Published:Updated:

`இரண்டையுமே முழுமையாகச் செய்ய முடியாமல் போகும்!’ - பட்ஜெட் அறிவிப்பால் கலங்கும் வி.ஏ.ஓக்கள்

தமிழக அரசு
தமிழக அரசு

வி.ஏ.ஓ.,க்களை சர்வேயர்போல நில அளவை பணியையும், வரைபடங்கள் உருவாக்கும் பணியையும் செய்தால் குழப்பம்தான் மிஞ்சும்.

நிதிநிலை அறிக்கையில் அரசின் புது அறிவிப்பால் வி.ஏ.ஓ.,க்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கூடுதல் சர்வே பணி மக்கள் பணிக்குத் தடையாக அமையும் என்கிறார்கள் வி.ஏ.ஓ. சங்கத்தினர்.

``கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு கிராமத்தின் குட்டி கலெக்டர் போல செயல்பட வேண்டியதிருக்கும் சூழலில் சர்வேயர் பணியை கூடுதலாக பார்க்க வேண்டும் என்றால் எந்த விதத்தில் நியாயம்’’ என்று வி.ஏ.ஓ. சங்கத்தினர் வேதனை தெரிவித்து வருகின்றனர். சர்வேயர் பணிக்கு ஆள் பற்றாக்குறையை சரி செய்யாமல் வி.ஏ.ஓ.,க்களை சர்வேயர்போல் மாற்ற முயற்சிப்பதாக பல்வேறு வி.ஏ.ஓ., அமைப்புகளும் அறிக்கை வெளியிடத் துவங்கியுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை
கோப்புப்படம்

ஒரு பக்கம் பணிச்சுமை அதிகமாகிவிட்டது என வேதனை தெரிவித்துக் கொண்டிருக்கும் நிலையில், கூடுதல் பணியை ஒதுக்கியதால் லஞ்சத்தை குவிக்கலாம் என முறைகேடாக பணி செய்யும் வி.ஏ.ஓ.,க்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் சொல்கிறார்கள். வி.ஏ.ஓக்களுக்கு கூடுதல் பணியால் அப்படி என்ன பிரச்னை என்று விசாரிக்கக் கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செய்தி தொடர்பாளர் அருள் ராஜிடம் பேசினோம்.

``கடந்த 14-ம் தேதி நிதிநிலை அறிக்கையின் போது மாண்புமிகு துணை முதல்வர்கள் அவர்கள் உட்பிரிவு பட்டா மாறுதலில் தேக்கம் ஏற்படுவதால், இதில் டிப்ளமோ பொறியியல் பட்டதாரிகளும், வி.ஏ.ஓ.,க்களும் இணைந்து பணி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இது எந்த விதத்திலும் சாத்தியமாகது. ஒரு கிராம நிர்வாக அலுவலர், கிராமத்தின் நிர்வாகப் பணியைத் தான் செய்ய வேண்டும். அதிலேயே அவர்களுக்கு நேரம் குறைவாகத்தான் உள்ளது. பிறப்பு- இறப்பு சான்றிதழ் வழங்குவது, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அரசு நிர்வாகங்களுக்கு சம்மந்தப்பட்ட நபர்களை அடையாளம் காட்டுவது, கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளை அறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்வது என்று பல்வேறு பணிகள் உள்ளது.

அருள் ராஜ்
அருள் ராஜ்

மக்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் மட்டும் கிட்டதட்ட 40-க்கும் மேற்பட்ட பணிகள் உள்ளது. கிராமத்திற்கும் அரசிற்கும் ஒரு பாலமாக விளங்கும் வி.ஏ.ஓ.,க்களை சர்வேயர்போல நில அளவை பணியையும், வரைபடங்கள் உருவாக்கும் பணியையும் செய்தால் குழப்பம்தான் மிஞ்சும். இதனால், நில அளவை பணி தொடர்பான ஆவணங்கள் தயார் செய்வதில் தவறுகள் ஏற்படலாம். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நில அளவை தொடர்பான பணியை கொடுத்தால் அவர் வி.ஏ.ஓ.,வாகவும், சர்வேயராகவும் பணி செய்ய வேண்டியது வரும். இதனால் இரண்டையுமே முழுமையாகப் பார்க்க முடியாத சூழல் உருவாகும்.

இதனால், நிர்வாக சீர்கேடு உருவாகி அரசு மீது மக்களுக்கு காழ்ப்புணர்ச்சி உருவாகலாம். மேலும், முறைகேடுகளில் ஈடுபடும் சில வி.ஏ.ஓ.க்களுக்கு இது அல்வா சாப்பிட்டதுபோல் இருக்கும் சர்வே பணியில் முறைகேட்டில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. இதனால், அவர்களால் மேலும் சர்வே பணிகள் தேக்கமடையலாம். எனவே, இந்த முடிவில் மாற்றம் வேண்டும். ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகத்தையும் இ- சேவை மையத்துடன் இணைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்து மக்களுக்கு எளிமைப்படுத்த வேண்டும்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

டிப்ளமோ படித்தவர்கள் உட்பிரிவு செய்தாலும், நில அளவர் உட்பிரிவு செய்தாலும், பத்திரம் பதிந்த உடன் பட்டாமாறுதல் செய்தாலும் கிராம நிர்வாக அலுவலர் மேற்பார்வையில் நடக்க வேண்டும். அப்போதுதான் முறையாக நடைபெறும். இவ்வாறு வி.ஏ.ஓ.,க்களின் சிக்கல்களை உணர்ந்த மூத்த வி.ஏ.ஓ போஸ் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளின் கருத்தைப் பெற்று ஆராய்ந்து அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களின் பிரச்னைகளை எளிமையாக தீர்வு காண முடியும் " என்றார்.

அடுத்த கட்டுரைக்கு