‘அண்ணன் என்னென்ன பண்ணுவேன் தெரியுமா தம்பி!?’- ‘அதிபர்’ சீமானின் ‘முதல்வர்’ கனவுகள்!

- கபிலன், ஓவியம்: சுதிர்
`நான் முதல்வராக இருந்தால் ஆளுநரை வீட்டுக்குள்வைத்து பூட்டுப் போட்டுருவேன்...’, ‘என்.ஐ.ஏ உள்ளே வந்தா, என் போலீஸ் என்னத்துக்கு இருக்கு... போய்யா அங்கிட்டுன்னு சொல்லிடுவேன்’ என நரம்பு புடைக்க `சீரியஸாகவே’ பேசியிருக்கிறார் சீமான். ‘அண்ணன்’ சீமானின் பேச்சுகளையெல்லாம் அச்சிட்டு அடுக்கினால், இலங்கைத் தீவுக்கு ‘அறிக்கைப் பாலமே’ போட்டுவிடலாம். எனவே, `இந்த நிலம் என் கையில சிக்குச்சு’ என்ற தொனியில் அவர் பேசியவற்றை மட்டும் ஒருவாட்டி ரீவைண்ட் செய்து பார்ப்போமா?
நான் முதல்வரானா ஆளுநரை என்ன பண்ணுவேன்?
``ஒருவேளை நான் (முதல்வரா) வந்து உக்காருறேன். ஆளுநரை இப்படிப் பேசச் சொல்லு பார்ப்போம். (ஆளுநரை) வீட்டுக்குள்ள வெச்சு, 1,000 போலீஸை முன்னால நிறுத்தி, பூட்டுப் போட்டுட்டு சாவியை எடுத்துட்டுப் போயிருவேன். ‘உள்ளேயே இருக்கணும் நீ... வெளியே விடணும்னா நேரா டெல்லிக்குத்தான் போகணும், இங்க வரக் கூடாது’ன்னுருவேன். சேட்டையெல்லாம் வேற எங்கயாச்சும் வெச்சுக்கணும். ‘அதைச் செய்ய மாட்டேன்... இதைச் செய்ய மாட்டேன்... அதுக்குக் கையெழுத்து போட மாட்டேன்’னு சொன்னாக்கா... ‘சரி போட வேண்டாம். ஏய் பூட்டை கொண்டாடா’னு சொல்லிப் பூட்டி, `ஆளுநர் மாளிகை மூடப்பட்டது’னு போர்டு மாட்டி விட்டுருவேன். ஏய்... நான் விளையாட்டா சொல்றேன்னு நினைச்சுக்காத... ஒருநாள் இது நடக்குதா இல்லையான்னு மட்டும் பாரு.’’
சட்டம்-ஒழுங்கை எப்படிப் பாதுகாப்பேன்?
``என்னை மாதிரி காட்டான்கிட்ட இந்த நாடு சிக்குச்சுன்னா கப்சிப்புனு எல்லாம் செட்டில் ஆகிடும். எல்லா ரெளடிகளையும் பட்டியல் எடுப்பேன். அவங்க குடும்பத்துல இருக்குற எல்லாப் பெண்களையும் ஒரு தடவை கூப்பிட்டுவெச்சு பேசிருவேன். ‘அம்மா... பூவோடும் பொட்டோடும் நல்ல சிரித்த முகத்தோடும் இருக்குறீங்க. உங்க கணவன்மார்களால பல பெண்களுக்கு, பல குடும்பங்கள்ல இந்தப் பூவும் பொட்டும் மகிழ்ச்சியும் இல்லை. இதை உங்க கணவன்மாருங்ககிட்ட சொல்லிடுங்க. அப்புறம் எங்களைக் குறை சொல்லாதீங்க’னு சொன்னா... காலையில செருப்பு, விளக்கமாத்தால அடிச்சு, ‘ஒழுங்கா அடக்கிக்கிட்டு இரு’னு அவங்களே சொல்லிடுவாங்க. சாயந்திரம் ஒருத்தன் ரௌடின்னு சொன்னா... காலையில இருக்க மாட்டான். படுக்கப் போட்டு பனைமட்டையால போட்டாக்கா எப்புடி இருக்கும் தெரியுமா தம்பி... வலிக்காது. மட்டையை எடுக்கும்போது சதை அதுல ஒட்டிக்கிட்டு வரும். தன்னலமற்ற, ஓர் அன்பான சர்வாதிகார ஆட்சிமுறையா... என் தேசத்தை தலைசிறந்த தேசமா செதுக்கிருவேன்.’’

உலக வங்கி கடன்சுமையை எப்படிச் சமாளிப்பேன்?
“ `ஆறு லட்சம் கோடி கடன் இருக்குதே... சீமான் முதலமைச்சரானா எப்படிச் சமாளிப்பாரு?’னு கேக்குறாங்க... ஆட்சிக்கு வந்தவுடனே முதல் கையெழுத்தே மஞ்ச நோட்டீஸ்தான். `இந்த அரசு திவாலாகிடுச்சு. இதுவரை இருந்த கடனுக்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை... நீ கடனை எவன்கிட்ட கொடுத்தியோ, அவன்கிட்ட வாங்கிக்கோ. வேணும்னா ஆட்சி அதிகாரத்துல இருந்த முதல்வருங்க, அமைச்சருங்க, அவங்க வாரிசுங்களோட அட்ரஸ் வேணும்னா தாரேன், கூட நானும் வாரேன். நீ வசூலிச்சுக்கோ’ன்னுடுவேன். ஏய் பாரு... சும்மா சிரிக்காத. உண்மையிலயே நடத்திருவேன்.
‘இந்தா பாருப்பா... ஏ உலக வங்கி மகாராசா... இங்க வா. இந்தக் கையெழுத்து என்னுது இல்லை. போட்டவங்க ரெண்டு பேரும் போயிட்டாங்க. இப்போ நான் புதுசு’ன்னு சொல்லி புரோட்டா சூரி காமெடி மாதிரி, ‘கோட்டப்பூராம் அழி... மறுபடியும் புரோட்டா வெய்யி... நான் சாப்புடறேன்’னு சொல்லிடுவேன். புஹாஹா...”
டோல்கேட்டை எப்படி இல்லாம ஆக்குவேன்?
“ஒரு அஞ்சு வருஷம் என்கிட்ட ஆட்சியைக் கொடுங்களேன். ஒரே ராத்திரியில அத்தனையையும் புல்டோசர் வெச்சு பேத்து விட்டுட்டுப் போயிடுறேன். புஹாஹா... சுங்கச்சாவடியாவது... செங்கச்சாவடியாவது... பேத்துவிட்டுட்டுப் போயிடுவேன்.”
வேலைவாய்ப்பை எப்படி அதிகரிப்பேன்?
“ஆடு, மாடு மேய்க்குறதையெல்லாம் அரசுப் பணி ஆக்கிடுவேன். இனி வேலை இல்லைனு ஒருத்தனும் சொல்ல முடியாது. ஆடு, மாடு மேய்க்குறது அவமானம்னு நீங்க யாரும் சொல்ல முடியாது. ஏன்னா அது அரசு வேலையாகிடுச்சுல்ல!”
கச்சத்தீவை எப்படி மீட்பேன்?
“கச்சத்தீவை சீமான் எப்படி மீட்பான்... எப்படி மீட்பேன்... 50,000 பட்டாலியன் ஸ்பெஷல் ஃபோர்ஸ் சிறப்பு படைய உருவாக்குவேன். ஆயுதங்களோட கொண்டுபோய் குவிப்பேன். ஒரே ராத்திரியில இறக்குவேன். சுத்தி நின்னுக்கிடுவேன். இந்திய தேசியக்கொடியை ஏத்துவேன். பக்கத்துல தமிழ் தேசியக்கொடியையும் ஏத்துவேன். இலங்கையில... என் தாய்த் தமிழ் நிலத்துல 2,80,000 ராணுவ வீரர்களை குவிச்சுவெச்சுருக்கான். `அந்தப் படையைத் திருப்புடா... இங்க வாடா’ம்பேன். கலைச்சுவிட்டு அடிச்செறிஞ்சுடுவேன்.”
தமிழ் மீனவனை எப்படிப் பாதுகாப்பேன்?
“மீனவனைப் பாதுகாக்க ‘நெய்தல் படை’ கட்டுவேன். மீனவனே அந்த ராணுவப் படையில இருப்பான். அவன்கிட்ட கல்வியெல்லாம் கேட்க மாட்டேன். நீச்சல் தெரியுமா... படகோட்டத் தெரியுமா... அதுதான் தகுதி. 5,000 பேரை படையில எடுத்துவெச்சுக்குவேன். கையில துப்பாக்கியைக் கொடுத்துடுவேன். இப்போ சிங்களவன சுடச் சொல்லு பாப்போம்...”
தமிழ்வழிக் கல்வியை எப்படிச் சாத்தியப்படுத்துவேன்?
“எங்கேயெல்லாம் ஆங்கில வழிக் கல்வி இருக்குதோ... அதையெல்லாம் மூடாம, அதுக்கு எதிரா தாய்த் தமிழ்வழிக் கல்வியைத் தொடங்குவேன். அதுல ஆங்கிலத்தைக் கட்டாய மொழிப்பாடமா வெச்சு, திறன் அடிப்படையில... உன் ஆங்கிலவழியில் படிச்ச பிள்ளையவிட என் பிள்ளை சிறந்திருக்குதுன்னு பெத்தவங்களுக்கு நான் நிரூபிச்சுக் காட்டிடுவேன்.”