தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ``சனாதன தர்மத்தால் உருவாக்கப்பட்டதே இந்த பாரதம். நமது இந்திய அரசியலமைப்பு சட்டம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதன தர்மத்தில் கூறப்பட்டிருக்கிறது. ரிஷிகளாலும், முனிவர்களாலும், சனாதன தர்மத்தின் ஒளியாலும்தான் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது'' என்று கூறியிருந்தார்.
ஆளுநர் ரவியின் இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆளுநரின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, ஆளுநரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில், ``ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஒரு நபர் அரசியலமைப்புச் சட்ட நெறிகளை மீறி, `சனாதன தர்மம் இந்தியாவை வழி நடத்துகிறது' என்று பேசியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
மனித சமத்துவத்தை மறுக்கும் வருணாசிரம தர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்களின் கோட்பாட்டை தூக்கிப்பிடித்து பெருமை பொங்கப் பேசியிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் யார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தியாவை வழிநடத்துவது அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்த அரசியல் அமைப்புச் சட்டமே தவிர, நால்வருண பேதத்தை வலியுறுத்தும் சனாதன தர்மம் அல்ல. ஆளுநர் ரவி தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும்.
`பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறள் நெறியை உலகுக்குத் தந்த தமிழ்நாட்டில் ஆளுநர் பதவியில் இருந்துகொண்டு பிறவி பேதத்தைக் கற்பிக்கும் சனாதன தர்மத்துக்கு ஆதரவாகப் பேசும் ஆளுநர் ரவி, அந்தப் பொறுப்பில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். உடனடியாக குடியரசுத் தலைவர், தமிழ்நாட்டு ஆளுநரை அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்'' என வைகோ குறிப்பிட்டிருக்கிறார்.
