Published:Updated:

`ஸ்டாலினிடம் நான்தான் சொன்னேன்’ - மாநிலங்களவை சீட் மாற்றப்பட்டதன் பின்னணி கூறும் வைகோ!

சத்யா கோபாலன்

`நான் சொல்லிதான் தி.மு.க-வினர் மூன்றாவதாக ஒருவரை மாநிலங்களவை வேட்பாளராக அறிவித்துள்ளனர்’ என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோ
வைகோ

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, கடந்த 2009-ம் ஆண்டு இந்திய அரசுக்கு எதிராகவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதால் அவர் மீது தேசத் துரோக வழக்கு மற்றும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியது ஆகிய பிரிவுகளில் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வைகோ
வைகோ

இந்த வழக்கு விசாரணை நீண்ட வருடங்களாக நடந்துவந்த நிலையில், கடந்த 5-ம் தேதி இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் வைகோவுக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமாகவும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை உடனடியாக நீதிமன்றத்தில் செலுத்தினார் வைகோ.

இதற்கிடையில், வரும் 18-ம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவும் போட்டியிடவுள்ளார் என்பதால், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுத் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து மாநிலங்களவை பதவிக்காகவும் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

வைகோ வேட்புமனு தாக்கல்
வைகோ வேட்புமனு தாக்கல்

இந்த நிலையில் தேசத்துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால், அவரின் மாநிலங்களவை வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. ஒருவேளை வைகோவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் அவருக்குப் பதிலாக தி.மு.க-வின் என்.ஆர்.இளங்கோ போட்டியிடுவார் எனக் கூறி இன்று அவர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். தி.மு.க-வின் இந்த திடீர் முடிவால் ம.தி.மு.க தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மாநிலங்களவை வேட்பாளர் தொடர்பாக அரசியல் குழப்பங்களுக்கு நடுவே இன்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் வைகோ. அவர் பேசியதாவது,``மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தல் வரப்போகிறது என அறிந்ததும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் என்னை அழைத்துப் பேசினார். நீங்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டால் மட்டும் உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என என்னிடம் கூறினார். ஒட்டுமொத்த ம.தி.மு.கவும், நான் மாநிலங்களவைக்குச் செல்ல வேண்டும் என விரும்பியதால்தான் நான் வேட்புமனுத் தாக்கல் செய்தேன்.

வைகோ - ஸ்டாலின்
வைகோ - ஸ்டாலின்

மாநிலங்களவைக்கு நான் போட்டியிடுவதாக இருந்தால் மட்டுமே சீட் வழங்கப்படும் என ஸ்டாலின் தெளிவாக அப்போதே கூறிவிட்டார். நான் போட்டியிடவில்லை எனத் தெரிவித்திருந்தால் எங்கள் பேச்சுவார்த்தை வேறுவிதமாகச் சென்றிருக்கும். இதற்காக நாங்கள் தி.மு.க-வுடன் எந்த ஒப்பந்தமும் போடவில்லை வெறும் வாய்வார்த்தையாக மட்டும் ஒப்பந்தம் செய்துகொண்டோம். இந்த நிலையில்தான், என் மீது சுமத்தப்பட்ட தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அந்த வழக்கில் எனக்குத் தீர்ப்பு கிடைக்காது என முழுமையாக நம்பினேன். ஏனெனில், இந்தியா சுதந்தரம் பெறுவதற்கு முன்னால், ஆங்கிலேயர்கள் கொண்டுவந்தது இந்தச் சட்டப்பிரிவு. என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ள அதே வழக்கின் கீழ், அப்போது காந்தியும் பாலகங்காதர திலகரும் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்தனர். அதைத்தொடர்ந்து இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்துவந்தனர். சுதந்தரம் பெற்றபிறகும் நேரு உள்ளிட்ட பல தலைவர்களும் இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் எனக் கூறினார். ஆனால், இதுவரை அந்தச் சட்டம் நீக்கப்படவில்லை.

வைகோ
வைகோ

இதுவரை பலபேர் மீது இந்தப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அனைவரின் வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த வகையில் என் மீதுள்ள வழக்கில் எனக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருந்தேன். அதேபோன்று தற்போது தேசத்துரோக வழக்கிலும் எனக்குத் தண்டனை கிடைத்துள்ளது. இதில் என்ன நியாயம் உள்ளது எனத் தெரியவில்லை.

காந்தியின் புகைப்படத்தைத் துப்பாக்கியால் சுட்டவர்கள் தேசத் துரோகி இல்லை, கோட்சேவுக்கு ஆதரவாகப் பேசியவர்கள் தேசத்துரோகியாக இல்லாதபோது நான் தேசத்துரோகியாக என்ன செய்துவிட்டேன் எனத் தெரியவில்லை. இதற்கு மேல் அதைப் பற்றிப் பேச விரும்பவில்லை. என் மீதான வழக்கில் தண்டனை கிடைத்ததும் நான் ஸ்டாலினைத் தொடர்புகொண்டு, ஒருவேளை என் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் வேறு ஏற்பாடுகளை செய்துகொள்ளுங்கள் என நான்தான் அவரிடம் கூறினேன்.

வைகோ
வைகோ

ஊழல், போதைப் பொருள் விற்பனை, பெண்கள் தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்கு இருந்தால்தான் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முடியாது. சில வழக்குகளில் அபராதம் விதிக்கப்பட்டிருந்தாலே போட்டியிட முடியாது. என் வேட்பு மனு நிச்சயம் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒருவேளை நிராகரிக்கப்பட்டால் தி.மு.க-வுடன் நாங்கள் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின்படி செயல்பட அவர்கள் இன்று என்.ஆர்.இளங்கோவை வேட்புமனுத் தாக்கல் செய்யவைத்துள்ளனர்.

என் வேட்புமனு நிராகரிக்கப்படவில்லை என்றால் என்.ஆர் இளங்கோ, தன் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுவிடுவார் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே ம.தி.மு.க தொண்டர்கள், என் மீது பாசம் கொண்டவர்கள் இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசியுள்ளார்.