Published:Updated:

“என் முடிவு அப்பாவுக்கு சந்தோஷத்தைக் கொடுக்குமான்னு தெரியாது!”

குடும்பத்துடன் துரை வைகோ
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்துடன் துரை வைகோ

- அரசியலில் வைகோ மகன்

“என் முடிவு அப்பாவுக்கு சந்தோஷத்தைக் கொடுக்குமான்னு தெரியாது!”

- அரசியலில் வைகோ மகன்

Published:Updated:
குடும்பத்துடன் துரை வைகோ
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்துடன் துரை வைகோ
‘முழு நேர அரசியலில் ஈடுபடுவேன்' என்ற வைகோ மகன் துரை வைகோவின் பிரகடனம் அரசியல் வட்டாரத்தில் புயல் கிளப்பியிருக்கிறது. வைகோவிற்குத் துணையாக இருந்துவந்தவர், இப்போது தீவிர அரசியலுக்கு வருகிறார். முதல்முறையாக இந்த நேர்காணலில் என்னிடம் மனம் திறந்து பேசினார்.

“வெற்றிகளும் தோல்விகளும் அப்பாவுக்குப் புதிதல்ல. திராவிடத்தைக் கனவு கண்ட இளைஞனாகத் தொடங்கி, உயரங்களையும் துயரங்களையும் பெரும் புகழையும் கண்டவர். இன்றைக்கும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர். இப்ப நான் தீவிர அரசியலுக்கு வருவேன் எனப் பேசியது ஹாட் டாப்பிக் ஆகியிருக்கிறது. எப்பவும் மனசு சொல்றதைக் கேட்பவன் நான். உண்மை எல்லாத்தையும் தாண்டி பெருசுன்னு நம்பறேன். என்னை உணரவும், உணர்த்துவதற்குமான நேரம் இது. இப்போது உங்களிடம் பேசலாம்னு தோணுச்சு... அதான்” சினேகத்துடன் சிரிக்கிறார்.

“என் முடிவு அப்பாவுக்கு சந்தோஷத்தைக் கொடுக்குமான்னு தெரியாது!”

``திடீர் அரசியல் பிரவேசத்துக்கு குறிப்பிட்ட காரணங்கள் ஏதும் இருக்கின்றனவா?”

“ஆரம்பத்தில் அரசியல் பற்றியெல்லாம் நினைத்ததே இல்லை. எம்.பி.ஏ முடிச்சதும் தொழிலில் இறங்கிட்டேன். அமெரிக்க கம்பெனி ஒன்றில் முழு நிர்வாகம் பார்த்தேன். 45 வயசு வரைக்கும் வேலை பார்த்துட்டு, கொஞ்சம் இயற்கை சார்ந்த வாழ்வு, வனவிலங்குகள் ஆர்வம் எனப் புறப்படலாம்னு நினைச்சேன். அப்பாவிற்காக பிரசாரத்திற்குப் போயிருக்கேன். இரண்டு வருஷமாக அப்பா போகமுடியாத, கட்சிக்காரர்களின் நல்லது கெட்டதுக்குப் போய் வந்திருக்கேன். கட்சிக்காரர்களின் பாசம், அன்பு, தலைவர் பையன்னு கூடுதல் பிரியம் மனதை நிறைத்தது. சொந்தக் காசைப் போட்டுக் கட்சி நடத்திவருகிற அவங்க மனசு நெஞ்சில் நிற்குது. அப்பா ஏன் பணத்தையும் பதவியையும் பொருட்படுத்தாமல் இந்த அன்பை வேண்டி நிற்கிறார்னு இப்பதான் புரியுது. ஒன்றும் தெரியாமல் அரசியலுக்கு வந்தவன் நான். இப்பதான் பயம் வந்து நடப்பைத் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கேன்.

தொழிலை மட்டும் பார்த்துட்டு, கட்சி அப்பாவோடு போகட்டும்னு விட்டுடலாம்... அப்படி முடியலை. அப்பாவுக்கு நான் அரசியலுக்குத் தீவிரமாக வரப்போவது சந்தோஷத்தைக் கொடுக்குமான்னுகூட எனக்குத் தெரியாது. இந்தக் கட்சிக்காக தொடர்ந்து வருகிற தொண்டர் களுக்காக என்ன செய்திருக்கோம்னு நினைச்சுப் பார்க்கிறேன். அப்படி எதுவுமே இல்லை. இத்தனை வருஷமா அப்பாவைத் தாங்கி நிற்கிறவர்களுக்கு ஒண்ணும் செய்யலைங்கிறதே மனசைப் பிசையிது. இந்த உறவுகளை அப்படியே விட்டுட்டுப் போய்விட முடியாது. இரண்டு வருஷமா இதுவே மனப்போராட்டம். இனிமேல் என் இருப்பை உறுதி செய்யணும்னு பார்க்கிறேன். இதுவரைக்கும் நான் வாழ்ந்த வாழ்க்கை துரை வையாபுரியோடு முடிந்துவிட்டது. இனி வாழப் போவதை துரை வைகோவாக அரசியலுக்கு அர்ப்பணிக்கிறேன்.”

“என் முடிவு அப்பாவுக்கு சந்தோஷத்தைக் கொடுக்குமான்னு தெரியாது!”

``வைகோ போல சிறந்த பேச்சாளராக என்ன பயிற்சி எடுக்குறீங்க?’’

“அவர் மாதிரி அரசியல் தகுதியை இப்ப என்னிடம் எதிர்பார்க்கக் கூடாது. அவர் மாதிரி பேச்சுத் திறனும், அந்த வசீகரமும் இங்கே அபூர்வம்தான். இப்ப புதுசா பேச ஆரம்பிக்கிற எல்லோரிடமும் அப்பாவோட சாயலைப் பார்க்கிறேன். அப்பா மாதிரி கோபப்படவும் உணர்ச்சிவசப்படவும் முடியுது. ஆனால் இப்ப இயல்பா பேசிப் பழகியிருக்கிறேன். கோவில்பட்டியில் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்காக நான் பேசியதை எல்லோரும் பாராட்டினார்கள். வார்த்தைகளில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் அரசியலிலும் காட்டாறாகப் பொங்கிப் பிரவகித்தவர். நான் அவரில்லை. அவரின் சிறந்த குணங்களையும் மாண்பையும் பின்பற்றுகிறேன்.”

``ம.தி.மு.க-வை வளர்க்க என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?’’

“கிராமங்களில் அடிப்படைப் பிரச்னைகள் இருக்கு. கல்வி, மருத்துவம், குடிநீர்னு மக்கள் அலைய வேண்டியிருக்கு. மக்கள் பிரச்னையை இன்னும் வேகமாகக் கையில் எடுக்கப்போறோம். பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்கும் நல்ல அரசு இப்ப அமைஞ்சிருக்கு. இன்னும் கட்சியை நிலைப்படுத்த வேண்டியிருக்கு. குறைந்துவிட்ட கட்சியின் வாக்கு வங்கியை இன்னும் மேலே கொண்டுவரணும். மதம், சாதியைச் சொல்லி ஒரு கூட்டம் அரசியல் பண்ணும்போது, நாம் மக்களுடைய அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்தி மக்கள் ஆதரவைப் பெறணும். அதற்கான முறையான திட்டங்களோடு வருவோம்.”

“என் முடிவு அப்பாவுக்கு சந்தோஷத்தைக் கொடுக்குமான்னு தெரியாது!”

``அப்பா ஈழம் சென்றவர், புலிகளின் தோழர். உங்களுக்கு அவர்களுடன் என்ன அனுபவங்கள் இருக்கு?’’

“அப்பா ஈழத்திற்குச் சென்று வந்ததையெல்லாம் ஒரு திரைப்படம் பார்க்கிற மாதிரி சொல்வார். சிங்களப் படையை ஒரு சின்னப் படையணியால் புலிகள் நிர்மூலமாக்கிய விதம் எல்லாத்தையும் அவர் சொல்லிக் கேட்கப் பரவசமாக இருக்கும். எங்க பழைய வீட்டுக்கு மேதகு பிரபாகரன் ஐயா பலமுறை வந்திருக்கிறார். அவர் வரும்போதெல்லாம் அப்பா முகமே மலர்ந்து சிரிக்கும். நான் பிரபாகரன் ஐயா மடியில் உட்கார்ந்து விளையாடியிருக்கேன். எங்க வீட்டிலும், கலிங்கப்பட்டி வீட்டிலும் ஏராளமான காயமடைந்த விடுதலைப் புலிகள் வந்து தங்கியிருக்காங்க. ஈழத்தின் இறுதிக்கட்டப் போரில் ஏராளமான பொதுமக்களும், புலிகளும் தலைவர்களும் இறந்தது மனதில் தீராத வலியாகி, ஆறாத வடுவாக நிற்கிறது.”

``அப்பா திராவிடக் கொள்கை, கடவுள் மறுப்பென மூழ்கியவர். உங்கள் நிலைப்பாடுகள் என்ன?’’

“திராவிடக் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. பழையன கழிதலும் புதியன புகுதலும் வேண்டும் என்பார்கள். அதில் நம்பிக்கை இருக்கிறது. காலத்திற்கேற்ப சில மாற்றங்கள் செய்துகொண்டால் எல்லாத் தரப்பு மக்களிடமும் இயக்கத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்க முடியும். யார் நம்பிக்கையிலும் குறுக்கிடாத மதத்திற்கோ, கடவுளுக்கோ திராவிடம் எதிரி கிடையாது. மதங்களையும் கடவுள்களையும் புண்படுத்துகிற மாதிரி கருத்துகளைச் சொல்லக்கூடாது என விரும்புகிறேன். அப்படிச் சொல்லும்போது அது மதத்தை, கடவுளை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு வசதியாகிவிடுகிறது. எனக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. கோயிலுக்குப் போய் வழிபடுவேன். வீட்டில் பூஜையறையும் இருக்கிறது.”

“என் முடிவு அப்பாவுக்கு சந்தோஷத்தைக் கொடுக்குமான்னு தெரியாது!”

``நீங்கள் அரசியலுக்கு வருவதை உங்கள் அம்மாவும் மனைவியும் எப்படிப் பார்க்கிறார்கள்?’’

“அம்மாவுக்கு இன்னிக்கு வரைக்கும் இஷ்டம் கிடையாது. அவங்ககிட்ட சமாதானம் சொல்லிக்கிட்டே இருக்கேன். அப்பாவோடு 28 வருஷமாக இருந்து உடல், பொருள், ஆவி அத்தனையும் கொடுத்திருக்கிற தொண்டர்களை விட்டுட்டு என்னால் போக முடியாதபடி இருக்கிறது என்று புரிய வைக்க முயற்சி செய்றேன். என் மனைவி கீதா பல் மருத்துவர். கல்யாணத்திற்குப் பிறகு வீட்டையும் குழந்தைகளையும் அம்மாவுக்குத் துணையாக இருந்துகொண்டு பார்க்கிறாங்க. அயல்நாட்டில் படிக்கிற மகள் வானதி ரேணு அரசியலில் கவனமாக இருப்பாங்க. ‘அரசியலுக்குப் போகாதீங்க. பாருங்க தாத்தா, அத்தையைப் பார்க்கக்கூட வெளிநாடு போக முடியலை'ன்னு சொல்வாங்க. ‘தாத்தா மாதிரி நீங்க ஜெயிலுக்குப் போயிட்டீங்கன்னா என்ன பண்றது’ன்னு கேட்கிறாங்க. மகன் வருண் வைகோவுடையது வேறு உலகம்!”

``உங்களின் அரசியல் வழிகாட்டி யார்?’’

“டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். மாநில நலனை மட்டும் கருத்தில்கொண்டு அவர் செய்கிற முற்போக்கு அரசியல் எனக்குப் பிடிச்சிருக்கு.”

``நீங்கள் அரசியலுக்கு வரும்போது சவாலாக இருக்கிற விஷயம் என்ன?’’

“சில முடிவுகளைக் கட்சியில் நடைமுறைப்படுத்தணும். அதற்கு அப்பாவைச் சமாதானப்படுத்தியாகணும். அவர் முதிர்ச்சியான அரசியல்வாதி. நானோ அரசியல் ஆத்திசூடி படிக்கிறவன். அவரைச் சமாதானப்படுத்த முயற்சி செய்து 99 சதவிகிதம் தோல்வி அடைந்திருக்கிறேன். கட்சிகூட சினிமா மாதிரி தான். ஒரு ஹீரோ வேணும், வில்லன் வேணும், ஒரு ஜோக்கர் வேணும். இப்படி எல்லோரும் இருப்பதுதான் அரசியல். அதற்குக் காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அதற்குத் தயாராகணும்.”

``கலைஞரைச் சந்தித்திருக்கிறீர்களா?’’

“நாலைந்து முறை பார்த்திருக்கிறேன். ‘ஏன் மெலிவா இருக்கான் தம்பி’ன்னு அக்கறையா விசாரிப்பார். ஒரு தடவை வீட்டுக்கு ஒரு போன் வந்தது. மறுமுனையிலிருந்து கோபால்சாமி இருக்காரான்னு கேட்டுட்டு எல்லா விவரங்களையும் கேட்கிறாங்க. நான் சொல்லிக்கிட்டே இருக்கும்போது ‘நீங்க யாருங்க’ என்று கேட்டுக்கிட்டே இருக்கேன். பதில் வரலை. ‘நான் விவரம் சொல்லிட்டே இருக்கேன்... நீங்க பெயர் சொல்ல மாட்டீங்களா’ன்னு கேட்க, ‘கலைஞர் கருணாநிதி' என்று மறுமுனையில் பதில்வந்தது. ‘அய்யா, தப்பா நினைக்காதீங்க... நீங்கன்னு தெரியாது'ன்னு சொன்னேன். ‘அதுக்கென்னப்பா... சரி’ன்னு சொல்லிட்டாரு. அப்பா போன் பண்ணி ‘தம்பி உங்களைத் தெரியாமல் கேட்டுட்டான்’னு சொல்ல, ‘அவன் குழந்தைப்பா’ன்னு சொல்லியிருக்கார் கலைஞர் அய்யா.”

“என் முடிவு அப்பாவுக்கு சந்தோஷத்தைக் கொடுக்குமான்னு தெரியாது!”

``அப்பா நீண்ட அரசியல் பயணத்தில் அமைச்சர் பதவியை அடைந்ததில்லை. அதை எப்படிப் பார்க்கிறீங்க?’’

“மத்திய அமைச்சர் பதவி இரண்டு தடவை அப்பாவைத் தேடி வந்தது. எனக்குத் தெரிந்து அத்வானி எங்கள் வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரம் இருந்து அப்பாவைப் பதவி ஏற்க வலியுறுத்தினார். ‘பாதுகாப்பு, நிதி தவிர என்ன துறை வேண்டுமானாலும் கேளுங்கள்’ என்றார். பாதுகாப்பு அமைச்சர் என்ற கவலை இல்லாமல் இலங்கை போய்விடுவார் என்று அவர்களுக்கு அச்சம். நிதி கொஞ்சம் சிக்கலான ஏரியா என்பதாக இருக்கலாம். ஆனால், அப்பா சகாக்கள் இருவருக்குப் பதவிகளை வாங்கிக்கொடுத்தார். சாதாரண எம்.பியாக இருந்துகொண்டு அப்பா செய்த சாதனைகளையே பெரும் பட்டியல் போடலாம். தொழிலாளர்களுக்கு மே 1 விடுமுறை, என்.எல்.சி தனியாருக்குப் போய்விடாமல் தடுத்தது, தேசிய நதிகளை இணைப்பது சாத்தியப்படாது என்றபோது நதிநீர் இணைப்புக்குத் தனிநபர் மசோதா கொண்டு வந்ததெல்லாம் சில உதாரணங்கள். எம்.பியாகவே இவ்வளவு செய்திருக்கும்போது, அமைச்சராக இருந்தால் எவ்வளவு செய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் இன்னும் அவருக்குப் பெயர் கிடைத்திருக்கும். அமைச்சர் பதவியை மறுத்தது அவரது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய பின்னடைவு. அப்படி ஏற்றிருந்தால் அரசியல் ஆளுமையைக் காண்பித்து தமிழ்நாட்டிற்கு எவ்வளவோ நல்லது நடந்திருக்கும். அதைச் செய்ய அப்பா தவறினார். சராசரி அரசியல்வாதியாக இருக்கக்கூடாது என அவர் நினைத்திருக்கலாம். இங்கே அதிகாரம் இருந்தால்தான் மக்களுக்கு நல்லது செய்ய முடிகிறது.”

``ஸ்டாலின் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீங்க?’’

“ஸ்டாலின் ஐந்து வருஷத்திற்குச் சிறந்த ஆட்சி செய்ய வேண்டுமெனத் தீர்மானித்துவிட்டார். ஆழமாக யோசித்துச் செயல்படுகிறார். யாரை எந்த இடத்தில் உட்கார வைக்க வேண்டும் என்பது தெரிகிறது. இறையன்பு, சைலேந்திரபாபு என ஆட்சிகளும் கட்சிகளும் மாறினாலும் மக்களுக்காக உழைப்பவர்களைத் தேர்ந்தெடுக்கிறார். எ.வ.வேலு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு எனச் சிறப்பானவர்களைத் தேர்ந்தெடுக்கிறார். பொருளாதார கவுன்சில் சிறப்பாகச் செயல்படுகிறது. அவரிடமிருந்து ஒரு வீண் பேச்சில்லை. சுற்றுச்சூழலில் கவனம் செலுத்துவது இங்கே புதுசு. நல்லாட்சியைத் தந்துகொண்டிருக்கிறார்.”

``வாரிசு அரசியல்..?’’

“இல்லையில்லை. அப்படியில்லை. இன்னும் நான் எந்தப் பதவியிலும் இல்லை. சாத்தூரில் இந்த முறை போட்டியிடச் சொன்னார்கள். தி.மு.க தலைமையும் விரும்பியது. கால அவகாசமும் இன்னும் பக்குவமும் வேண்டும். மக்களும் கட்சியும் தரும்போது அதைப் பெறலாம். அதுதான் நியாயம். காலம் கனியட்டும். இப்போதைக்கு இங்கே வாரிசு அரசியல் என்ற பேச்சே எழவில்லை.”

“என் முடிவு அப்பாவுக்கு சந்தோஷத்தைக் கொடுக்குமான்னு தெரியாது!”

``நீங்கள் தீவிர அரசியலில் குதிக்கப்போகிற முடிவுக்கு வைகோ சம்மதம் சொல்லிவிட்டாரா?’’

“காரில் போய்க்கொண்டிருப்பீர்கள். சிக்னல் வரும். சிவப்பு, மஞ்சள், பச்சை என டிராபிக் லைட் இருக்கும். இப்போது மஞ்சள் லைட்டில் இருக்கிறேன்.’’