கோவை சாய்பாபா காலனி பகுதியிலுள்ள பூங்காவைச் சீர்படுத்தி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிக்கான பூஜை போடப்பட்டது. இதில் கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வும் பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வானதி சீனிவாசன், “அங்கன்வாடி மையங்கள், பூங்காக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதிக அளவில் தொகுதி மேம்பாட்டு நிதி செலவிடப்பட்டுவருகிறது.
தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் மதுபானச் சட்டத் திருத்தம் எங்கு சென்று முடியும் என்று தெரியவில்லை. ஒரு பக்கம் மதுக்கடைகளைப் படிப்படியாகக் குறைப்பதாகக் கூறிவிட்டு, திருமண மண்டபங்களில், வீடுகளில், விளையாட்டு மைதானங்களில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மது அருந்திக்கொள்ளலாம் எனத் தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

மது குடிப்பதை அரசே ஊக்குவிப்பதுபோல் இருக்கிறது. இதற்கு டோர் டெலிவரி செய்யலாம். இது ஏமாற்று விஷயம். ஒரு சமூகச் சீரழிவை ஏற்படுத்தும்.
மக்களைச் சீரழிவை நோக்கி இழுத்துச் செல்லும் முயற்சியை அரசு செய்துவருகிறது. இந்த விதிவிலக்கு, சட்டத் திருத்தம் என்பதை உடனடியாக அரசு திரும்பப்பெற வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் இதை அனுமதிக்க மாட்டோம். மதுக்கொள்கையில் இந்த அரசு நேரடியாகச் செய்ய முடியாததை மறைமுகமாகச் செய்கிறது.

எந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகச் சந்தேகம் எழுகிறதோ... அவர்கள்மீது சட்டரீதியான ஏஜென்சிகள் சோதனை செய்வது இயல்புதான்” என்றார்.