Published:Updated:

``ஆர்.காமராஜ் மீதான ரெய்டுக்கு வைத்திலிங்கம்தான் காரணம்!" - கொதிக்கும் ஆதரவாளர்கள்

ஆர்.காமராஜ் - வைத்திலிங்கம்

ரெய்டுக்கு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்தான் காரணம் என ஆர்.காமராஜ் ஆதரவாளர்கள் பேசத் தொடங்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

``ஆர்.காமராஜ் மீதான ரெய்டுக்கு வைத்திலிங்கம்தான் காரணம்!" - கொதிக்கும் ஆதரவாளர்கள்

ரெய்டுக்கு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்தான் காரணம் என ஆர்.காமராஜ் ஆதரவாளர்கள் பேசத் தொடங்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
ஆர்.காமராஜ் - வைத்திலிங்கம்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கூறி அவரது வீடு உள்ளிட்ட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருவது, அ.தி.மு.க வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், இந்த ரெய்டுக்கு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்தான் காரணம் என ஆர்.காமராஜ் ஆதரவாளர்கள் பேசத் தொடங்கியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.காமராஜ்
ஆர்.காமராஜ்

அ.தி.மு.க ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஆர்.காமராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து 2021-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் பல்வேறு ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு, ரூ 58.44 கோடி வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி ஊழல் தடுப்பு மற்றும் கண்பாணிப்பு துறையினர் ஆர்.காமராஜ் மற்றும் அவர் மகன்கள் இனியன், இன்பன் உள்ளிட்ட 6 பேர்மீது வழக்கு பதிவுசெய்துள்ளனர். அத்துடன் இன்று காலை 6 மணி முதல் மன்னார்குடியில் உள்ள ஆர்.காமராஜ் வீடு உள்ளிட்ட 49 இடங்களில் தொடங்கிய சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மன்னார்குடி தெற்குவீதியில் உள்ள ஆர்.காமராஜ் இல்லத்தில் அவர் ஆதரவாளர்கள் திரண்டு வருகின்றனர். தஞ்சாவூரில் ஆர்.காமராஜ் சம்பந்தி டாக்டர் மோகன் புதிதாகக் கட்டியிருக்கும் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ``ஆர்.காமராஜிடம் ரெய்டு நடத்த அவசியமில்லை. தி.மு.க அமைச்சர் ஒருவர் மூலமாகவே அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் அழுத்தம் கொடுத்து இந்த ரெய்டை நடத்தியிருக்கிறார்" என்று முணுமுணுக்கிறார்கள் காமராஜின் ஆதரவாளர்கள்.

ஆர்.காமராஜ் வீட்டில் ரெய்டு
ஆர்.காமராஜ் வீட்டில் ரெய்டு

இது குறித்து ஆர்.காமராஜ் தரப்பில் பேசினோம். ``அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில் சோழ மண்டல தளபதி என அழைக்கப்படுகிற வைத்திலிங்கம் ஓ.பி.எஸ் பக்கம் நின்றதுடன் அவருக்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். நடந்து முடிந்த பொதுக்குழுவுக்கு முன்னதாகவே வைத்திலிங்கம்மீது கடும் அதிருப்தியிலிருந்து வந்த பலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

வைத்திலிங்கத்தின் வலது கரம் எனப் பேசப்பட்டுவந்த ஆர்.காந்தி உள்ளிட்ட பலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு கொடுத்ததுடன் தீவிரமாக செயல்படவும் தொடங்கினர். வைத்திலிங்கத்திற்கு நெருக்கமான தரப்பு இதனை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. தொடக்கத்திலிருந்தே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கும் ஆர்.காமராஜ் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த பலர் இ.பி.எஸ் பக்கம் செல்வதற்கு காரணமாக இருந்தார்.

ஆர்.காமராஜ் சம்பந்தி டாக்டர் மோகன் வீட்டில் ரெய்டு நடத்தும் அதிகாரிகள்
ஆர்.காமராஜ் சம்பந்தி டாக்டர் மோகன் வீட்டில் ரெய்டு நடத்தும் அதிகாரிகள்

சொல்லப்போனால் ஆர்.காமராஜ் முன்னின்று இதனை செயல்படுத்தினார். இதனால் வைத்திலிங்கத்தின் சொந்த மாவட்டமான தஞ்சாவூரிலேயே அவரது கூடாரம் காலியானது. தஞ்சாவூர் வடக்கில் மொத்தம் உள்ள 44 பொதுக்குழு உறுப்பினர்களில் 37 பேரும், தெற்கில் 36 பொதுக்குழு உறுப்பினர்களில் 21 பேரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்துள்ளனர். வைத்திலிங்கம் போக்கில் மாற்றம் ஏற்பட்டு அவர் செயல்களில் அதிருப்தி ஏற்பட்டதானேலேயே பலரும் இ.பி.எஸ் பக்கம் சென்றனர்.

டெல்டாவில் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்குறியவராக மாறிய ஆர்.காமராஜ் அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பல செயல்களை முன்னின்று நடத்தினார். தஞ்சாவூரிலிருந்து சென்ற பலரையும் ஆர்.காமராஜே வழி நடத்தினார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத வைத்திலிங்கம் தரப்பு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் மூலமாக ஆர்.காமராஜ் குறித்த தகவல்களை எடுத்து கொடுத்து ரெய்டு நடப்பதற்கு காரணமாக இருந்துள்ளார் என்பது எங்களுக்கு தெரிய வந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் உடன் ஆர்.காமராஜ்
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் உடன் ஆர்.காமராஜ்

வைத்திலிங்கத்தின் மூத்த மகன் பிரபு மற்றும் உறவினர் ஒருவர் பெரிய அளவில் அரசுப் பணிகள் பலவற்றை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகின்றனர். தி.மு.க ஆட்சி பொறுப்பிற்கு வந்தவுடன் குறிப்பிட்ட அந்த அமைச்சர் மூலமாக லைன் எடுத்து தங்களுடைய வேலை எதுவும் பாதிக்காமல் கவனித்து கொண்டார். வைத்திலிங்கம் அந்த அமைச்சருடன் தொடர் நட்பில் இருக்கிறார் என அவருக்கு நெருக்கமான வட்டத்திலேயே பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஆர்.காமராஜிக்கு அச்சத்தை ஏற்படுத்தி முடக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ரெய்டு நடக்கிறது. இதன் பின்னணியில் வைத்திலிங்கம் இருக்கிறார். அவர் ஆதரவாலர்கள் சிலர் சமூக வலைதளங்களில் முன்கூட்டியே ரெய்டு நடக்கப்போவதை சூசகமாக பதிவிட்டுள்ளனர் என்பதும் அதனை உண்மை என உணர்த்துகிறது.

ஆர்.காமராஜ் மருத்துவமனையில் ரெய்டு
ஆர்.காமராஜ் மருத்துவமனையில் ரெய்டு

அ.தி.மு.க ஒற்றைத் தலைமை விவகாரம் முடிவிற்கு வந்த பிறகும் டெல்டாவில் தனக்கு போட்டியாகவோ அல்லது தன்னை விட கூடுதலாகவோ ஆர்.காமராஜ் வளர்ந்து விடக்கூடாது என்பதில் வைத்திலிங்கம் தெளிவான காய் நகர்த்தல்களை அரங்கேற்றி வருகிறார். அவரது எண்ணம் ஒரு போதும் நடக்கப்போவதில்லை" என கொந்தளித்தனர்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

வைத்திலிங்கம் தரப்பைச் சேர்ந்த சிலரோ, ``தி.மு.க ஆட்சி பொறுப்பிற்கு வந்தவுடன் முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள் சிலரை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரெய்டு லிஸ்டில் ஆர்.காமராஜ் பெயரும் அடிப்பட்டது. ஆனால் காலதாமதமாகவே தற்போது ரெய்டு நடக்கிறது. காழ்ப்புணர்ச்சியினாலேயே வைத்திலிங்கம் இதற்கு காரணம் என பேசி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி நிறைவு பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் வைத்திலிங்கம் என்பதை அவர்கள் மறந்துவிட வேண்டாம். இப்போதும் அவர் கண் அசைவுக்காக பலர் அமைதியாக காத்திருக்கிறார்கள்" என்றனர்.