Published:Updated:

வன்னியர் தனி இட ஒதுக்கீடு போராட்டம்: பா.ம.க-வின் நோக்கம் வாக்குவங்கியா, சமூகநீதியா?

வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்
வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம்

பா.ம.க-வின் தற்போதைய இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் நியாயமானதா இல்லை அரசியல் ஸ்டன்ட்டா எனப் பார்ப்பதற்கு முன்பாக, வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த அடிப்படையான விஷயங்களைப் பார்ப்போம்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பா.ம.க மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், நேற்று சென்னை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து, பா.ம.க இளைஞரணிச் செயலாளர் அன்புமணி ராமதாஸை, முதல்வர் எடப்படி பழனிசாமி பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். முதல்வரைச் சந்தித்துவிட்டு வெளியில் வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அன்புமணி,

``ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கிற நேரத்தில் முதலமைச்சர் அவர்கள் எங்களை அழைத்து உங்கள் கோரிக்கையைக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். அவர்களைச் சந்தித்து எங்களின் கோரிக்கையை நாங்கள் சொன்னோம். உடன் துணை முதல்வரும் இருந்தார். இந்தக் கோரிக்கை ஏதோ ஒரு சாதிப் பிரச்னை இல்லை. யாருக்கும் எதிரான போராட்டம் இல்லை. எந்த அமைப்புக்கும், சமுதாயத்துக்கும், அரசியல் கட்சிக்கும் எதிரான போராட்டம் கிடையாது.

இது ஒரு சமூகநீதிப் பிரச்னை. இதைத் தமிழகத்தின் வளர்ச்சிப் பிரச்னையாகப் பார்க்க வேண்டும். இந்தச் சமூகம் முன்னேறினால்தான், தமிழகம் முன்னேற்றம் அடையும் என்றெல்லாம் பேசியிருக்கிறோம். முதல்வரும் அதைக் கேட்டுக்கொண்டு, `நிச்சயமாக நல்ல முடிவை அறிவிப்பேன்’ என்று கூறியிருக்கிறார்கள். நாற்பது ஆண்டுக்காலமாக ஒரு நியாயமான கோரிக்கைக்காக நாங்கள் போராடிவருகிறோம். இன்றளவும் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை'' என்று கருத்து தெரிவித்தார்.

அன்புமணி
அன்புமணி

ஆனால், பா.ம.க தற்போது இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருப்பது வரும் சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சிக்கான பேரத்தை அதிகப்படுத்தவே என்கிற குற்றச்சாட்டுகள் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. தவிர, நேற்றைய போராட்டத்தில் நடந்த பல சம்பவங்கள் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தநிலையில், பா.ம.க-வின் தற்போதைய இந்தப் போராட்டம் நியாயமானதா இல்லை அரசியல் ஸ்டன்ட்டா எனப் பார்ப்பதற்கு முன்பாக, வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த அடிப்படையைப் பார்ப்போம்.

இட ஒதுக்கீட்டுப் போராட்டம்!

தமிழகத்தில் பெரும்பான்மையான மக்கள்தொகையைக் கொண்ட சமூகங்களில் ஒன்றான வன்னிய சமூகம், 1989-ம் ஆண்டுக்கு முன்புவரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்தான் இருந்தது. அதில், ``மொத்தமுள்ள 50 சதவிகித இட ஒதுக்கீட்டில் தங்கள் சமூக மக்கள் வெறும் ஒரு சதவிகிதப் பலன்களைத்தான் அனுபவிக்கிறார்கள். ஏற்கெனவே சமூக, பொருளாதாரரீதியாக முன்னேறிய சமூகங்களுடன் போட்டியிட முடியவில்லை; அது நியாயமுமில்லை. அதனால், எங்கள் சமூகத்துக்கு எங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப, 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்'' என வன்னியர் சங்கம் எனும் அமைப்பைத் தொடங்கி போராட்டம் தொடங்கப்பட்டது. அந்த அமைப்பை மருத்துவர் ராமதாஸ்தான் தலைமையேற்று நடத்தினார். ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டபோதும் 1987-ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட ஒருவாரத் தொடர் சாலை மறியல் போராட்டம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது. ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்த்தது. துணை ராணுவம் வரவழைக்கப்பட்டு, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில், 21 பேர் பலியானார்கள்.

 ராமதாஸ் - கருணாநிதி
ராமதாஸ் - கருணாநிதி

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு உருவாக்கம்!

தொடர்ந்து, தமிழக முதலைமைச்சர் எம்.ஜி.ஆருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அவரின் மறைவுக்குப் பிறகு, அவரின் மனைவி ஜானகி முதலமைச்சர் ஆன பிறகு அவருடன் பேச்சுவார்த்தை, கவர்னர் அலெக்ஸாண்டரிடம் கோரிக்கை, பிரதமர் ராஜீவ் காந்தியிடம் கோரிக்கை, குடியரசுத் தலைவரான ஆர்.வெங்கட்ராமனிடம் கோரிக்கை எனப் பலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டும், அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை. 1989-ல் நடந்த நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதல்வரான கருணாநிதி, வன்னிய சமூகத்துடன் சேர்த்து 108 சமூகங்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக்கான மொத்த இட ஒதுக்கீட்டான 50 சதவிகிதத்திலிருந்து தனியாக 20 சதவிகிதத்தைப் பிரித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எனத் தனிப்பிரிவை உருவாக்கினார். இதற்கு வன்னிய சமூகத் தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்தபோதும், மருத்துவர் ராமதாஸ், மிகக்கடுமையாக விமர்சித்தார். அதே காலகட்டத்தில்தான், பாட்டாளி மக்கள் கட்சியையும் தொடங்கினார். வன்னியர் சமூகத்துக்கு கருணாநிதி துரோகம் இழைத்துவிட்டதாகவே கருதினாலும், பின்னாளில் கருணாநிதிக்குப் பாராட்டு விழா நடத்தினார் ராமதாஸ் என்பதும் கவனிக்கத்தக்கது.

20 சதவிகித தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டம்!

தொடர்ந்து,`1989-ல் இருந்து கடந்த 32 ஆண்டுகளில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் பெரும்பான்மையான சமூகமாக இருக்கும் வன்னியர்கள், வெறும் 7-8 சதவிகிதப் பலன்களை மட்டுமே அனுபவிக்கின்றனர். அதனால், வன்னியர்களுக்கு மட்டும் 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்’ என தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவந்தார் மருத்துவர் ராமதாஸ். இந்தநிலையில்தான், கடந்த மாதம் 22-ம் தேதி, பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து நடத்திய கூட்டுப் பொதுக்குழுவில்,`தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் மற்றும் பிற சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்டிருக்கும் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி டிசம்பர் 1-ம் தேதி முதல் முதற்கட்ட போராட்டம் நடத்தப்படும்; தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பின்னர் இறுதிக்கட்ட போராட்டம் நடத்தப்படும்' என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நேற்று சென்னையில் போராட்டமும் தொடங்கி நடந்துவருகிறது.

போராட்டம்
போராட்டம்

கோரிக்கையின் நியாயமும் பா.ம.க மீதான விமர்சனமும்!

``தமிழகத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட சமூகமாகவும், அதேநேரத்தில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களின் மக்கள்தொகைக்கேற்ப பிரதிநிதித்துவமும் இல்லாமல் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அவர்களுக்கான உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும். அதுதான் சமூகநீதி. அரசின் கடமையும்கூட. அதனால், அந்தக் கோரிக்கைக்கான நியாயத்தை நாம் புறம்தள்ள முடியாது. அதேவேளையில், தொடர்ந்து நாற்பதாண்டுகளாக தனி இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை பா.ம.க முன்வைத்தாலும், மாநிலத்திலும் மத்தியிலும் கூட்டணியில் இருந்துகொண்டு, ஆட்சி அதிகாரத்தில் பங்குபெற்றபோதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, தற்போது அதுவும் தேர்தல் நேரத்தில், இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பது என்பது தேர்தல் பேரத்துக்காகத்தான். தவிர, வன்னிய மக்கள் சமீபகாலமாக பா.ம.க-விலிருந்து தி.மு.க-வின் பக்கம் திரும்பி வருகின்றனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கே பெரும்பான்மையாக வாக்களித்தனர். அந்த வாக்குவங்கியை தக்கவைத்துக்கொள்வதற்காகத்தான் இந்தப் போராட்டம்'' என்கிற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. வன்னிய சமூகத்தைச் சேர்ந்த பல அமைப்புகளே இந்தக் குற்றச்சாட்டுகளை வலுவாக முன்வைக்கின்றன. அதேபோல, பா.ம.க முன்வைக்கும் 20 சதவிகிதம் என்பதன் மீதும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

தனி ஒதுக்கீடு போராட்டம்; களமிறங்கும் பா.ம.க - ராமதாஸ் மீது பாயும் வன்னியர் சமூக அமைப்பு!

பா.ம.க தரப்பு விளக்கம்!

``நாங்கள் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டுதான்வருகிறோம். கடந்த நவம்பர் மாதம் 1-ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து எங்கள் ஐயா ராமதாஸ், 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார். அதன் பிறகு கடந்த ஓராண்டில் பலமுறை இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஐயா, முதல்வருக்குக் கடிதமும் எழுதினார். எங்கள் பொதுக்குழு, செயற்குழுவில் தொடர்ச்சியாகத் தீர்மானமும் நிறைவேற்றிவருகிறோம். ஆனால், அவை எதுவுமே அரசால் கண்டுகொள்ளப்படவில்லை. அதனால்தான் போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம்.

எங்களிடம் இருக்கிற கணக்கின்படி, தமிழக மொத்த மக்கள்தொகையில் 23 சதவிகிதத்துக்கும் மேல் இருக்கிறோம். அதனால் 20 சதவிகிதம் கேட்கிறோம். சரி, அது சரியான கணக்கு இல்லையென்றாலும் அரசு, சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தட்டும். தவிர, நாங்கள் எங்கள் சமூகத்துக்கு மட்டும் உரிய பிரதிநிதித்துவம் கேட்கவில்லை. அனைத்து சமூகங்களுக்கும்தான் கேட்கிறோம். வன்னியர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது போடப்பட்ட மூன்று தீர்மானங்களில், பட்டியல் சமூகத்துக்கு, 18-க்குப் பதில் 22 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற தீர்மானமும் ஒன்று. அதனால், இந்தப் போராட்டத்தை வன்னியர்களுக்கான போராட்டமாக மட்டும் பார்க்கக் கூடாது. அதேபோல நாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது கேட்கவில்லை என்பவர்கள், அப்போது வேறு யார் எங்களுக்காகக் கேட்டார்கள் என்பதைச் சொல்லட்டும். தேர்தல் வாக்குவங்கிக்கும் இந்தப் போராட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை'' என்கின்றனர் காட்டமாக.

ராமதாஸ்
ராமதாஸ்

சாதி முழக்கங்கள்!

இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, தங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு மருத்துவர் ராமதாஸ் 'இட ஒதுக்கீடு போராட்டத்தின் தேவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்' என்கிற தலைப்பில் இணையவழியாக ஒரு கடிதம் எழுதினார். அதில், ``தங்களின் பகுதிகளிலுள்ள பிற சமுதாய மக்கள், பிற அரசியல் கட்சிகளிலுள்ள வன்னிய சொந்தங்கள் ஆகியோரைச் சந்தித்து வன்னியர்களின் சமூகநிலை, அவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டியதற்கான தேவைகள் ஆகியவை குறித்து விரிவாக விளக்கிக் கூறி தெளிவுபடுத்த வேண்டும்'' என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். அதை ஏற்று மற்ற மக்களுக்குப் புரியவைத்தார்களோ இல்லையோ, ஆனால், எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டனர். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியிருக்கும் ஒரு சமூகம், அதற்கான உரிமைப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட முழக்கங்கள் சமூக நீதிக்கான முழக்கங்களாக இல்லாமல், சாதிப் பெருமிதம் குறித்த முழக்கங்களாக இருந்ததால் பலரும் முகம் சுளித்தனர்.

``நிச்சயமாக நாங்கள் வன்முறைக்கு முற்றிலும் எதிரானவர்கள். யாரும் வன்முறையைக் கையில் எடுக்கக் கூடாது. எங்களை ஏதோ வன்முறைச் சமுதாயமாக மாற்றாதீர்கள். அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்காதீர்கள். குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லாமல், உண்ண உணவு இல்லாமல் இரவு முழுவதும் பயணம் மேற்கொண்டுவரும் அவர்களைக் காவல்துறை திடீரென்று வழிமறித்து நிறுத்தி, மணிக்கணக்கில் தடுத்து நிறுத்திவைத்திருந்தார்கள். யாரோ செய்வதைவைத்து எங்கள் கட்சியும் சமுதாயமும் இப்படித்தான் என்பதுபோலச் சித்திரிக்க வேண்டாம்.''
அன்புமணி ராமதாஸ் எம்.பி, இளைஞரணித் தலைவர், பா.ம.க

மறியல், கல்வீச்சு, போக்குவரத்து நிறுத்தம்!

அதேபோல, சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்களை சென்னைக்குள் வரவிடாமல் காவல்துறையினர் சென்னை புறநகர்ப் பகுதிகளிலேயே தடுத்து நிறுத்தினர். இதை எதிர்த்து சாலை மறியலில் ஈடுபட்ட அவர்கள், காவல்துறையின் தடுப்புகளைத் தாண்டி முன்னேறிச் செல்ல முற்பட்டனர். அதோடு, பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்த ரயிலின் மீது கற்களைக் கொண்டு தாக்கி ரயிலைத் தடுத்து நிறுத்தியதால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளில் பல மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். அது, பொதுமக்களிடையே மிகுந்த எதிர்மறையான பிம்பத்தையே உருவாக்கியது.

அதனால்தான், இடப் பங்கீட்டுப் போராட்டம் என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகிக்கொண்டிருந்த வேளையில், பா.ம.க-வினர் ரயில் மீது கற்களை வீசிய மற்றும் காவல்துறை தடுப்புகளை உடைத்தெறிந்த புகைப்படங்களுடனான #BanPMK என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முந்தியது. நேற்றே, அன்புமணி ராமதாஸ், ஜி.கே மணி உள்ளிட்ட 3,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தவிர, நேற்றைய போராட்டத்தில் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி வன்னியர் சங்கத்தைத் தடை செய்யவேண்டும் என்று இன்று நீதிமன்றத்தில் முறையிடப்பட்டிருக்கிறது.

பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பா.ம.க மற்றும் வன்னியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

1987 போராட்டமும் தற்போதைய போராட்டமும்!

எண்பதுகளில் மருத்துவஸ் ராமதாஸ் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை முன்னெடுத்தபோது, பல முற்போக்கு இயக்கங்கள் அவரின் போராட்டங்களை ஆதரித்தன. மருத்துவர் ராமதாஸும் மிகப்பெரிய போராளியாகத்தான் பார்க்கப்பட்டார். ஆனால், தற்போது அவரின் கடந்தகால அரசியல் செயல்பாடுகளாலும் மத்தியிலும், மாநிலத்திலும் கூட்டணியில், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கேட்காமல் இப்போது கேட்கிறார் என்பது போன்ற விமர்சனங்களாலும் அப்போதிருந்த அளவுக்கு இப்போது அவருக்கு மற்றவர்களின் ஆதரவு இல்லாமல், ஏன் மாற்றுக் கட்சிகளில் இருக்கும் வன்னியர்களின் ஆதரவே இல்லாமல் இருக்கிறது. எனினும், நேற்று மாலையே ``சாதிவாரியான புள்ளிவிவரங்களைச் சேகரித்து அறிக்கை அளிக்க தனி ஆணையம் அமைக்கப்படும்'' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், முதல்வரின் இந்த அறிவிப்புக்கு மருத்துவர் ராமதாஸ்,

``வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்காமல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைப்போம் என்பது இந்த பிரச்னையைக் கிடப்பில் போடும் செயலாகும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்; அவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்'' என்கிற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.

மறுபுறம், ``மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்ததும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என தி.மு.க தலைவர் ஸ்டாலினும் கடந்த காலத்தில் அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு