித்திருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

வைகோ
வைகோ

இடைத்தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு மத்தியில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த `அசுரன்' படத்தைப் பார்த்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின். பார்த்ததோடு நிற்காமல் பஞ்சமி நிலம் தொடர்பாகப் படம் பேசியதற்குப் படக்குழுவினரைப் பாராட்டி ட்வீட் செய்தார். இதைத் தொடர்ந்து பா.ம.க தலைவர் ராமதாஸ், `முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலம். உடனடியாக ஸ்டாலின் உரியவர்களிடம் இடத்தை ஒப்படைக்க வேண்டும்’ எனக் கொளுத்திபோட பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

அசுரன் படத்தைப் பார்க்கும் ஸ்டாலின்
அசுரன் படத்தைப் பார்க்கும் ஸ்டாலின்

ஸ்டாலின் பதிலுக்கு முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பட்டா இடம் என்றும் அதற்கான ஆதாரமாகச் சில அரசு ஆவணங்களைப் பதிவிட்டார். ஆனால் ராமதாஸ், `வெளியிட வேண்டியது இதற்கு முந்தைய பத்திரம். அதை ஏன் வெளியிடவில்லை’ எனக் கேள்வி எழுப்பினார். பிரச்னை இப்படி போய்க்கொண்டு இருக்க பா.ஜ.க சார்பில் முரசொலி அலுவலக இடத்தை மீட்டு உரியவர்களிடம் வழங்க வேண்டும் எனப் புகார் அளிக்கப்பட்டது.

மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், `முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம்தான் என்பதை முன்னர் வைகோவே சொல்லியிருக்கிறார்’ என்றார். இந்த விவகாரம் சூடுபிடிக்க, தற்போது வைகோ விளக்கமளித்திருக்கிறார்.

``பா.ஜ.க வின் முன்னணி தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று நான் கூறியதாகத் தெரிவித்திருக்கிறார்.

அப்போதைய சூழ்நிலையில் நான் அதுபோன்று கருத்து தெரிவித்து இருக்கலாம். ஆனால், அக்கருத்து தவறானது என்பதை பின்னர் உணர்ந்தேன். தற்போது இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டு இருப்பதால் தி.மு.க தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் மிகத்தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார். முரசொலி அலுவலக இடம் பற்றிய அரசுப் பதிவு ஆவணங்களை வெளியிட்டது மட்டுமன்றி, அது பஞ்சமி நிலம்தான் என்று நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார் என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.

பொன். ராதாகிருஷ்ணன்
பொன். ராதாகிருஷ்ணன்

ஸ்டாலின் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் முரசொலி இடம் குறித்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் பற்றி எரியும் எத்தனையோ பிரச்னைகளை திசை திருப்ப சிலர் முயல்கிறார்கள்.

ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கொண்டுவந்து, காவிரி தீரத்தை பாலைவனம் ஆக்கும் முயற்சி, தென் மாவட்டங்களுக்கு பேரபாயமாக கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமித்து வைக்கும் திட்டம், தேனி மாவட்டத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் நியூட்ரினோ ஆய்வகம், மக்கள் எதிர்ப்புகளை மீறி சேலம் - சென்னை எட்டு வழிச் சாலை அமைக்கும் திட்டம், தூத்துக்குடி மாவட்டத்தைச் சூறையாடிய ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சி, காவிரியின் குறுக்கே மேக்கே தாட்டு அணையைக் கட்டி காவிரி நீரை தடுக்க முயற்சி, புதிய கல்விக் கொள்கை மூலம் மாநில உரிமைகளைப் பறித்து சமூகநீதிக்குப் புதைகுழி தோண்டும் திட்டம், இதுபோன்ற மத்திய பா.ஜ.க அரசின், தமிழ்நாட்டுக்கு எதிரான துரோகங்களை மக்கள் மன்றத்தில் திசை திருப்புவதற்காக தி.மு.க மீது சிலர் உள்நோக்கத்தோடு கணைகள் வீசுவதை தமிழக மக்கள் நன்றாக உணர்வார்கள்.

வைகோ
வைகோ

பா.ஜ.க அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எடப்பாடி பழனிசாமி அரசு துணையாக இருப்பதையும் தமிழக மக்கள் அறிவார்கள். தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்கள் சக்தியை திரட்டும் ஸ்டாலினின் முயற்சியை எவராலும் தடுத்துவிட முடியாது” என்றார்.