Published:Updated:

வன்னியர் உள் ஒதுக்கீடு: 7 வினாக்களுக்கு விடை இல்லை - அரசின் மேல்முறையீடு அரசியலுக்காக மட்டும்தானா?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்று பார்ப்பதற்கு முன்பாக இந்த இட ஒதுக்கீடு கடந்துவந்த பாதையைப் பார்ப்போம்.

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆட்சிக்கு வந்தது முதலே இந்த அரசு, வன்னியர் இட ஒதுக்கீடு சம்பந்தமான நடவடிக்கைகளில் மிகச் சரியாகச் செயல்பட்டுவருவதாக ஒரு தரப்பினர் பாராட்டினாலும், அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சரியான வாதங்களை முன்வைக்காததால்தான் இட ஒதுக்கீடு ரத்தானது, தற்போதும் ஃபார்மாலிட்டிக்காகத்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்குச் சென்றிருக்கின்றனர் என்கிற விமர்சனங்களையும் ஒருசிலர் முன்வைக்கின்றனர். உண்மையில், வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன என்று பார்ப்பதற்கு முன்பாக இந்த இட ஒதுக்கீடு கடந்துவந்த பாதையைப் பார்ப்போம்.

எடப்பாடி பழனிசாமி- ராமதாஸ்
எடப்பாடி பழனிசாமி- ராமதாஸ்

கடந்த பிப்ரவரி 26-ம் தேதி, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டு மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'வன்னியர்களுக்கான 10.5 சதவிகித தனி ஒதுக்கீடு தற்காலிகமாக வழங்கப்படுகிறது. சாதிவாரியான கணக்கெடுப்பு வந்த பிறகு இந்த அளவு மாற்றியமைக்கப்படும்' என்றார். தொடர்ந்து, தென் மாவட்டங்களில் அதிமுக-வினர் தேர்தல் பிரசாரம் செய்தபோது இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அப்போது, ஓ.பி.எஸ்., ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்டோர், `வன்னியர் இட ஒதுக்கீடு தற்காலிகமானதே’ என்று பேச, மருத்துவர் ராமதாஸ் உடனடியாக அதற்கு பதிலடி தந்தார். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வருமா என்கிற சந்தேகம் எழுந்தது. பலரும் அது குறித்த கோரிக்கையை முதல்வர் ஸ்டாலினுக்கு முன்வைத்தனர். கடந்த ஜூலை 26-ம் தேதி அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், வன்னியர் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்ததை எதிர்த்து, 25-க்கும் மேற்பட்ட அமைப்புகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. தினம்தோறும் இந்த வழக்குகளை விசாரிக்கவேண்டியிருப்பதால் இந்த வழக்கு சென்னை ஹைகோர்ட்டின் மதுரைக் கிளைக்கு மாற்றப்பட்டது. அங்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு அந்த வழக்குகளை விசாரித்துவந்தது. இந்த நிலையில், வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான ஏழு வினாக்களுக்கு அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம் போதுமானதாக இல்லை என்று கூறி, வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் செல்லாது என்று கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி தீர்ப்பளித்தது.

முதல்வர் ஸ்டாலினுடன் வேல்முருகன்
முதல்வர் ஸ்டாலினுடன் வேல்முருகன்

இது வன்னிய சமூகத்தைச் சேர்ந்த மக்களையும், இந்த இட ஒதுக்கீட்டை ஆதரித்து வந்தவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ``இது மிகப்பெரிய ஏமாற்றம்’’ என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் அவர், ``தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த ஆட்சியில் இயற்றப்பட்டது என்றாலும், அதிலுள்ள நியாயத்தை தமிழகத்தின் இன்றைய ஆட்சியும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்கவேண்டிய கடமையும் பொறுப்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு. அதை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். 10.5% உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது உள்ளிட்ட அனைத்துச் சட்ட மற்றும் அரசியல் நடவடிக்கைகளையும் தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்'' என்று கோரிக்கையை முன்வைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது' எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டார். மேலும், இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து கோரிக்கையும் முன்வைத்தார். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், ``தீர்ப்பு விவரம் முழுமையாகக் கைக்கு வந்தவுடன், அது குறித்து சட்ட வல்லுநர்கள், முதலமைச்சருடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கும்'' என கருத்து தெரிவித்திருந்தார். அந்தவகையில் தற்போது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்குச் சென்றிருக்கிறது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'இட ஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு தவறானது. இந்த உத்தரவால் தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்' என்று தமிழக அரசு அதில் தெரிவித்திருக்கிறது. தவிர, பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக இரண்டு மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பாலு
பாலு

இந் தநிலையில், இது தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து பா.ம.க-வின் செய்தித் தொடர்பாளர் பாலுவிடம் பேசினோம்,

``தமிழக அரசு, இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு வாங்குவதற்காக முழுமூச்சோடு பணிகளைத் தொடங்கி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களின் கருத்துகளைப் பெற்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது. நாங்கள் இதற்காகத்தான் காத்திருந்தோம். நாங்களும், மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்திருக்கிறோம். தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் எடுத்துவைக்கும் வாதங்களைப் பொறுத்துத்தான் தடை உத்தரவைப் பெற முடியும். காரணம், இது ஒரு மாநிலம் சம்பந்தப்பட்ட விஷயம். இது சார்ந்த நடவடிக்கைகளை இந்த அரசு மிகச் சரியாகவே செய்துவருகிறது''

வன்னியர் இட ஒதுக்கீடு: 40 ஆண்டுக்காலப் போராட்டம் முதல் 10.5% ரத்து வரை - ஒரு டைம்லைன் பார்வை!

மூத்த பத்திரிகையாளர் அய்யநாதனிடம் இது குறித்துப் பேசினோம்.

``அரசமைப்புச் சட்டப்படி அனைவருக்கும் அளிக்கப்பட்ட உரிமையின்படி மேல்முறையீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். எந்தவோர் அரசும் ஒரு வழக்கில் தோற்கும்போது அதோடு நிற்காது. அதேபோல எந்தவொரு தரப்பினரும் தங்களுக்கான நீதிக்காக இறுதியாக உச்ச நீதிமன்றத்தை நாடுவார்கள். இதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேபோல, தாங்கள் எடுத்த அரசியல் நடவடிக்கைகள் கண்துடைப்பு அல்ல என்பதை நிரூபிக்கவும் கடைசிவரை போராடுகிறார்கள். ஆனால், உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு தற்போது அரசு அளித்திருக்கும் மனுவில் பதில் இல்லை. அதனால் இந்த மேல்முறையீடு எந்தவிதத்திலும் இவர்களுக்கு வெற்றியைத் தராது. காரணம், இவர்களின் நடவடிக்கைகள் நியாயத்தை நோக்கியதாக இல்லை. அரசியல்ரீதியாக தாங்கள் செய்தது சரிதான் என திரும்பத் திரும்பத் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எனவே அது வெல்லாது'' என்கிறார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மீதான விமர்சனங்கள் குறித்து, தி.மு.க-வின் செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்.

``எங்கள் தலைவர் முதலமைச்சர் ஆவதற்கு முன்பு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போதே கொடுத்த வாக்குறுதி, வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு. அதுமட்டுமல்ல, 2016 தேர்தல் அறிக்கையிலேயே வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு குறித்து, வாக்குறுதி அளித்திருந்தோம். சமூகநீதியின்பால் அக்கறைகொண்ட தி.மு.கழகம் ஆரம்பம் முதலே இந்த விஷயத்தில் மிக உறுதியாக இருந்துவருகிறது. அதனால் எங்கள் செயல்பாட்டின்மீது விமர்சனம் வைப்பது, சந்தேகத்தை எழுப்புவது தேவையற்றது. எம்.பி.சி-யில் மொத்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட சமூகங்கள் இருந்தாலும், வன்னியர்கள் பெரும்பான்மை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். அதுமட்டுமல்ல, எம்.பி.சி இட ஒதுக்கீடு வருவதற்கு அவர்களின் போராட்டமும் ஒரு காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால், அதிமுக இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எடுத்த முடிவுதான் தற்போதைய இந்த நிலைக்குக் காரணம். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அரசுக்கு இருக்கிறது. அதற்கான முழுமையான தரவுகளோடு இந்த அரசு வழக்கை எதிர்கொள்ளும்'' என்கிறார் அவர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு