Published:Updated:

`என் குடும்பத்தில் ஒரு உயிரை இழந்துள்ளேன்'- சென்னையில் கலங்கிய வைகோ!

காலை 10.30 க்கு நீதிமன்றத்திலே குற்றவாளியாக நிற்பேன். அடுத்த இரண்டு மணி நேரத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக நிற்பேன். இதுபோல வைகோ என்ற எளியவனுக்கு மட்டுமே இது போன்ற வாய்ப்பு அமைந்தது.

vaiko
vaiko

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ திடலில், ம.தி.மு.க சார்பில் அறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாள் மாநாடு நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மாநாட்டில் வைகோவிற்குப் போர்வாள் பரிசாக அளிக்கப்பட்டது. மேலும், ம.தி.மு.க பொறுப்பாளர்கள் பலருக்கும் திருவள்ளுவர் சிலை பரிசளித்துக் கௌரவிக்கப்பட்டனர்.

பின்னர் மாநாட்டில் பேசிய வைகோ, "டெல்லி ஜந்தர்மந்தரில் 5000 பேருடன் ஈழத்தமிழருக்காக நாம் நடத்திய போராட்டம் போல் வேறு எந்த கட்சியும் நடத்தியதில்லை. பல்வேறு தலைவர்கள் வந்து பேசினார்கள். கை உடைந்த நிலையிலும் யஷ்வந்த் சின்கா உண்ணாவிரத போராட்டத்தில் வந்து பார்த்தார். நன்றியை மறக்க மாட்டேன். நூற்றுக்கணக்கான பா.ஜ.க எம்பிக்கள் மத்தியில் பேசினேன். காஷ்மீர் எம்.பிக்கள் அரசியல் சட்டத்தைக் கிழித்ததற்காகத் தாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொளுத்தியிருந்தால் மகிழ்ந்திருப்பேன் என்றேன். ஸ்டெர்லைட் தொடர்பாக 2010-ல்  நான் தொடர்ந்த வழக்கிலே தடை கொடுத்தது. சுயநலத்திற்காகவோ, பொருளுக்காகவோ 7 மணி நேரம் வாதம் செய்யவில்லை. காலை 10.30 க்கு நீதிமன்றத்திலே குற்றவாளியாக நிற்பேன்.

mdmk chief
mdmk chief

அடுத்த இரண்டு மணி நேரத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக நிற்பேன். இதுபோல வைகோ என்ற எளியவனுக்கு மட்டுமே இது போன்ற வாய்ப்பு அமைந்தது. ஸ்டெர்லைட் ஆலை நச்சாலையாக உள்ளது. 13 பேரைச் சுட்டுக் கொன்றதே அண்ணா தி.மு.க அரசு, அண்ணா என்ற பெயரை உச்சரிக்க வெட்கப்படுகிறேன். வெட்கம், மானம் இன்றி காலால் இடுவதைத் தலையால் செய்பவர்கள். நான் குடும்ப அரசியல் நடத்தவில்லை. என் குடும்பத்தினர் பதவியில் இல்லை. ஆனால் என் குடும்பத்தில் ஒரு உயிரை இழந்துள்ளேன். உண்மையான கூட்டாட்சி மலர வேண்டும். சமூக நீதி காக்கப்பட வேண்டும்.

சனாதனத்தை வேரறுக்கும் சமூக நீதி காக்கப்பட வேண்டும். கோடிக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். நம்முடைய கலை பொக்கிஷங்கள் நம்முடைய கோவில்கள். நாம் கோவிலுக்குச் செல்வோம். பெரியாரின் சிந்தனைகளிலிருந்து மாறிவிட்டாயா என்பார்கள். அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமல்ல. எதிரிகள் கைகளுக்கு அதிகாரம் போய்விடக்கூடாது. அதற்காகப் போர்த் தந்திரத்தை மாற்றுவோம்", என்றார்.