பிரதமர் மோடி அவ்வப்போது உதிர்க்கும் சில ஸ்டேட்மென்ட்டுகள் அதிரிபுதிரியாக இருக்கும். “சார்.. அது கண்ணாடி” என்று கமென்ட்டுகள் சோஷியல் மீடியாவில் குவியும். சில ஸ்டேட்மென்ட்டுகள் “நீங்க இதைச் சொல்லலாமா?” என்று கேட்கவைக்கும். அப்படி மக்களைச் சிந்தித்து... சிரிக்க வைக்கிற, சிரித்துக்கொண்டே சிந்திக்க வைக்கிற... அல்லது சிரிக்க மட்டும் வைக்கிற ஸ்டேட்மென்ட்டுகள் சில...
* குறுக்குவழியில் வாக்குகளைப் பெறுவது எளிது. ஆனால், குறுக்குவழியில் அரசியல் செய்வது நாட்டையே அழித்துவிடும். இந்தியாவில் பல குறுக்குவழிகள் இருப்பதால், குறுக்குவழி அரசியலிலிருந்து நாட்டு மக்களாகிய நீங்கள் விலகியிருக்க வேண்டும். இன்று குறுக்குவழி அரசியல் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. குறுக்குவழியில் அரசியல் செய்பவர்கள் எதையுமே செய்ய மாட்டார்கள்.

* சில நாள்களாகவே மொழி அடிப்படையில் சர்ச்சையைக் கிளப்ப முயற்சி நடைபெற்றுவருகிறது.
* சமுதாயத்திலுள்ள பலவீனங்களைப் பயன்படுத்தி மதரீதியாகவோ, சாதிரீதியாகவோ, மொழிரீதியாகவோ பிரச்னைகளை ஏற்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது. வளர்ச்சியே நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
* முக்கியப் பிரச்னைகளிலிருந்து நாட்டின் கவனத்தை திசைதிருப்ப சில கட்சிகள் முயன்றுவருகின்றன. அவற்றின் பொறியில் நாம் சிக்கிக்கொள்ளக் கூடாது.
* பா.ஜ.க ஆட்சியில் மட்டுமே முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

* தமிழ்மொழியையும், கலாசாரத்தையும் மேலும் பிரபலப்படுத்துவதற்கு இந்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறது.
* நான் எந்தக் கட்சியின் மீதோ, தனிநபர் மீதோ விரோதம்கொண்டவன் அல்ல. நாட்டில் பலமான எதிர்க்கட்சி வேண்டும் என நினைப்பவன் நான். ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள்தான் பிரதான அங்கம்.
* இந்தியாவில் மோடி அரசு வந்த பிறகுதான் அம்பேத்கரின் கனவு நிறைவேறியிருக்கிறது.
* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்ப்பதில் காங்கிரஸ் குறியாக இருந்தது. காங்கிரஸ் தனது ஆட்சிக்காலத்தில் 50 மாநில அரசுகளின் ஆட்சியைக் கவிழ்த்திருக்கிறது.
* சில அரசியல் கட்சிகள் சாதி, மதத்தின் பெயரால் சமூகத்தில் விஷத்தை விதைக்க முயல்கின்றன.
* மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த நினைக்கிறது காங்கிரஸ்.
* தலித்துகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்பதில் பா.ஜ.க உறுதியுடன் இருக்கிறது.
* உலக அளவில்... மோதல்களுக்கு மத்தியில் இந்தியா, உலகுக்கு நம்பிக்கை அளிக்கிறது.
* 2014-ம் ஆண்டுக்கு முன்பிருந்த காங்கிரஸ் ஆட்சியில், குடும்ப அரசியல், ஊழல் பற்றி மட்டுமே மக்கள் பேசுவார்கள். ஆனால் மக்கள் இன்று அரசாங்கத்தின் திட்டங்கள், அவற்றின் பலன்கள் மற்றும் வளர்ச்சி குறித்துப் பேசுகிறார்கள்.
* நாடாளுமன்றக் கூட்டங்களுக்கு எம்.பி-க்கள் தவறாமல் வர வேண்டும், அவையில் வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.
* மக்களைத் துண்டாடும் கட்சிகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
* கடந்த எட்டு ஆண்டுகளில், ஒருமுறைகூட என்னைப் பிரதமராக நான் நினைத்ததில்லை. 130 கோடி மக்களின் பிரதான சேவகன்தான் நான்.
* மதத்தின் பெயரிலான வன்முறைகள் ஒருபோதும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது.

* சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிலருக்கு மட்டுமே சில கட்சிகள் சலுகைகளை வழங்கிவந்தன. பா.ஜ.க அனைத்து தரப்பு மக்களுக்குமான கட்சியாகச் செயல்பட்டுவருகிறது
* உலகின் மிகப்பெரிய நாடுகள், பூமியின் வளங்களை மேலும் மேலும் சுரண்டுவது மட்டுமல்லாமல், அதிக கரியமில வாயுவையும் வெளியேற்றிவருகின்றன. ஆனால், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்தியா எடுத்திருக்கும் முயற்சிகள் பன்முகத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன.
* ஏழைகள் தங்கள் உரிமைகளைப் பெறும் வரை நான் ஓய்வெடுக்கப்போவதில்லை.
* கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபரைக்கூட வெறும் வயிற்றுடன் நாங்கள் உறங்கவிடவில்லை.
* நமது நாட்டின் ஜனநாயகத்துக்கு எதிரானது குடும்ப அரசியல்.
* மூடநம்பிக்கை கொண்டவர்களால் மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைக்க முடியாது. எனக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நம்பிக்கை இருக்கிறது. மூடநம்பிக்கையில் நம்பிக்கை இல்லாத துறவியான யோகி ஆதித்யநாத்தை வாழ்த்துகிறேன்.
* பா.ஜ.க `வேற்றுமையில் ஒற்றுமை’ எனும் தாரக மந்திரத்தை நம்புகிறது.