`தமிழ்மேல் காதல் இருப்பதுபோல் மோடி பேசுகிறார். அவரைப்போல் ஏமாற்றுபவர் யாரும் கிடையாது. செல்லும் இடத்துக்குத் தகுந்தாற்போல் பேசுகிறார்' என்று மோடியை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் செய்திருக்கிறார்.

ம.தி.மு.க சார்பில் நேற்று மாலை மதுரையில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் வைகோ கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டுக்கு மீண்டும் மொழிப்போர் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது, தமிழைக் காக்க உயிர்த் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகள் மீண்டும் பிறக்க வேண்டும்.
இந்தி மொழி, வேற்றுமையை உருவாக்கும், ஒருமைப்பாட்டைக் குலைக்கும் என்பதால்தான் இந்தி வேண்டாம் என்கிறோம். ஆட்சி மொழியாக இருப்பதற்குத் தகுதி இல்லாததால் எதிர்க்கிறோம், சனாதன சக்திகளால் மீண்டும் தமிழ்நாட்டுக்கு ஆபத்து வந்திருக்கிறது. சனாதனத்தை எதிர்த்து போராடத் தயாராக வேண்டும்.
`இந்தியைத் திணிக்க நினைத்தால் நாடு துண்டு துண்டாகும்’ என்று பெரியார் எச்சரித்தார். 1963-ல் இந்தி ஆட்சி மொழி என நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டுவந்தபோது, அறிஞர் அண்ணா தலைமையில் அரசியல் சட்டத்தைக் கொளுத்தும் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டத்துக்கு கலைஞர் என்னை அனுப்பிவைத்தார்.

தமிழ்மேல் காதல் இருப்பதுபோல் மோடி பேசுகிறார். அவரைப்போல் ஏமாற்றுபவர் யாரும் கிடையாது. செல்லும் இடத்துக்குத் தகுந்தாற்போல் பேசுகிறார். தமிழை அவர் போற்றுவது உண்மையென்றால், இந்தியை ஒன்றிய அரசு திணிக்கக் கூடாது. இந்தியை எதிர்க்க வேண்டுமென்றால் இந்துத்துவ சக்திகளை விரட்டி அடிக்க வேண்டும். சனாதன தர்மம், இந்துத்துவா, அதற்குப் பிறகு இந்தி, சம்ஸ்கிருதம்... இதுதான் பா.ஜ.க-வின் திட்டம். ஆனால், அவர்களின் திட்டம் நிறைவேறாது.
இந்தியைத் தடுக்க வேண்டுமென்றால் தமிழகத்திலிருக்கும் இந்துத்துவா சக்திகளை வளரவிடாமல் தடுக்க வேண்டும். நாங்கள் கோயில்களுக்கு விரோதமானவர்கள் அல்ல. மீனாட்சியம்மன் கோயிலைப் பார்த்து வணக்கம் சொல்லத் தயாராக இருக்கிறேன். ஆலயங்களை மதிக்கிறோம், தேவாரம், திருவாசகப் பாடல்களை மதிக்கிறோம்.

கோயில்களில் தேவபாஷை எனக் கூறி சம்ஸ்கிருதத்தை நுழைக்கிறார்கள், அதைத் திணிக்கும் இந்துத்துவாவைத்தான் எதிர்க்கிறோம். இது எங்களின் உயிரினும் மேலான தமிழ்நாடு. ஆளுநர் திடீரென ஒரு நாள் `தமிழகம்’ என்கிறார், எதிர்ப்பு வந்த பின்னர் `தமிழ்நாடு’ என்கிறார். தமிழக வரலாற்றில் இப்படி ஒரு மோசமான ஆளுநரை மக்கள் கண்டதில்லை'' என்றார்.