``திருமாவளவன் தான் இருக்கும் கூட்டணியில் பட்டியலின மக்களுக்குத் தீர்வு கிடைக்காது என்பதை இரண்டு ஆண்டுகளாகப் பார்த்துவருகிறார். எந்தப் பட்டியலின மக்கள் பிரச்னைக்கும் தீர்வு காண முடியவில்லை. எதற்காக திருமாவளவன் அங்கு இருக்கிறார்... திருமா சமூகநீதிக்கு எதிரான திமுக கூட்டணியிலிருந்து விலகி, பாஜக கூட்டணிக்கு வர வேண்டும்” என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பதில் தரும் வகையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், “திமுக-வை பலவீனமாக்கும் எந்தச் செயலையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்யாது. கூட்டணி தொடர்பாக யாரையும் ரகசியமாகச் சந்திக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை” என்று தெரிவித்தார்.

திருமாவளவன் பாஜக பக்கம் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்திருப்பது இது முதன்முறையல்ல. இதற்கும் முன்னரும் ‘திருமாவளவனை சமூகநீதிக்கு எதிராக திமுக-வினர் நடத்துகிறார்கள் என்றால், திருமாவளவன் அண்ணா வெளியே வர வேண்டுமில்லையா... பா.ஜ.க-வைத் திட்டிவிட்டு ஒரு பில்டப் கொடுத்துவிட்டு, அதைவைத்து வெளியே வருவதற்கு எங்களை ஏன் பகடைக்காயாகப் பயன்படுத்த வேண்டும். அப்படிப் வெளியே போவதாக இருந்தால் அண்ணா நீங்கள் தயவுசெய்து வாங்க. நானே மாலையைப் போட்டு வெளியே வாங்கனு கூப்பிடுகிறேன்’ என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன் கருத்தைப் பதிவுசெய்திருந்தார். இதுமட்டுமல்லாமல், தன்னிடம் பாஜக தரப்புடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்று திருமாவளவனே சொல்லியிருந்ததும் கவனிக்கத்தக்கது.
“பட்டியலினத் தலைவர்களான ராம்விலாஸ் பஸ்வான், அத்வாலே போன்ற வட நாட்டுத் தலைவர்களைப்போல், தமிழ்நாட்டில் டாக்டர் கிருஷ்ணசாமி, பூவை ஜெகன்மூர்த்தி போன்றோரைத் தன் வயப்படுத்திய பாஜக, தேசிய அளவில் பட்டியலினத் தலைவர்களின் முகங்களில் ஒன்றாக இருப்பவரான திருமாவளவனையும் தன் வயப்படுத்தவே இந்த அரசியல் நகர்வு” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆனால், “தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கொள்கைரீதியாக பாஜக-வோடு சமர் செய்துவரும் திருமாவளவன், பாஜக-வோடு கைகோப்பது நடக்காது ஒன்று” என்பதையும் தெளிவுபடுத்துகிறார்கள்.

இதையே வழிமொழிந்து நம்மிடம் பேசிய விசிக-வின் துணை பொதுச்செயலாளர் கௌதம சன்னா, “பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத கட்சியாக பாஜக இருப்பதால், அந்தக் கட்சியிலிருந்து விலகி வானதி சீனிவாசன் விடுதலைச் சிறுத்தைகளுக்கு வர வேண்டும். பாஜக-விலிருந்து விலகி வருபவர்களுக்கு விசிக-வில் இடமில்லை என்றாலும், வானதி அவர்களுக்குச் சிறப்புச் சலுகை வழங்கப்படும். பாஜக விளம்பரம் தேடுவதற்காகத் தொடர்ந்து தலைவர் பெயரைப் பயன்படுத்துகிறார்கள். மோடி பெயரையோ மற்ற பாஜக தலைவர்களின் பெயரைச் சொல்லியோ நல்லவிதமான வெளிச்சத்தை வாங்க முடியவில்லை. தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய தலைவராக மாறியிருப்பதை கொச்சைப்படுத்தும்விதமாக இவர்களின் பேச்சு இருக்கிறது. கொள்கைரீதியாக ஒருதுளிகூட உடன்பாடு இல்லாத கட்சி பாஜக. எனவே, அவர்களோடு ஒட்டோ, உறவோ இல்லை என்பதைத் தலைவர் தெளிவாகச் சொன்ன பிறகும், அவரது புகழைத் திருடும் வேலையைத் தொடர்ந்து செய்கிறார்கள் பாஜக-வினர்” என்கிறார்.
“தமிழ்நாட்டின் உள்வட்டத்தில் பார்க்கக்கூடிய நபர் வானதி சீனிவாசன் கிடையாது. அகில இந்திய அளவில் இருக்கும் ஒரு தலைவர். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் இயங்கும் ஒரு பெண்மணி. திருமாவளவனை சொல்லித்தான் அவர் புகழ் வெளிச்சம் அடைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை” என்று பதிலடி கொடுக்கும் பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, “சமுதாய நோக்குடன் அனைவரும் சமம் என்று சொல்வதுதான் பாஜக. ஒரு மதத்துக்கோ, தனிநபருக்கோ ஆன கட்சி கிடையாது. ஒரு நாடு... ஒரு மக்கள்... ஓர் இந்தியா... என அனைவரும் சமம் என்பதுதான் பாஜக-வின் முழக்கம்.

கூட்டணி தர்மத்துக்காக உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றாலும்கூட அவர் அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய பக்குவப்பட்ட மனிதராக இருக்கலாம். ஆனால், அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய மக்களின் மனநிலையையும் புரிந்துகொள்ள வேண்டும். அமர்வதற்கு இருக்கை கிடையாது. அப்படிக் கொடுத்தாலும், சரிக்குச் சமமானதாக இல்லை. கூட்டணி தர்மம் என்கிற பெயரில் ஒரு சமூகத்துக்கான தலைவரை அசிங்கப்படுத்துவது என்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் அசிங்கப்படுத்துவது, கேவலப்படுத்துவது என்றுதானே அர்த்தம்?
அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லும் இவர்களின் செயல்பாடு அதை வெளிபடுத்தவில்லை. ‘ஒன்று சேர்...’ என்று டாக்டர் அம்பேத்கர் சொல்வதைத்தான், `இந்தியன் என்கிற உணர்வோடு ஒன்று சேருங்கள்’ என்று பாஜக-வும் பின்பற்றுகிறது. `உங்களுக்கு அங்கீகாரம், அவமதிப்பு இருக்கும் இடத்தைவிட்டு நல்ல இடத்துக்கு விலகி வாருங்கள்’ என்று வானதி சீனிவாசன் குறிப்பிட்டிருப்பது, நாடு முழுவதும் அவர் சென்ற அனுபவத்தால்தான். இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார். எல்லாத் தரப்பு மக்களையும் பார்க்கிறார்.

இதே சமூகத்தைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் பாஜக-வில் சமமாக இருக்கும்போது தமிழ்நாட்டில் தன் பார்வையை அகலப்படுத்திப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கான தலைவன் இருக்கும்போது அவருக்கு ஏன் இந்த ஏற்ற தாழ்வுகள்... `இப்படி ஒரு நிலைபாட்டில் இருக்க வேண்டாம். பாஜக-வுக்கு வாங்க... இங்கு சமபந்தி விருந்து எல்லோருக்கும் காத்துக்கொண்டிருக்கிறது’ என்கிற அர்த்தத்தில் அழைக்கிறார்கள். திமுக இட ஒதுக்கீட்டுக்காக இடம் கொடுக்கிறார்களே தவிர, சமபந்திக்குக் கிடையாது என்பதைப் புரிந்துகொண்டு, வரும் காலத்தில் நல்ல முடிவைத் திருமாவளவன் எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.