``எடப்பாடி பழனிசாமி அணியில் இருப்பவர்கள், கட்சி ஒன்று சேர வேண்டும் என நினைக்கிறார்கள். இதற்காக அவர்கள் எங்களிடம் பேசிவருகிறார்கள். நிச்சயம் இது நடைபெறும்" என தஞ்சாவூரில் வைத்திலிங்கம் தெரிவித்திருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``கடந்த சில நாள்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனைச் சந்தித்துப் பேசி இணைந்து செயல்படுவதாக அறிவித்தார். இந்தச் சந்திப்பின்போது மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் உடன் இருந்தார்.
ஆனால் நான், பிரபாகரன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் செல்லாதது குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்தார். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சந்திப்பதால், நாங்களாக முடிவு செய்து செல்லவில்லை. அதற்குள் எடப்பாடி பழனிசாமி வீண் கருத்துகளை தெரிவித்தார். அவர் டெல்லி செல்லும்போது பொருளாளர் எனக் கூறும் திண்டுக்கல் சீனிவாசனை ஏன் அழைத்துச் செல்லவில்லை.
ஓ.பன்னீர்செல்வத்தின் விருப்பமே பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஒன்றுப்பட்ட அ.தி.மு.க-வை உருவாக்க வேண்டும் என்பதுதான். இதுதான் 95 சதவிகித தொண்டர்களின் எதிர்பார்ப்பாகும். அதற்காகத்தான் அவர் பாடுபட்டுவருகிறார். அதற்காகவே டி.டி.வி.தினகரனைச் சந்தித்து இணைந்து செயல்படுவதாக அறிவித்தார். விரைவில் சசிகலாவையும் சந்திக்கவிருக்கிறார்.
`ஓ.பி.எஸ்- டி.டி.வி சந்திப்பு மாயமானும், மண்குதிரையும் இணைந்ததைப் போன்றது’ என எடப்பாடி பழனிசாமி கூறியதைக் கண்டிக்கிறேன். அவர்தான் சண்டிக்குதிரை. எதற்கும் பயன் இல்லாதவர். கடந்த காலத்தில் அவர் காலில் விழுந்துதான் முதலமைச்சரானார். அதை மறந்துவிட வேண்டாம். ஆனால், தூக்கிவிட்டவர்களையே உதாசீனப்படுத்தியவர். பணபலம், அதிகார பலத்தால் அ.தி.மு.க-வை தனது சொத்தாக்க முயல்கிறார். இரட்டை இலைச் சின்னம் கிடைத்தும் தேர்தலில் தோல்வியே கிடைத்தது. இரட்டை இலைச் சின்னம் இல்லையென்றால் அவருக்கு 2 சதவிகித ஓட்டுகூட கிடைக்காது.

எடப்பாடி அணியில் இருப்பவர்கள் கட்சி ஒன்று சேர வேண்டும் என நினைக்கிறார்கள். இன்றும் அவர்கள் எங்களிடம் பேசிவருகிறார்கள். நிச்சயம் இது நடைபெறும். அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்தித்தால்தான் 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி மலரும். அதற்காகத்தான் ஓ.பி.எஸ் பாடுபட்டுவருகிறார். திருச்சி மாநாட்டைப்போல் விரைவில் கொங்கு மண்டலத்தில் பிரமாண்ட மாநாடு நடத்தப்படும். அதில் சசிகலா பங்கேற்க ஓ.பி.எஸ் அழைப்புவிடுப்பார். ஜெயக்குமார் ஒரு விளையாட்டுப் பிள்ளை. அவர் தெரிவிக்கும் கருத்துகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்றார்.