Published:Updated:

லக்கிம்பூர் ட்வீட்: குஷ்புவுக்கு புதிய பதவி; வருண் காந்தியை பாஜக கட்டம் கட்டியது ஏன்?

குஷ்பு - வருண் காந்தி

லக்கிம்பூர் கலவரத்தை கண்டித்து வருண் காந்தியைப்போல, குஷ்புவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். ஆனால், கட்சியில் வருண்காந்திக்கு கொடுக்கப்பட்ட பதவி நீக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் பதவி இல்லாமல் இருந்துவந்த குஷ்புவுக்கு புதிய பதவி கொடுக்கப்பட்டிருக்கிறதே ஏன்?

லக்கிம்பூர் ட்வீட்: குஷ்புவுக்கு புதிய பதவி; வருண் காந்தியை பாஜக கட்டம் கட்டியது ஏன்?

லக்கிம்பூர் கலவரத்தை கண்டித்து வருண் காந்தியைப்போல, குஷ்புவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். ஆனால், கட்சியில் வருண்காந்திக்கு கொடுக்கப்பட்ட பதவி நீக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் பதவி இல்லாமல் இருந்துவந்த குஷ்புவுக்கு புதிய பதவி கொடுக்கப்பட்டிருக்கிறதே ஏன்?

Published:Updated:
குஷ்பு - வருண் காந்தி

பா.ஜ.க தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து எம்.பி. வருண் காந்தி, அவரது தாயாரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி ஆகியோர் நீக்கப்பட்டிருக்கின்றனர். இதற்கு, உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கலவரம் குறித்து வருண் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட கருத்துதான் காரணம் என கூறப்படுகிறது. இருப்பினும், அதேபோல் கருத்து தெரிவித்திருந்த குஷ்புவுக்கு பாஜக மேலிடம் புதிய பதவி வழங்கியிருக்கிறது.

பாஜக
பாஜக

கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்கிம்பூர் கெரியில், பாஜக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, உ.பி., துணைமுதல்வர் கேசவ் மெளரியா ஆகியோரின் கார்கள் வரும் வழியை மறித்து விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, அமைச்சர்களுடன் அணிவகுத்துவந்த கார்கள், பேரணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள்மீது வேகமாக மோதிச்சென்றது. இதில், 4 விவசாயிகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர். மேலும், அந்த காரை ஓட்டிவந்தவர் மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா என்றும், இந்த சம்பவத்தை வீடியோ பதிவுசெய்த நிருபரை பாஜகவினர் சுட்டுக்கொன்றுவிட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அதிர்ச்சிக் குற்றச்சாட்டை முன்வைத்தனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், பாஜக-வின் சொந்த கட்சியினரே கண்டித்து கருத்து வெளியிட்டனர்.

வருண்காந்தியின் ட்வீட்:

அதில் குறிப்பாக, பா.ஜ.க எம்.பியான வருண் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் விவசாயிகள்மீது கார் ஏற்றப்படும் வீடியோவை இணைத்து, ``வீடியோ மிகத்தெளிவாக இருக்கிறது. கொலைசெய்வதன் மூலம் போராட்டக்காரர்களை அமைதியாக்கிவிட முடியாது. ஒவ்வொரு விவசாயியின் மனதிலும் அகங்காரம், கொடூரம் பற்றிய செய்தி நுழைவதற்கு முன், அப்பாவி விவசாயிகளின் ரத்தத்துக்குக் காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டனைப்பெற்றுத்தர வேண்டும்" என பதிவிட்டிருந்தார்.

வருண் காந்தி
வருண் காந்தி

அதேபோல் இன்னொரு பதிவில், ``விவசாயிகள்மீது வாகனங்கள் வேண்டுமென்றே மோதும் வீடியோ பார்க்கும் அனைவரையும் கண்கலங்க வைக்கும். எனவே, இந்த வீடியோவையும் கணக்கில்கொண்டு, விவசாயிகள் மீது மோதிய கார்களின் உரிமையாளர்களையும் காரில் அமர்ந்திருந்தவர்களையும் காவல்துறையினர் உடனடியாக கைது செய்யவேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.

லக்கிம்பூர்
லக்கிம்பூர்

இதுமட்டுமல்லாமல் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எழுதிய கடிதத்தில் ``இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி ரூபாய் நிவாரணநிதி வழங்க வேண்டும்!" எனவும் கோரிக்கை விடுத்தார்.

குஷ்புவின் ட்வீட்:

இந்த சம்பவத்தைக்கண்டித்து பாஜக உறுப்பினரும், நடிகையுமான குஷ்பூவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். அதில் ``உத்தரப்பிரதேசத்தில் போராடிய 8 விவசாயிகள்மீது காரை மோதவிட்டுக் கொன்றது, ஏற்றுக்கொள்ளமுடியாத மாபெரும் குற்றம். இந்தக் குற்றச்செயலை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மனித உயிர்களை விட வேறு எதுவும் நமக்கு முக்கியமில்லை. மனிதாபிமானம் இந்த நாட்டின் சாராம்சம்!" என பதிவிட்டிருந்தார்.

குஷ்பூ
குஷ்பூ

பா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு:

இந்தச் சூழலில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா 80 உறுப்பினர்கள் அடங்கிய, புதிய பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டிருக்கிறார். அந்தப்பட்டியலில், மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி முதலிய பாஜக தலைவர்கள் தேசிய நிர்வாகிகளாக நீடிக்கின்றனர். ஆனால், ஏற்கனவே பட்டியலில் இருந்துவந்த வருண்காந்தி, மேனகா காந்தி உள்ளிட்டோரின் பெயர்கள் இம்முறை நீக்கப்பட்டிருக்கிறது.

ஜே.பி நட்டா
ஜே.பி நட்டா

இதற்கு காரணம், வருண்காந்தி தொடர்ச்சியாக மத்திய அரசின் செயல்பாடுகளை அவ்வபோது விமர்சித்து வருவதாகவும், குறிப்பாக லக்கிம்பூர் கலவரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவிட்ட கருத்துகள் பாஜக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேனகா காந்தி
மேனகா காந்தி

அதேபோல், மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும்படி பேசியதால் மேனகா காந்தியும் நீக்கப்பட்டிருக்கிறார் என தெரியவந்திருக்கிறது. இந்த 80 பேர் கொண்ட தேசிய நிர்வாகிகள் பட்டியலில், 12 பேர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குஷ்புவுக்கு புதிய பதவி:

80 உறுப்பினர்களைக்கொண்ட தேசிய நிர்வாகிகள் பட்டியல் மட்டுமல்லாமல், 50 சிறப்பு அழைப்பாளர்கள், 179 நிரந்த அழைப்பாளர்கள் போன்ற புதிய பதவிகளும் அறிவிக்கப்பட்டு, உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அதில், நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்புபுவுக்கு `சிறப்பு அழைப்பாளர்' என்ற பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

குஷ்பூ
குஷ்பூ

லக்கிம்பூர் கலவரத்தை கண்டித்து வருண் காந்தியைப்போல, குஷ்புவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். ஆனால், கட்சியில் வருண்காந்திக்கு கொடுக்கப்பட்ட பதவி நீக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் பதவி இல்லாமல் இருந்துவந்த குஷ்புவுக்கு புதிய பதவி கொடுக்கப்பட்டிருக்கிறதே ஏன்? என்ற காரணம் பொதுவாக உருவாகியிருக்கிறது.

பாஜக மற்ற மாநிலங்களில் அதிரடி காட்டுவதுபோல, தமிழகத்தில் செய்வதில்லை. வடமாநிலங்களில் இருக்கும் ஓட்டுவங்கியும், வலுவான கட்சிக் கட்டமைப்பும் தமிழ்நாட்டில் இல்லை. எனவே, நடிகர்கள் முதல் ரவுடிகள் வரை புதிய உறுப்பினர்களாக பாஜகவை நோக்கி வரும் அனைவரையும் சிவப்புக்கம்பலம் விரித்து வரவேற்கிறது. அதேபோல், வருண்காந்தி லக்கிம்பூர் கலவரத்தையும் தாண்டி ஏற்கனவே பல்வேறு சூழலில் தான் எம்.பி.யாக இருக்கும் சொந்த பாஜகவை விமர்சித்து வந்திருக்கிறார்.

வருண் காந்தி !
வருண் காந்தி !

மேலும், வருகின்ற உத்தரப்பிரதேச மாநிலத்தேர்தலில் தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என தாயார் மேனகா காந்தி மூலம் கட்சித் தலைமைக்கு குடைச்சல் கொடுத்து வருவதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன. இதுபோன்ற காரணங்களால் பாஜக தலைமை ஏற்கனவே வருண்காந்தி மீது அதிருப்தியில் இருந்தது. இப்போது, லக்கிம்பூர் சம்பவத்தில் வருண்காந்தியின் பதிவுகள் இன்னும் கொதிப்படையச்செய்யவே பா.ஜ.க தேசிய நிர்வாகிகள் பட்டியலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.