Published:Updated:

தி.மு.க எம்.எல்.ஏ-வை மிரட்டினாரா வைகோ?

மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலிங்கப்பட்டிக்குக் கொண்டுவர வைகோ முயற்சி செய்யறாருங்கிற விஷயமே எனக்குத் தெரியாது.

பிரீமியம் ஸ்டோரி

சங்கரன்கோவில் தி.மு.க எம்.எல்.ஏ ராஜாவை, “உன் அரசியல் வாழ்க்கையையே இல்லாமல் செய்துவிடுவேன்’’ என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மிரட்டியதாக சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் கூட்டணிக் கட்சிகளான தி.மு.க - ம.தி.மு.க இடையே நெருப்பைப் பற்றவைத்திருக்கின்றன. அதேவேளையில், “எம்.எல்.ஏ தனிப்பட்ட ஆதாயத்துக்காக சில வேலைகளைச் செய்தார். வைகோ அதைக் கண்டிக்க மட்டுமே செய்தார். அதைத்தான் மிரட்டியதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்’’ என்று விளக்கம் தருகிறார்கள் ம.தி.மு.க தரப்பினர்.

தி.மு.க எம்.எல்.ஏ-வை மிரட்டினாரா வைகோ?

தமிழகம் முழுவதும் ஒரு தாலுகாவுக்கு ஓர் அரசு மருத்துவமனை என்கிற நடைமுறை இருக்கிறது. அந்தவகையில், தென்காசி மாவட்டத்தில் திருவேங்கடம் தனித் தாலுகாவாக அறிவிக்கப்பட்டதால், இந்தத் தாலுகாவிலுள்ள குருவிக்குளம் யூனியனில் இருந்த மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படுகிறது. அதன் காரணமாக, அதே யூனியனில் உள்ள வேறு ஆரம்ப சுகாதாரம் நிலையம் ஒன்று, 30 படுக்கைகளுடன் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது. இந்தநிலையில்தான், சாயமலையில் செயல்பட்டுவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகளை சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா மேற்கொண்டார். ஆனால், அதே யூனியனில் உள்ள தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு அதைக்கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார் வைகோ. இதில்தான் இருவருக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது.

தி.மு.க எம்.எல்.ஏ-வை மிரட்டினாரா வைகோ?

என்ன நடந்தது என்று சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜாவிடம் கேட்டோம்... “மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலிங்கப்பட்டிக்குக் கொண்டுவர வைகோ முயற்சி செய்யறாருங்கிற விஷயமே எனக்குத் தெரியாது. தொகுதி மக்கள்தான் என்கிட்ட, ‘இந்தப் பகுதியில எல்லா ஊர்களுக்கும் மையமா இருக்குற சாயமலைக்கு அந்த மருத்துவமனையைக் கொண்டு வாங்க’னு சொன்னாங்க. சுகாதார இணை இயக்குநர், ‘எந்த ஊர்ல கொண்டுவரலாம்?’னு என்கிட்ட கேட்டப்ப, நான் மக்களோட விருப்பத்தைச் சொன்னேன். அந்தம்மா ரெண்டு ஊருக்கும் புரொபோசல் ரெடி பண்ணினாங்க. இந்த நிலையிலதான், தென்காசி ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் போன்ல இருந்து எனக்கு போன் வந்துச்சு. போனை எடுத்ததுமே வைகோ என்னைத் தாறுமாறா திட்ட ஆரம்பிச்சுட்டாரு. பதறிப்போன நான், ‘ஐயா, நீங்க மருத்துவமனைக்கு முயற்சி பண்ற விஷயமே எனக்குத் தெரியாது... உங்க விருப்பப்படியே செஞ்சுக்கலாம்’னு சொல்லியும் அவர் கேட்கலை... ‘உன்னை ஜெயிக்கவெச்சதுக்கு நீ செய்யுற கைம்மாறு இதுதானா? சி.எம்-கிட்ட சொல்லி உன் அரசியல் வாழ்க்கையையே இல்லாமப் பண்ணிடுவேன்’னு மிரட்டினாரு. எனக்கு பதில் சொல்லவே வாய்ப்பு கொடுக்கலை. வயசுல மூத்தவருன்னு நானும் எதுவும் பேசலை... தலைமையில கூப்பிட்டு, நடந்த விஷயத்தைக் கேட்டாங்க... சொல்லியிருக்கேன்’’ என்றார்.

ஆனால், ம.தி.மு.க தரப்பிலோ வேறுவிதமாக விளக்கம் அளிக்கிறார்கள். ம.தி.மு.க தென்காசி மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் நம்மிடம், “கலிங்கப்பட்டிக்கு மருத்துவமனையைக் கொண்டுவர வேண்டும் என்று வைகோ எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இயல்பாகவே கலிங்கப்பட்டிக்கு வரவேண்டிய மருத்துவமனைதான் அது. ஆனால் ராஜா, அதிகாரிகளிடம் பேசி, ‘கலிங்கப்பட்டிக்கு வேண்டாம். சாயமலைக்கு புரொபோசல் அனுப்புங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அவருக்குக் கலிங்கப்பட்டி எங்கே இருக்கிறது, சாயமலை எங்கே இருக்கிறது என்கிற விவரம்கூடத் தெரியவில்லை. சாயமலைக்குக் மருத்துவமனையைக் கொண்டுவருவதில் அவருக்குத் தனிப்பட்ட முறையில் நலன்கள் இருக்கின்றன. அதனால்தான் அதில் ஆர்வம் காட்டினார். கலிங்கப்பட்டிக்கு மருத்துவமனை வந்தால், யாரும் தனிப்பட்ட முறையில் லாபமடைய முடியாத வகையில் ஏற்பாடுகளைத் தலைவர் செய்துவிடுவார். இவ்வளவுதான் விஷயம்...

ஆனால், தலைவர் மிரட்டியதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை. எனது போனிலிருந்துதான் தலைவர் பேசினார். ‘எந்த அடிப்படையில் சாயமலைக்கு மருத்துவமனையைக் கொண்டுவரச் சொல்கிறீர்கள்? தகுதி அடிப்படையில் கலிங்கப்பட்டிக்குத்தான் வர வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வுக்கு வரவிருக்கும் நிலையில், மக்களை ஏன் குழப்புகிறீர்கள்? உங்களுடைய செயல்பாடுகள் சரியில்லை. இது பற்றி சி.எம்-மிடம் சொல்லவேண்டியது வரும்’ என்றுதான் சொன்னார். அதேசமயம், மக்களின் விருப்பம் சாயமலைதான் என்று எம்.எல்.ஏ ராஜா சொல்வதில் உண்மை இல்லை. வைகோ இவரை மட்டுமல்ல... யாரையும் மரியாதை இல்லாமல் பேச மாட்டார்’’ என்றார்.

ராஜேந்திரன் - கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
ராஜேந்திரன் - கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

தி.மு.க-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் இந்த விவகாரம் பற்றிக் கேட்டோம். “இந்த விவகாரத்தில் ‘அரசு நிர்வாகம் அதன் போக்கில் நடக்கும்; சொந்தக் கட்சி எம்.எல்.ஏ என்றோ, கூட்டணிக் கட்சி என்பதற்காகவோ வளைந்து கொடுக்க மாட்டோம்’ என்று ஏற்கெனவே முதல்வர் தெளிவுபடுத்திவிட்டார். ‘எங்கள் பொதுச்செயலாளர் வைகோ அப்படிப் பேசவில்லை. எங்களுக்கு வரவேண்டியதைத்தான் கேட்டோம்’ என்று ம.தி.மு.க தரப்பில் விளக்கம் கொடுத்துள்ளனர். எங்கள் சட்டமன்ற உறுப்பினரும் வைகோ மிரட்டியதற்கான, ஆதாரம் எதையும் கொடுக்கவில்லை. அதேபோல, தனது சொந்த ஆதாயத்துக்காக தி.மு.க எம்.எல்.ஏ செயல்பட வாய்ப்பில்லை. அப்படி நடந்தால் கட்சித் தலைமை அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது’’ என்றார்.

அரசியலில் மூத்தவர்கள்தான் இளையோருக்கு வழிகாட்ட வேண்டும். அரசியல் மாண்பு பற்றி வைகோவுக்கு யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு