Published:Updated:

`எங்கே இருக்கிறார் உமர் அப்துல்லா... அழைப்பிதழ் கொடுக்கணும்!' - நீதிமன்றத்தை நாடிய வைகோ

கலிலுல்லா.ச
ஆ.பழனியப்பன்

முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவைக் கண்டுபிடித்து தரக்கோரி ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

vaiko
vaiko

மத்திய பா.ஜ.க அரசு, இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பின், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தது. தொடர்ந்து 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டது. இதனால் காஷ்மீரில் அசம்பாவித சம்வங்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மொபைல் சேவைகள் துண்டிக்கப்பட்டன.

Supreme court
Supreme court

மெஹபூபா முஃப்தி, பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். பின்னர், கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டன. இந்தநிலையில், ம.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழா மாநாடு, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ``சென்னையில் வரும் 15-ம் தேதி அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகப் பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறோம்.

அந்த வகையில் ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை அழைக்க முற்பட்டபோது, முடியாமல் போனது. அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை; மேலும் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. ஆகவே, அவரைக் கண்டுபிடித்து தர வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னையில் நடைபெற்ற தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஃபரூக் அப்துல்லா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வரவில்லை. ஏற்கெனவே ஜம்மு - காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தி.மு.க எம்.பி-யான தயாநிதி மாறன், ``முன்னாள் முதல்வர்கள் மெக்பூபா முப்தி, உமர் அப்துல்லா, முன்னாள் முதல்வரும் மக்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லா ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் குற்ற வழக்குகளில் கைதுசெய்யப்பட்டால், அது குறித்த தகவலைச் சபாநாயகருக்குத் தெரிவிக்க வேண்டும். அது தொடர்பான விவரங்களை உறுப்பினர்களிடம் சபாநாயகர் தெரிவிக்க வேண்டும் என்பது விதி. பரூக் அப்துல்லா காணவில்லை. அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அவரின் நிலை குறித்து எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

farooq abdullah
farooq abdullah

அதற்குப் பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பரூக் அப்துல்லா கைதுசெய்யப்படவில்லை. அவர் வீட்டுக்காவலில் வைக்கப்படவும் இல்லை. அவரது விருப்பப்படி, அவர் வீட்டில் உள்ளார்” என்றார்.

அதன்பிறகு ஸ்ரீநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த பரூக் அப்துல்லா, “என்னைத் தடுப்புக் காவலில் வைத்துள்ளனர். என்னைக் கைதுசெய்யவில்லை என்று உள்துறை அமைச்சர் கூறுவது பொய்” என்றார்.

ஏற்கெனவே, பரூக் அப்துல்லா சென்னைக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.