Election bannerElection banner
Published:Updated:

``எத்தனை விமானம் வேண்டும்... முதல்வரை லிஸ்ட் கொடுக்கச் சொல்லுங்கள்'' - கொதிக்கும் வானதி சீனிவாசன்!

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களை மீட்பதில் மத்திய அரசு பாராமுகமாக நடந்துகொள்வதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், ''எத்தனை விமானம் வேண்டும் என்கிற பட்டியலை தமிழக அரசு இன்னும் முறையாக வழங்கவில்லை'' என்கிறார் பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவர் வானதி சீனிவாசன்.

வெளிநாடுவாழ் தமிழர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் தமிழக அரசு போதிய அக்கறை காட்டவில்லை எனத் தமிழகத்தில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

வெளிநாடுகளில், வசிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக, மத்திய அரசு 'வந்தே பாரத்' எனும் திட்டத்தைக் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தியது. இதுவரை வரலாற்றில் இல்லாத ஒருங்கிணைந்த மிகப்பெரும் மீட்பு திட்டம். அதன்படி, அடுத்த 2 மாதத்துக்குள் இந்தத் திட்டத்தின்கீழ் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் மீட்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால் இந்திய அரசாங்கத்தால் வரலாற்றிலேயே அதிக மக்களை மீட்ட திட்டமாக இது விளங்கும் என அப்போது சொல்லப்பட்டது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள்
வெளிநாடு வாழ் இந்தியர்கள்

இந்தநிலையில், கடந்த ஜூலை 3-ம் தேதி வரை இந்தத் திட்டத்தால் 137 நாடுகளிலிருந்து, 5,03,990 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக ஐக்கிய அரசு நாடுகளிலிருந்து, 57,305 பேர் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுள்ளது. அதேபோல, இந்தியாவிலேயே அதிகபட்சமாக 94,085 பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர். ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சுமார் 20,000 பேர் மட்டுமே இதுவரை அழைத்துவரப்பட்டுள்ளனர். இன்னும் பலர் அங்கே சிக்கித் தவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆரம்பம் முதலே, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களை மீட்பதில் இந்தியா பாராமுகமாக நடந்துகொள்வதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், ''மத்திய அரசு தயாராகத்தான் இருக்கிறது, மாநில அரசுதான் அழைத்து வருபவர்களைப் பராமரிக்க போதிய வசதியில்லாததால் அக்கறை காட்டாமல் இருக்கிறது'' எனத் தமிழக பா.ஜ.க-வினர் விளக்கமளிக்க, தமிழக அரசுக்கு எதிராக அரசியல் கட்சிகள் கொதித்தெழுந்தன.

கடந்த ஜூன் 3 முதல் 8-ம் தேதி வரை, சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி தலைமையிலான, மனிதநேய ஐனநாயகக் கட்சி தொடர் இணையவழிப் போராட்டங்களையும் களப்போராட்டங்களையும் முன்னெடுத்தது. ஆர்.நல்லகண்ணு, பழ.நெடுமாறன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சத்யராஜ், டி.ராஜேந்தர், இயக்குநர் விக்ரமன் உள்ளிட்ட திரை உலகத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் பதாகைகளை ஏந்தி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

வெளிநாடுவாழ் தமிழர்களை மீட்பது தொடர்பாக, தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஜூன் 30-ம் தேதி நடந்த அந்த வழக்கு விசாரணையில், 'தமிழகத்தில் விமானம் தரையிறங்கத் தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை' என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஜூலை 2-ம் தேதி மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களைத் தாயகம் அழைத்து வருவதற்கான சாதகமான திட்டத்துடன், வரும் திங்களன்று (6.7.2020) பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது. ஆனால், இன்று விசாரண எதுவும் நடைபெறவில்லை. நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில், வெளிநாடு வாழ் தமிழர்களைக் மீட்கக் கோரும் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று, பண்ருட்டி வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில், ஆர்ப்பாட்டமும், இணையவழியாகக் கருத்தரங்கமும் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கும், பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். தமிழக அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியால் உருவாக்கப்பட்ட ஹேஸ்டேக் முதலிடம் பிடித்தது. அதேவேளை வெளிநாடுகளில் வசிக்கின்றவர்கள் அங்கே பாதுகாப்பாக இருக்கும்போது, கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள இங்கு ஏன் வர விரும்ப வேண்டும் என்கிற எதிர்க்குரல்களும் ஒலிக்காமல் இல்லை.

இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர், வேல்முருகனிடம் பேசினோம்,

''முதலில் அனைவரும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒட்டுமொத்தமாக வெளிநாடுகளில், வசிக்கும் அனைவரையும் அழைத்து வர வேண்டும் என்கிற கோரிக்கையை நாங்கள் முன்வைக்கவில்லை. வேலை இல்லாமல், உணவு கிடைக்காமல், தங்குவதற்கு இடமில்லாமல், வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியத் தூதரங்களில் பதிந்து வைத்துக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கான நபர்களை மீட்க வேண்டும் என்கிற கோரிக்கையைத்தான் நாங்கள் முன்வைக்கிறோம்.

கேரளா அரசு முறையான நடவடிக்கைகளை எடுத்ததன் வாயிலாக, வந்தேபாரத் திட்டத்தின் வாயிலாக வெளிநாடுகளில் உள்ள, மலையாளிகள் அனைவரும் பத்திரமாகத் தங்கள் மாநிலத்துக்குத் திரும்பிவிட்டனர். ஆனால், தமிழக அரசு அது போன்ற நடவடிக்கையை விரைவாக முன்னெடுக்கவில்லை. இதுவரை வளைகுடா நாடுகளில் 17 பேர் பசி, பட்டினி, மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டு இறந்து போயிருக்கின்றனர். அதேபோல, வீட்டுவேலைக்காகச் சென்ற பெண்கள் வேலையைவிட்டு நீக்கப்பட்டு, நடுத்தெருவில் நிற்கிறார்கள். பாதுகாப்பற்ற இடங்களில் தங்குவதால் பாலியல் அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகி வருகிறார்கள். இது குறித்து தூதரக அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் அவர்கள் போதிய அக்கறை காட்டாமல் இருக்கிறார்கள்.

வேல்முருகன்
வேல்முருகன்

அதனால், வளைகுடா நாடுகளில் பதிவு செய்து காத்திருப்பவர்களை மத்திய மாநில உடனடியாக மீட்க வேண்டும். அடுத்ததாக, வெளிநாடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கென தனி வாரியமும் கேரளாவில் உள்ளது போன்ற தனி அமைச்சகத்தையும் உருவாக்க வேண்டும்'' என்கிற கோரிக்களைகளையும் முன்வைக்கிறார் வேல்முருகன்.

தொடர்ந்து, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர், தமிமுன் அன்சாரியிடம் பேசினோம்,

''இந்தியாவிலேயே மலையாளிகளுக்கு அடுத்தபடியாகத் தமிழர்கள்தான் வெளிநாடுகளில் அதிகமாகப் பணிபுரிந்து வருகிறார்கள். அங்கே கடுமையாக உழைத்து, இங்கே பணம் அனுப்பிவருகிறார்கள். அதன்மூலமாக நம் நாட்டின் அந்நிய வருவாய் பெருக அவர்கள் வழிவகுக்கிறார்கள். அவர்களின் கடுமையான உழைப்பின் காரணமாகத்தான், தமிழக நகரங்களில் வணிக வளாகங்கள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஆகியவை உருவாகியிருக்கின்றன. ஓட்டு வீடுகளும் குடிசை வீடுகளும் மாடி வீடுகளாக மாறியிருக்கின்றன.

தங்களை மேம்படுத்திக்கொள்வது மட்டுமல்லாது, தங்களுடைய சொந்த ஊர்களில், ஏரி குளங்களைத் தூர்வாருவது, நூலகங்கள் அமைப்பது போன்ற நலப்பணிகளும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், கொரோனா நெருக்கடியின் காரணமாக, வேலை இழப்புக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் தற்போது ஆளாகியிருக்கிறார்கள். அங்கு சூழல் சரியில்லாமல் இருப்பதால், உயிர் பிழைத்தால் போதும் என ஊருக்கு வர விரும்புகிறார்கள். அவர்களை அழைத்து வருவதில் தமிழக அரசு தொடர்ந்து சுணக்கம் காட்டிவருகிறது. வந்தே பாரத் திட்டத்தில் தமிழர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறார்கள்.

தமிமுன் அன்சாரி
தமிமுன் அன்சாரி

கூடுதலாக, விமான சேவையைப் பெற தமிழக அரசு உடனடியாக முன்வர வேண்டும். மூன்று நாள் டாஸ்மாக் வருமானத்தை செலவு செய்தாலே உலகமெங்கும் தமிழகத்துக்கு வரவிரும்பும் தமிழர்களை அழைத்துவந்துவிடலாம். மக்கள் நம்பிக்கை இழந்து, கூடுதலாகக் கட்டணம் செலுத்தி சிறப்பு விமானத்தில் வருகிறார்கள். ஏற்கெனவே, வருமானமிழந்து இருக்கும் அவர்களுக்கு இது கூடுதல் சுமையைத் தருகிறது. வருபவர்களுக்கு பரிசோதனைக்கு, தனியாகத் தங்குவதற்கு விடுதிக் கட்டணம் என அதற்கும் பல்லாயிரம் செலவாகிவிடுகிறது. அதனால், கேரளாவில் பின்பற்றப்படும் வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். அதாவது, அந்த நாடுகளில் பரிசோதனை செய்து நெகட்டிவ் என முடிவு வந்தவர்களை நேரடியாக வீட்டுக்குச் சென்று தனிமைப்படுத்திக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். 10 லட்சம் குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்னை இது. அதனால், தமிழக அரசு இனிமேலும் இந்த விஷயத்தில் சுணக்கம் காட்டக் கூடாது'' என்கிறார் தமிமுன் அன்சாரி.

"வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களை அழைத்து வருவதில் தமிழக அரசுதான் அக்கறையில்லாமல் இருக்கிறது'' என்கிற குற்றச்சாட்டு குறித்து, அ.தி,மு.க-வின் செய்தித் தொடர்பாளர், கோவை செல்வராஜிடம் பேசினோம்,

''தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இருந்து தமிழர்கள் அழைத்துவரப் பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதுவரை, சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய நான்கு விமான நிலையங்களில், மொத்தமாக 22,040 பேர் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். இதற்காகவே ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்து நடவடிக்கை எடுத்து வருகிறது தமிழக அரசு. இந்த விஷயத்தில் மாநில அரசு மட்டுமே முடிவெடுக்க முடியாது. மத்திய அரசின் ஒத்துழைப்பும் தேவை. ஆனால், தமிழக அரசை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

இரண்டு மாதங்களாக, உலகெங்கும் வாழும் தமிழர்களை அழைத்துவர, 560 விமானங்களை வேண்டுமென்று மத்திய அரசுக்கு பட்டியல் கொடுத்துள்ளோம். ஆனால், இந்த 40 நாள்களில், வெறும் 40 விமானங்களில்தான் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். நிதி ஒதுக்குவதில்கூட பாரபட்சம் காட்டுகிறது மத்திய அரசு. மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், இந்நேரம் அனைவரையும் அழைத்து வந்திருக்கலாம். மத்திய அரசு தங்களின் நடவடிக்கைகளை இனியாவது வேகப்படுத்த வேண்டும். நாங்கள் மக்களின் பக்கம் நின்று இந்தக் கருத்துகளைச் சொல்கிறோம். பா.ஜ.க-வினர் அரசைக் காப்பாற்ற பேசிக்கொண்டிருக்கிறார்கள்'' என்றார் காட்டமாக.

`வந்தே பாரத்'... வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தியர்கள் சந்திக்கும் நெருக்கடிகள் என்னென்ன?

மத்திய அரசின் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, பா.ஜ.க மாநிலத் துணைத்தலைவர், வானதி சீனிவாசனிடம் பேசினோம்,

''வெளியுறவுத்துறை அமைச்சர், தமிழகத்துக்கு எவ்வளவு விமானங்கள் வேண்டுமானாலும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறார். தமிழக அரசுதான் விமானங்களை அனுமதிக்க மறுக்கிறது. ஜூன் முதல் வாரத்தில் மட்டும் அனுமதித்தார்கள். பிறகு, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதைக் காரணம் காட்டி நிறுத்திக்கொண்டார்கள். இதுகுறித்து முதல்வருக்கு தனிப்பட்ட முறையில் நான் மூன்று முறை ட்வீட் செய்திருக்கிறேன். எந்த ரூட்டில் எத்தனை விமானம் வேண்டும் என்கிற லிஸ்ட்டை முதல்வரைக் கொடுக்கச் சொல்லுங்கள், பா.ஜ.க-வின் சார்பில் நாங்களும் அழுத்தம் கொடுக்கிறோம். ஏற்கெனவே லிஸ்ட் கொடுத்ததாகச் சொல்வதில் உண்மையல்ல.

வந்தே பாரதம்
வந்தே பாரதம்

யாருக்காவது பாதிப்பிருந்தால் அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகத்தைத் தொடர்புகொள்ளலாம். வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு இணையதளம் வழியாகப் புகார் தெரிவிக்கலாம். தூதரகங்களில் முறையாகப் பதில் அளிக்கவில்லை என்றால், எந்த நாட்டு தூதரகம் என்பதை என்னிடம்கூட இணையதளம் வழியாகத் தெரிவிக்கலாம். நாங்கள் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம். இந்த விஷயத்தில் மத்திய அரசின் மீது எந்தப் பிழையும் இல்லை, மாநில அரசு இங்கே விமானங்களைத் தரையிரக்கத் தயாராக இருந்தால், எத்தனை விமானம் வேண்டுமானாலும் கொடுக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது'' என்றார்.

இனிமேலும் மத்திய மாநில அரசுகள் ஒருவரையொருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருக்காமல், விரைந்து நடவடிக்கை எடுத்து வெளிநாடுகளில் தவிக்கின்ற மக்களைக் காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு