Published:Updated:

`வரவர ராவ் குழந்தை மாதிரி பேசுகிறார்!' - குடும்பத்தினர் கண்ணீர்

வரவர ராவ்

பீமா கோரேகான், எல்கார் பரிஷத் வழக்கில் மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிஞர் வரவர ராவ் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவரின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

`வரவர ராவ் குழந்தை மாதிரி பேசுகிறார்!' - குடும்பத்தினர் கண்ணீர்

பீமா கோரேகான், எல்கார் பரிஷத் வழக்கில் மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிஞர் வரவர ராவ் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவரின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Published:Updated:
வரவர ராவ்

தெலங்கானாவைச் சேர்ந்த கவிஞர் வரவர ராவ் ஒரு புகழ்பெற்ற கவிஞரும் சமூகச் செயற்பாட்டாளரும் ஆவார். எல்கர் பரிஷத் வழக்கில் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி கைது செய்யப்பட்ட அவர், தற்போது மும்பையில் உள்ள டலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரத்தஅழுத்தம், மூலம் உட்பட பல்வேறு உபாதைகளால் அவதிப்பட்டுவரும் அவரது உடல்நிலை, தற்போது மோசமடைந்திருப்பதாகக் கூறும் அவரின் உறவினர்கள், அவரை உடனடியாக ஒரு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பீமா கோரேகான்
பீமா கோரேகான்

இன்று (ஜூலை 12) காலையில் காணொளிக்காட்சி மூலமாக வரவர ராவின் மனைவி ஹேமலதா உள்ளிட்ட உறவினர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். ஹேமலதாவுக்கு 72 வயதாகிறது. அவர், ``சிறையில் உள்ள என் கணவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அவர் மிகவும் சிரமப்படுகிறார். சிறை விதிமுறைகளின்படி சிறைவாசிகள் தங்கள் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசலாம். அப்படி அவர் நேற்று என்னிடம் தொலைபேசியில் பேசியபோது வழக்கம் போல பேசவில்லை. சம்பந்தம் சம்பந்தமில்லாமல் பேசினார்” என்று தழுதழுத்த குரலில் கூறினார் ஹேமலதா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வரவர ராவின் மூத்த மகள் பவனாவும் தங்கள் தந்தைக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உருக்கமான வேண்டுகோளை ஆட்சியாளர்களுக்கு முன்வைத்தார். ``நம் சட்டப்படி யாருடைய உயிரை எடுப்பதற்கும் யாருக்கும் உரிமை கிடையாது. அரசுக்கும்கூட யாருடைய உயிரையும் எடுப்பதற்கு உரிமை இல்லை. என் தந்தை நீதிமன்றக் காவலில் இருக்கிறார். அவருக்கு நிறைய உடல் உபாதைகள் உள்ளன. அவர் நேற்று தொலைபேசியில் பேசியபோது, அவரால் பேசவே முடியவில்லை. அவரது குரல் தெளிவாக இல்லை. அவர் ஒரு மிகச்சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தவர். அவ்வளவு சரளமாகப் பேசுவார். அவர் பேசும்போது வார்த்தைகள் வந்து கொட்டும். ஆனால், நேற்று அவர் பேசியபோது வார்த்தைகளே வரவில்லை. ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் இடையே பல நொடிகள் இடைவெளி இருந்தது. `பாகுன்னாரு… பாகுன்னாரு…’ என்று ஒரு குழந்தையைப் போல மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். உணவு மட்டும் அவருக்கு வழங்கப்படுகிறது. மற்றபடி, மருத்துவ சிகிச்சை எதுவும் அவருக்கு அளிக்கப்படவில்லை” என்று பவனா குற்றம்சாட்டினார்.

பவனா மேலும் கூறுகையில், ``கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் சிறையில் வாடிக்கொண்டிருக்கிறார். அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், மகாராஷ்டிரா மாநில முதல்வர், தெலங்கானா முதல்வர் என எல்லோருக்கும் என் தாயார் கடிதங்களை எழுதியுள்ளார். ஆனால், யாரிடமிருந்தும் பதில் இல்லை. தனி தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்காக நடைபெற்ற போராட்டங்களில் 1969-ம் ஆண்டிலிருந்து முன்னணியில் இருந்தவர் என் தந்தை. ஆனால், தெலங்கானா மாநிலம் உருவாகி, அதன் பலனை பலர் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் தந்தையை விடுதலை செய்வதற்கு உதவுமாறு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு என் தாயார் கடிதம் எழுதினார். ஆனால், அந்தக் கடிதத்துக்கு அவர் பதில்கூட அளிக்கவில்லை. முதல்வரைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிப்பதற்காகப் பல வழிகளில் முயற்சி செய்தோம். ஆனால், எந்தப் பலனும் இல்லை. இதை தெலங்கானா மக்களும் தெலங்கானா ஊடகங்களும் தெரிந்துகொள்ள வேண்டும். எங்கள் தந்தையை ஜாமீனில் விடுவிப்பதற்குச் சட்ட ரீதியான அத்தனை சாத்தியக் கூறுகளும் உள்ளன. ஆனால், இப்போது நாங்கள் ஜாமீன் பற்றியெல்லாம் பேசவில்லை. உடனடியாக அவருக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது வரவர ராவின் மைத்துனரும் ஹேமலதாவின் சகோதரருமான வேணுகோபல் ராவும் பேசினார். ``வரவர ராவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. அவருக்கு உயர் ரத்த அழுத்தம், மூல வியாதி, நெஞ்சு எரிச்சல் உள்பட ஏழு பிரச்னைகள் உள்ளன. சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து அவருக்கு எந்த மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. அதனால், ஏற்கெனவே இருந்துவந்த நோய்கள் தீவிரமடைந்ததுடன், புதிதாகப் பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். எனவே, அவரை உடனடியாக ஒரு சிறந்த மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

வரவர ராவ்
வரவர ராவ்

எல்கார் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட வரவர ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மகாராஷ்டிரா அரசு கூறியது. அதனால், அந்த வழக்கை உடனடியாக தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றிவிட்டார்கள். முதலில் புனே எரவாடா சிறையிலும் பிறகு ஆர்தர் சிறையிலும் அடைக்கப்பட்ட அவர், தற்போது டலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சிறையில் அதிகபட்சம் 2100 கைதிகளைத்தான் அடைக்க முடியும். அந்தளவுக்குதான் அங்கு வசதி உள்ளது. ஆனால், அங்கு 3500 கைதிகளை அடைத்துவைத்துள்ளார்கள். அவ்வளவு நெரிசல் மிகுந்த சூழலில் வரவர ராவ் அடைத்துவைக்கப்பட்டுள்ளார். 60 வயதைக் கடந்துவிட்ட, பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டுள்ள கைதிகளை சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மாநில அரசிடம் கூறியது. அந்த வகையில், விடுதலை செய்யப்படுவதற்கான அத்தனை அம்சங்களும் வரவர ராவுக்கு உள்ளன. ஆனால், அவரை விடுதலை செய்யாமல் சிறையில் வைத்து துன்புறுத்துகிறார்கள்.

கடந்த 22 மாதங்களில் ஐந்து முறை பெயில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் மயங்கிவிழுந்துவிட்டார் என்று ஜே.ஜே.மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது மருத்துவப் பரிசோதனை அறிக்கையின்படி, அவரது உடலில் சோடியம், பொட்டாசியம் அளவு வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆனாலும், ஜே.ஜே.மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படாமல், பொட்டாசியம் அதிகரித்துவிட்டது என்று கூறி அவரை மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்” என்றார் வேணுகோபால் ராவ்.

சிறை (மாதிரி படம்)
சிறை (மாதிரி படம்)

மேலும், ``கடந்த 40 நாள்களில் வரவர ராவிடமிருந்து நான்கு முறை தொலைபேசி அழைப்பு வந்தது. ஜூலை 2-ம் தேதி அவர் பேசியபோது, சம்பந்தமில்லாமல் சில இந்தி வார்த்தைகளைப் பேசினார்” என்று தழுதழுத்த குரலில் கூறிய வேணுகோபால் ராவ், ``நாங்கள் பேசுவதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. சோடியம், பொட்டாசியம் அளவு குறைந்ததால் அவரது மூளை சீரான நிலையில் இல்லை” என்றார்.

தெலங்கானாவில் புகழ்பெற்ற கவிஞரான வரவர ராவ், ஏராளமான கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சமூகப் பிரச்னைகளுக்காகப் போராடிவந்தார். ஆயிரக்கணக்கான பொதுக்கூட்டங்களில் பேசியிருக்கிறார். இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக தெலுங்கு இலக்கியம் குறித்து பாடம் நடத்தினார். தெலுங்கில் நவீன இலக்கியத்துக்கான அமைப்பான `சுர்ஜானா’ என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அவரது அரசியல் மற்றும் இலக்கிய செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த ஆட்சியாளர்கள், அவரை 1973-ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். எழுத்தாளர்கள் மீது இதுபோன்ற நடவடிக்கைளை அரசு மேற்கொள்ளக்கூடாது என்று உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது. மீண்டும் 1974-ம் ஆண்டு அவர் கைதுசெய்யப்பட்டார். பலமுறை அவரது ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1975-ம் ஆண்டு நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நாட்டில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டபோது 1975 ஜூன் 26-ம் தேதி மீண்டும் கைதுசெய்யப்பட்டார்.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

1983-ம் ஆண்டு ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கட்டிலிலிருந்து அகற்றிவிட்டு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என்.டி.ராமராவ் ஆட்சிக்கு வந்தார். தேர்தலுக்கு முன்புவரை நக்சலைட்களின் தேசபக்தியை வெகுவாகப் பாராட்டிய என்.டி.ராமராவ், ஆட்சிக்கு வந்த பிறகு ஆந்திராவில் நக்சலைட்டுகளை ஒடுக்குவதற்கான அத்தனை நடவடிக்கைகளிலும் இறங்கினார். வரவர ராவ் காவல்துறையினரால் குறிவைக்கப்பட்டார். அவரால் சுதந்திரமாக வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. 2001-ம் ஆண்டு நக்சலைட் இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அரசின் தூதுவர்களாக கவிஞர் வரவர ராவும் கத்தாரும் தேர்வு செய்யப்பட்டனர். அரசின் பிரதிநிதிகளாகச் சென்று நக்சலைட் இயக்கத்தினருடன் மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினர்.

புனே அருகே உள்ள கோரேகானில் 1818-ம் ஆண்டு பிராமண பேஷ்வா படையினரை பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த பட்டியலின மஹர் படையினர் தோற்கடித்ததற்கான 200-வது ஆண்டு நிகழ்வில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி குழுமினர். அப்போது பீமா கோரோகான் அருகில் பட்டியலினத்தவருக்கும் மற்ற சமூகத்தினருக்கும் இடையே வன்முறை வெடித்தது.

மோடி
மோடி

புனேயில் எல்கர் பரிஷத் என்ற நிகழ்ச்சி நடைபெற்றதற்கு மறுநாள்தான் அந்த வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன. ஜனவரி 2-ம் தேதி பட்டியலின அமைப்புகள் விடுத்த அழைப்பினைத் தொடர்ந்து நடைபெற்ற முழு அடைப்பின்போது ஒருவர் கொல்லப்பட்டார். அதைத்தொடர்ந்து 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமூகசெயற்பாட்டாளர்களின் வீடுகளில் புனே போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, சமூக செயற்பாட்டாளர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். 2018, ஆகஸ்ட் 28-ம் தேதி சுதா பரத்வாஜ், அருண் ஃபெரெய்ரா, வெர்னன் கோன்சால்வ்ஸ், வரவர ராவ், கௌதம் நவ்லகா ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். பீமா கோரேகானில் வன்முறையைத் தூண்டினார்கள் என்று இவர்கள் மீது முன்பு குற்றம்சாட்டப்பட்டது. பிறகு, `பாசிசத்துக்கு எதிரான முன்னணி’ என்ற அரசுக்கு எதிரான அமைப்பைத் தோற்றுவித்ததாகவும், பிரதமர் நரேந்திர மோடியைப் படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாகவும் இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் மீது `நகர்ப்புற நக்சலைட்கள்’ என்றும் முத்திரை குத்தப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism