Published:Updated:

`அவர்களது வாழ்க்கை ஒரு சதவிகிதம்கூட பாதிக்காது!' - சேலம் உருக்காலை குறித்து மத்திய அமைச்சர்

Vanathi Srinivasan - dharmendra pradhan
News
Vanathi Srinivasan - dharmendra pradhan

``சேலம் உருக்காலையில் பணிபுரியும் தொழிலாளர் நலன் முற்றிலுமாக பாதுகாக்கப்படும் என அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியளித்தார்'' என்கிறார் வானதி சீனிவாசன்.

இந்தியாவிலேயே அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய பொதுத் துறை நிறுவனமாகச் செயல்பட்டு வருகிறது சேலம் உருக்காலை. இங்கு 2,000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த உருக்காலை கடந்த சில வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால் ஆலையைத் தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Salem Steel Plant
Salem Steel Plant

உருக்காலையைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்தும், ஆலைக்குள் நுழையும் தனியார் நிறுவனங்களைத் தடுக்கவும் கடந்த 10 நாள்களுக்கும் மேலான ஆலை வாயிலில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர் ஊழியர்கள். இந்நிலையில், சேலம் உருக்காலை தொடர்பாக மத்திய உருக்குத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சந்திப்பு தொடர்பாகத் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ``சேலம் உருக்காலை தொடர்பாகக் கடந்த 10 நாள்களுக்குள் எடுத்த நடவடிக்கைகளால் நஷ்டம் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன் முற்றிலுமாகப் பாதுகாக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். மேலும், பங்கு விலக்கல் நடவடிக்கையின் முன்னேற்றத்தைப் பொறுத்து உருக்காலையின் நலன் மேம்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Vanathi Srinivasan
Vanathi Srinivasan

மத்திய அமைச்சருடனான சந்திப்பின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை அறிய வானதி சீனிவாசனிடம் பேசினோம். ``சேலம் உருக்காலை கடந்த சில வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சேலம் தவிர கர்நாடகா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் உருக்காலைகள் உள்ளன. இவை அனைத்தும் செயில் (SAIL) நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் சில நிர்வாகக் காரணங்களால் சேலம் உருக்காலை நஷ்டத்தைச் சந்திக்கும் சூழல் உருவானது. இதுதொடர்பாக, நாங்கள் மத்திய பெட்ரோலியம் மற்றும் உருக்குத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவரிடம் நாங்கள் சில கோரிக்கைகளை வைத்தோம், `சேலம் உருக்காலையில் 2000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். ஆலை நஷ்டத்தால் அவர்களின் வாழ்க்கை ஒரு சதவிகிதம்கூட பாதிக்கப்படக் கூடாது. இதனால் யாரும் வேலை இழக்கக் கூடாது. அந்த நிறுவனத்தை லாபகரமாக வழி நடத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினோம்.

Vanathi Srinivasan
Vanathi Srinivasan

அமைச்சர் எங்களுக்கு அளித்த முதல் உத்தரவாதம், `எந்தக் காரணத்துக்காகவும் தொழிலாளர்கள் நலன் புறக்கணிக்கப்படாது; அவர்கள் தற்போதுள்ள நிர்வாகத்தில் எப்படி இருக்கிறார்களோ பிற்காலத்திலும் அப்படியே பணியாற்றலாம்' என்றார். மூலப் பொருள்களின் விலை அதிகமானதும் ஆலை நஷ்டத்துக்கு ஒரு காரணம். எனவே, மூலப் பொருள்களின் விலையை அமைச்சர் கணிசமாகக் குறைத்திருக்கிறார். மேலும், `வட இந்தியாவிலிருந்து மூலப் பொருள்கள் வாங்கும் சூழ்நிலையை மாற்றி, இனி தென் இந்தியாவிலேயே பொருள்களை வாங்கிக்கொள்ளலாம்' என அறிவித்தார்.

இதனால் போக்குவரத்து செலவு மிச்சப்படும். எனவே, 150 கோடி ரூபாய் நஷ்டத்திலிருந்து ஆலை மீண்டு வரும் சூழல் உருவாகியுள்ளது. சேலம் உருக்காலை உலகப் பிரசித்திபெற்றது. அதற்கென தனிச் சிறப்பு உண்டு. எனவே, செயில் நிறுவனத்திலிருந்து சேலம் ஆலையின் விற்பனையைத் தனி இலாகாவுக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தோம். அதை உடனடியாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

salem steel plant employees Protest
salem steel plant employees Protest

`சேலம் உருக்காலை இன்றைய சமுதாயத்துக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது. இந்த ஆலையில் தயாரிக்கப்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மூலமாக ரயில் பெட்டிகள் உருவாக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, ரயில்வே துறையிடம் பேசி அந்த ஆர்டரையும் சேலம் ஆலைக்கு அளித்தால் வெளியிலிருந்து ஆர்டர் பெற வேண்டிய அவசியமில்லை. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்' எனத் தெரிவித்தோம், மேலும், `சேலம் ஆலையை நேரில் வந்து பார்வையிட வேண்டும்' எனவும் அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்'' என்றவர்,

``நிர்வாகம் சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்றபட்சத்தில் அங்கு தனியார்மயம் தேவைப்பட்டால் அதைக் கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. நிறுவனம் லாபத்தில் இயங்கினால் மட்டுமே தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும். நஷ்டத்தில் இயங்கினால் அவர்களுக்கு எப்படிச் சம்பளம் வழங்க முடியும்?” என்றதோடு முடித்துக்கொண்டார்.