Election bannerElection banner
Published:Updated:

``நான் துக்கடாவா? இது தான் ம.நீ.ம ஒரு பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதையா?" - வானதி சீனிவாசன் ஆதங்கம்!

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

கடந்த 5 வருசமா என் தொகுதிக்கு என்னென்ன பணிகளை செஞ்சிருக்கேனு என் சமூக ஊடகப் பக்கத்த பாருங்க. ஒரு பெண் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரசியல்ல உயர்ந்து வரும்போது இப்படித்தான் கேவலப்படுத்துவாங்களா? - என வானதி சீன்வாசன் கொந்தளிப்பு

தமிழக சட்ட மன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் மிகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் சிலர் ஆங்காங்கே அநாகரீக வார்த்தைகள் விடுவதும், பின் சர்ச்சையில் சிக்கி மன்னிப்பு கேட்பதும் வாடிக்கையான நிகழ்வாகிவிட்டது. இந்த ``வார்த்தை போர்" வரிசையில் அடுத்ததாக இருப்பது கோவை தெற்கு தொகுதி வேட்பாளர்கள் கமல்ஹாசனும் வானதி சீனிவாசனும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கேட்டார் ஆ.ராசா | A Rasa apologised to Edappadi Palanisamy

வி.ஐ.பி தொகுதியாக பார்க்கப்படும் கோவை தெற்கு தொகுதியில் ஆரம்பம் முதலே அரசியல் கலைகட்டுகிறது. குறிப்பாக பிரசாரத்தின் போது கமல்ஹாசனின் காலில் காயம் ஏற்பட, அதற்கு வானதி சீனிவாசன் பழங்களை கொடுத்து ஆறுதல் வாழ்த்து கூற... ஆரோக்கிய அரசியலாக தொடங்கி, இப்போது ``துக்கடா அரசியலாக” மோதி நிற்கிறது.

கடந்த சனிக்கிழமை, பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ``வானதி சீனிவாசனுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா?” என கமல்ஹாசனிடம் சவால் விடுத்திருந்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் C.K. குமாரவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் ``அவரது சவாலை ஏற்றுக்கொள்கிறோம். முதலில் இந்தியாவை ஆளும் மாண்புமிகு. நரேந்திர மோடியுடன் எங்கள் தலைவர் விவாதம் செய்ய விரும்புகிறார். அடுத்தடுத்து பா.ஜ.க அமைச்சர்களுடன் விவாதம் செய்து விட்டு கடைசியாக வானதி சீனிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் விவாதம் வைத்துக்கொள்ளலாம். இருமுறை தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட, எந்த ஆளுமையும் இல்லாத அவரோடு விவாதிக்க எங்கள் மாணவர் அணியினர் போதும்.” என்று கடுமையாக விமர்சித்து எழுதப்பட்டிருந்தது.

முதலில் மோடி; பிறகு வானதி சீனிவாசன் போன்ற `துக்கடா’ தலைவர்களுடன் விவாதிக்கலாம் - ம.நீ.ம பதிலடி

இந்நிலையில், இதுகுறித்து பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன், ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை ஒரு வீடியோ பதிவாக வெளியிட்டிருக்கிறார். அதில், `` கமல் அவர்கள் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை வானதியுடன் நடத்தனும்னு எங்க மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சொன்னதுக்கு, என்னை துக்கடா அரசியல்வாதினு மக்கள் நீதி மய்யத்துக்காரங்க சொல்லியிருக்காங்க! நான் இங்கதாங்க கோவைல ஒரு அரசு பள்ளிக்கூடத்துல படிச்சு, வழக்கறிஞராகி, என் குடும்பத்த விட்டு எத்தனையோ நேரம் இந்த மக்களுக்காக என்னை அர்ப்பணிச்சு உழைச்சிருக்கேன்.

கடந்த 5 வருசமா நான் என்னென்ன பணிகளை செஞ்சிருக்கேனு என் சமூக ஊடகப் பக்கத்த பாருங்க. ஒரு பெண் சாதாரண குடும்பத்தில் பிறந்து, அரசியல்ல உயர்ந்து வரும்போது இப்படித்தான் கேவலப்படுத்துவாங்களா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், `` இப்படி பொது வாழ்க்கையில் வரும் பெண்கள் மேல இவங்க வைக்கிற விமர்சனம் இதுதான் என்றால், பெண்களை இவர்கள் காப்பற்றுவார்களா? பெண்கள் நலன்ல அக்கறை செலுத்துவாங்களா? மக்கள் நீதி மய்யமும், கமல் அவர்களும் இதற்கு பதில் சொல்லட்டும்!” என்று கொந்தளித்து முடித்திருந்தார்.

தமிழக அரசியல் களத்தில் தற்போது இந்த விவாதம் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. இதற்கு கமல் எந்த மாதிரியான பதிலைத் தருவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு