Published:Updated:

எனக்கு மட்டுமே திறமையிருக்கிறது என்று நான் சொல்லவில்லை! - பேச ஆரம்பிக்கும் துரை வைகோ

ம.தி.மு.க-வில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை மற்ற கட்சிகளோடு ஒப்பிட முடியாது. ஏனெனில், நான் அரசியலுக்குள் வருவது என் தந்தைக்கேகூடப் பிடிக்கவில்லை.

பிரீமியம் ஸ்டோரி
28 வருடங்களுக்கு முன்பு தி.மு.க மீது ‘வாரிசு அரசியல்’ குற்றச்சாட்டை வீசிவிட்டு, `ம.தி.மு.க’ என்ற தனிக்கட்சியை ஆரம்பித்து, தன் அரசியல் பயணத்தைத் தொடர்ந்தவர் வைகோ. ஆனால், இப்போது ம.தி.மு.க நிர்வாகியாக அவரின் மகன் துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம், ‘வாரிசு அரசியல்’ குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லவேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார். இந்தச்சூழலில், வைகோவின் மகனும், ம.தி.மு.க தலைமை நிலையச் செயலாளருமான துரை வைகோவிடமே நமது கேள்விகளை முன்வைத்தோம்...

‘‘தமிழக அரசியல் களத்தில் வாரிசு அரசியலைத் தொடர்ந்து விமர்சித்துவந்த வைகோ, தன் மகனையே ம.தி.மு.க-வுக்குள் திணித்துவிட்டாரே?’’

‘‘தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் ஒட்டுமொத்த விருப்பத்துக்கும் மாறாக ஒரு தனிநபரை கட்சிக்குள் முன்னிறுத்துவதுதான் ‘வாரிசு அரசியல்’ எனபதற்கான என்னுடைய விளக்கம். ஆனால், மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலை மற்றும் அரசியல் ஆலோசனைக்குழு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 106 பேரில், 104 பேர் எனக்கு ஆதரவாக வாக்களித்துத் தேர்ந்தெடுத்திருக் கிறார்கள். ஆக, 98 சதவிகித பேர் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் என்னை, எப்படி வலிந்து திணித்துவிட்டதாகச் சொல்கிறீர்கள்?’’

‘‘எல்லா அரசியல் கட்சிகளுமே வாரிசு அரசியலை, ‘ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்திருக்கிறோம்’ என்றுதானே நியாயப்படுத்துகின்றன?’’

‘‘உண்மைதான். ஆனால், ம.தி.மு.க-வில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை மற்ற கட்சிகளோடு ஒப்பிட முடியாது. ஏனெனில், நான் அரசியலுக்குள் வருவது என் தந்தைக்கேகூடப் பிடிக்கவில்லை. ஆனாலும், கட்சித் தொண்டர்களின் தொடர் நிர்பந்தம்தான் என்னைக் கட்சிக்குள் வரவழைத்திருக்கிறது. என்னைத் தேர்ந்தெடுத்த நடைமுறையும்கூட, ஜனநாயக அடிப்படையிலானது. ‘வைகோவின் மகன் என்பதாலேயே எல்லோரும் எனக்கு ஆதரவாக வாக்களிக்கும் நிலை ஏற்பட்டுவிடக் கூடாது’ என்ற முன்னெச்சரிக்கையால், ‘ரகசிய வாக்கெடுப்பு’ முறையைப் பின்பற்றித்தான் தேர்வே நடைபெற்றது. எனவே, இந்த உண்மைகளை மக்களும் புரிந்துகொள்வார்கள்.’’

‘‘வைகோ வளர்த்தெடுத்த ம.தி.மு.க-வில், ‘துரை வைகோவைவிடவும் திறமையானவர் யாருமே இல்லையா?’ என்று ம.தி.மு.க-விலிருந்து விலகிய ஈஸ்வரன் கேட்கிறாரே?’’

‘‘ம.தி.மு.க-வில் என்னைவிடவும் திறமையான, நன்றாகச் செயல்படக்கூடிய இளைஞர்கள், மூத்த நிர்வாகிகள் இருக்கிறார்கள்தான். அதை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. அதனால்தான், மூன்று வருடங்களுக்கு முன்பே என்னைக் கட்சிக்குள் வரச்சொல்லி எல்லோரும் அழைத்தபோதே, ‘என்னைவிடத் திறமைசாலிகள் நம் கட்சியில் இருக்கிறார்கள். என்னை ஏன் அழைக்கிறீர்கள்’ என்று சொல்லி மறுத்துவந்தேன். எனக்கு மட்டும்தான் திறமையிருக்கிறது என்று நான் இதுவரை எங்கேயுமே சொல்லவில்லை. எனவே இந்தக் கேள்விக்கு, காலம்தான் பதில் சொல்லும்!’’

‘‘அண்மையில், ‘தி.மு.க-வின் துரோகி வைகோ’ என துரைமுருகன் மிகக்கடுமையாக விமர்சித்தபோதும்கூட, ம.தி.மு.க தரப்பிலிருந்து எந்தவித எதிர்ப்பும் வெளிப்படவில்லையே... ஏன்?’’

‘‘அந்த விமர்சனத்தில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பக்கத்தில் எங்கள் கட்சித் தலைவரின் பெயரையும் வைத்து துரைமுருகன் விமர்சித்ததில் எங்களுக்கு மகிழ்ச்சிதான். எனவே, அந்த விமர்சனத்தை நாங்கள் பாசிட்டிவாகத்தான் எடுத்துக்கொண்டோம்!’’

‘‘வாரிசு அரசியலை விமர்சித்துவந்த ம.தி.மு.க-வுக்குள்ளேயே, இன்று வாரிசு அரசியல்தான் நடைபெறுகிறது; எனவேதான் துரைமுருகனை உறுதிபட ம.தி.மு.க-வினர் எதிர்க்கவில்லை என்கிறார்களே?’’

‘‘அண்ணன் துரைமுருகன், திராவிட இயக்கத்தினுடைய மூத்த நிர்வாகி. வைகோவின் கல்லூரித் தோழர். இப்போதும்கூட அவர்கள் சந்திக்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியாகப் பேசிக்கொள்வார்கள். அரசியலுக்குள் நான் வந்துவிட்ட அனுபவத்திலிருந்து சொல்கிறேன்... தேர்தல் நேரத்தில் சீட் பங்கீடு, ஊடகச் செய்திகள் என அரசியல்வாதிகளுக்குப் பல்வேறு மனச்சுமைகள் இருக்கும். இதுபோன்ற நெருக்கடியான தருணங்களில் சொல்லப்படுகிற சில வார்த்தைகள், பின்னர் பலராலும் வெவ்வேறு அர்த்தங்களில் புரிந்துகொள்ளப்படலாம்தான். தங்கள் கட்சி நிர்வாகிகளுக்குப் புரியவைப்பதற்காகச் சொல்லப்பட்ட ஒரு வார்த்தைதான் அதுவே தவிர, வைகோவைக் குறிவைத்துச் சொல்லப்பட்ட வார்த்தை அதுவல்ல என்பதை ம.தி.மு.க-வினரும் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.’’

எனக்கு மட்டுமே திறமையிருக்கிறது என்று நான் சொல்லவில்லை! -  பேச ஆரம்பிக்கும் துரை வைகோ

‘‘வாக்கு அரசியலுக்காக, துரை வைகோவும்கூட ‘எங்களுக்குப் பெரியாரும் பெருமாளும் ஒன்றுதான்’ என்று சொல்கிறாரே?’’

‘‘கிடையவே கிடையாது... பெரியார் வழியில் வந்தாலும்கூட, ‘நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்; பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டோம்’ என்று சொல்லித்தான் தன் அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார் பேரறிஞர் அண்ணா. பகுத்தறிவு இயக்கம் என்பது ஆன்மிகவாதிகளுக்கு எதிரானது அல்ல; அது மூடநம்பிக்கைகளுக்கு எதிரானது. எனவே, ‘கோயிலில் பிரார்த்தனை நடக்கட்டும், தேவாலயங்களில் ஜெபிக்கட்டும், மசூதிகளில் தொழுகை நடக்கட்டும், பகுத்தறிவுப் பிரசாரமும் ஒலிக்கட்டும்’ என்பதுதான் எங்கள் கொள்கை.

மக்களில் பெரும்பாலானோர் ஆன்மிக நம்பிக்கைகொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், ‘பெரியார் இல்லையென்றால், நாமெல்லாம் கோயிலுக்குள் சென்று வழிபடவே அனுமதி கிடைத்திருக்காது’ என்ற உண்மை நிறைய பேருக்குத் தெரிவதில்லை. காரணம்... இன்றைக்கு வலதுசாரி இயக்கத்தினர் மதம், சாதி, மூட நம்பிக்கைகளால் மக்களை மூளைச்சலவை செய்து, நம்மிடமிருந்து பிரிக்க நினைக்கிறார்கள். அந்த மதவாதச் சக்திகளுக்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. எனவே, ‘நமக்குப் பெரியாரும் வேண்டும்... பெருமாளும் வேண்டும்’ என்ற புரிதலை மக்களிடையே ஏற்படுத்துவதற்காகத்தான் அப்படிப் பேசினேன்.’’

‘‘ம.தி.மு.க-வின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு என்ன செய்யப்போகிறீர்கள்?’’

‘‘தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் எதிர்பார்ப்பை எப்படி பூர்த்திசெய்யப்போகிறேன் என்று நினைக்கும்போது, மலைப்பாக இருக்கிறது. அரசியலில், வார்த்தை அலங்காரப் பேச்சுகள் முக்கியம் என்ற காலகட்டம் முடிந்துவிட்டது. ‘பொறுப்புக்கு யார் வந்தால் நமக்கு நல்லது செய்வார்கள்’ என்ற எதிர்பார்ப்பு மட்டும்தான் மக்களிடம் இருக்கிறது. எனவே, மக்கள் சேவையால் கட்சியை முன்னுக்கு எடுத்துச்செல்ல முடியும் என்று நம்புகிறேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு