Published:Updated:

``எடப்பாடி, சபரீசனுக்கு ரகசியமாக போன் செய்தவர்; இது அவர் மனசாட்சிக்குத் தெரியும்” - வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

``சண்டிக் குதிரை எதற்கும் பயன்படாது என்றேன். `எடப்பாடி, சண்டிக் குதிரை இல்லை, பந்தயக் குதிரை' என ஆர்.காமராஜ் கூறியிருக்கிறார். எட்டு தேர்தல்களில் தோல்வி அடைந்தவரை பந்தயக் குதிரை எனப் பேசும் ஆர்.காமராஜுக்கு அறிவிருக்கிறதா?” - வைத்திலிங்கம்

Published:Updated:

``எடப்பாடி, சபரீசனுக்கு ரகசியமாக போன் செய்தவர்; இது அவர் மனசாட்சிக்குத் தெரியும்” - வைத்திலிங்கம்

``சண்டிக் குதிரை எதற்கும் பயன்படாது என்றேன். `எடப்பாடி, சண்டிக் குதிரை இல்லை, பந்தயக் குதிரை' என ஆர்.காமராஜ் கூறியிருக்கிறார். எட்டு தேர்தல்களில் தோல்வி அடைந்தவரை பந்தயக் குதிரை எனப் பேசும் ஆர்.காமராஜுக்கு அறிவிருக்கிறதா?” - வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

ஒரத்தநாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் குறித்து விமர்சனம் செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக வைத்திலிங்கம் தஞ்சாவூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் அவர் கூறியதாவது, ``முன்னாள் முதல்வர் இ.பி.எஸ், நான் ஒரத்தநாடு தொகுதிக்கு எதையும் கேட்கவில்லை, யாருக்கும் எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறியிருக்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டு, ஒரத்தநாட்டில் மூன்றாவது கால்நடை மருத்துவக் கல்லுாரியை கொண்டுவந்தேன்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம்
தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம்

வேளாண்மைக் கல்லூரி, ஐ.டி.ஐ., பேராவூரணியில் கலைக் கல்லுாரி, செங்கிப்பட்டியில் பொறியியல் கல்லுாரி உள்ளிட்டவற்றையும் கொண்டுவந்தேன். தஞ்சாவூரை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவந்தேன். அதன் மூலம் இன்றைக்கு தஞ்சாவூர் மாபெரும் வளர்ச்சியடைந்திருக்கிறது. வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்கிறேன். இதே எடப்பாடி பழனிசாமி 2021-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில், `வைத்திலிங்கம் திறமையானவர். இந்தத் தொகுதிக்கு நிறைய செய்தவர்' என்றார்.

அன்றைக்கு நல்ல வாய், இன்றைக்கு நாற வாய் வைத்துப் பேசியிருக்கிறார். என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல், விரக்தியின் விளிம்பில், தான் முதல்வராக இருந்தோமே என்ற எண்ணம் இல்லாமல், தான் வகித்த பதவிக்கு மரியாதை இல்லாத அளவுக்குப் பேசியிருக்கிறார். நான் எதையும் கேட்வில்லையாம். தஞ்சாவூருக்கு சட்டக் கல்லூரி வேண்டும், மாவட்ட நீதிமன்றம் இடம் பெயர்ந்துவிட்டது. அது காலியாக இருக்கிறது என்றேன். அப்போது, `நீங்கள் ஜெயலலிதாவிடம் எல்லாவற்றையும் கேட்டுப் பெற்றுவிட்டீர்கள் சட்டக் கல்லுாரி அமைக்க ரூ.150 கோடிக்கு மேல் செலவாகும்' என்று சொன்னவர் தற்போது தவறான தகவலைப் பேசியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

`ஆயிரம் ஓ.பி.எஸ்., வைத்திலிங்கம் வந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. துரோகிகளான ஓ.பி.எஸ், தினகரன் இருவரும் இணைந்துவிட்டார்கள்' எனக் கூறியிருக்கிறார். இதே எடப்பாடி பழனிசாமிதான் ஆர்.கே நகர் தொகுதி பிரசாரத்தில், `தினகரனைப்போல் வல்லவர் இல்லை. அரசியல் வித்தகர் இல்லை' என்றார். இப்படி முன்னுக்குப் பின் முரணாகவும், தனக்கு ஆதாயம் என்றால் வாழ்த்தியும் பேசுகிறார். ஓ.பி.எஸ்., தினகரனைச் சந்தித்துவிட்டதால், தனக்கு அரசியலில் வாழ்வு கிடையாது என்பதால், என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் பேசிவருகிறார்.

நான், சண்டிக் குதிரை எதற்கும் பயன்படாது என்றேன். `இ.பி.எஸ், சண்டிக் குதிரை இல்லை, பந்தயக் குதிரை' என ஆர்.காமராஜ் கூறியிருக்கிறார். எட்டு தேர்தல்களில் தோல்வி அடைந்தவரை பந்தயக் குதிரை எனப் பேசும் ஆர்.காமராஜுக்கு அறிவிருக்கிறதா... அ.தி.மு.க-வை அழித்துக்கொண்டிருக்கிற எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க-வைவிட்டுச் செல்ல வேண்டும். அவரைத் தவிர்த்துவிட்டு, அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் எங்களின் எண்ணம்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

துரைக்கண்ணு சிலை திறப்பதை நான் தடுத்தேன் எனப் பொய் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன ரகசியத்தை வெளியில் கூறினால், அசிங்கமாகிவிடும். சந்தர்ப்ப சூழ்நிலையால் சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். தமிழகம் பல முதல்வர்களைக் கண்டிருக்கிறது. அவர்கள் எல்லாம் மிகவும் மரியாதையாக இருந்தனர். ஆனால், முதல்வர் என்ற தகுதி இல்லாத ஒரு நபர் இருந்தார் என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான். அவர் நம்பிக்கைத் துரோகி. பொதுக்கூட்டத்துக்கு 15,000 பேர் வந்ததாகப் பொய் சொல்கின்றனர். மக்களின் ஆதரவும், பேச்சுத் திறமையும் இல்லாதவர், திராவிட இயக்க வரலாறு தெரியாதவர்.

எடப்பாடி பழனிசாமி எத்தனை முறை ரகசியமாக சபரீசனுக்கு போன் செய்திருக்கிறார் என்பது அவரின் மனசாட்சிக்குத் தெரியும். நாங்கள் உங்களைவிட அனைத்திலும் தகுதியானவர்கள். எந்த நேரத்தில் நிரூபிக்க முடியுமோ அப்போது நிரூபிப்போம். ஜெயலலிதாவின் மரணத்தில், `நீதி விசாரணை வேண்டும்' என மக்களின் கோரிக்கையை ஏற்று ஆணையம் அமைப்பதாகக் கூறினார். அப்போது வேண்டாம் எனக் கூற வேண்டியதுதானே. தினகரன் 18 எம்.எல்.ஏ-க்களுடன் சென்றுவிட்டார். ஓ.பி.எஸ்-ஸுடன் பேச்சுவார்த்தை நடத்த நான், தங்கமணி, வேலுமணியும் பலமுறை சென்றோம். நாங்கள் ஓ.பி.எஸ்-ஸையும், இ.பி.எஸ்-ஸையும் இணைக்காவிட்டால் ஆட்சி கவிழ்ந்திருக்கும்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

நன்றி இல்லாத மனிதர் என்றால், எடப்பாடி பழனிசாமிதான். எங்களைச் செத்த பாம்பு என்கிறார். நாங்கள் நசுக்கிக் கொன்ற பாம்பு அவர். நீதிமன்றத் தீர்ப்பு வரட்டும். இரட்டை இலைச் சின்னம் இல்லாமல், எடப்பாடி பழனிசாமி தேர்தலைச் சந்தித்து, எங்களைவிட ஒரு ஓட்டு அதிகமாக வாங்கிவிட்டால், நாங்கள் அரசியல் செய்யவில்லை” என்றார்.