Published:Updated:

`பயந்தவர்கள் சொல்வது கட்சியின் கருத்து கிடையாது!' - சசிதரூரைச் சாடும் வசந்தகுமார்

H.Vasanthakumar MP
News
H.Vasanthakumar MP

முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் சொல்லியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. பயந்தவர்கள் சொல்வதை கட்சியின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது.

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வருவாய் கிராமங்களை சூழியல் அதிர்வு தாங்கும் மண்டலம் என்றுச் சொல்லி வனப்பகுதியை விரிவுப்படுத்துகிறார்கள். குமரி மாவட்டம் குறைந்த பரப்பளவு கொண்ட மாவட்டம் என்பதால் மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் பாதிக்கும். வன எல்லையை பேச்சிப்பாறை ஜீரோ பாயின்ட் வரை நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் இடத்தை அதிகரிக்கக் கூடாது.

H. Vasanthakumar MP
H. Vasanthakumar MP

குமரியில் விவசாயம் தவிர வேறு தொழில் இல்லை. முந்திரி தொழில் ஏற்கெனவே நலிவுற்றுவிட்டது. மாநில அரசு, மத்திய அரசை தொடர்புகொண்டு இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். முதல்வரும், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சூழியல் அதிர்வு தாங்கும் மண்டலம் வந்தால் அந்தப் பகுதிகள் வனத்துறையின் முழுக் கட்டுப்பாட்டில் வரும். ஆழ்குழாய் கிணறு அமைப்பது போன்றவை செயல்படுத்த வனத்துறை அனுமதி பெறும் நிலை ஏற்படும். தனியார் காடுகள் சட்டத்தால் ஏற்கெனவே மக்கள் பாதிப்பில் உள்ளனர். இந்த நிலையில் சூழியல் அதிர்வு தாங்கும் மண்டலமாக அறிவித்தால் இன்னும் பிரச்னை ஏற்படும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து குமரி மாவட்ட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து அரசை வலியுறுத்துவோம். உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் சாலை அமைப்பது போன்றவற்றுக்கு நிதி வருவதில்லை. ஒன்றியங்களில் உள்ள பொது நிதி 2 கோடி ரூபாயை திரும்ப சென்னைக்கு அனுப்பி வைத்துவிட்டனர். மக்களின் அடிப்படை தேவைக்கான பணிகள் நடப்பதில்லை. மார்த்தாண்டம் மேம்பாலத்தின்கீழ் சாலை விரிவாக்கத்திற்காக இடத்தை வழங்க உரிமையாளர்கள் தயாராக உள்ளனர். ஆனால் அதிகாரிகள் சாலையை விரிவாக்காமல் இழுத்தடிக்கிறார்கள்.

வசந்தகுமார் எம்.பி
வசந்தகுமார் எம்.பி

குமரி மாவட்டச் சாலைகள் அனைத்தும் முழுமையாக சேதமடைந்துள்ளன. சாலைகள் சரி செய்யாமல் இருந்தால் போராட்டம் நடத்துவோம். நான் எம்.பி. ஆன நூறு நாள்களில் 22 முறை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். வசந்தகுமார் என்ன செய்தார் என்று 2 மாதத்தில் புத்தகம் வெளியிட உள்ளேன். மோடி உலகத்தைச் சுற்றிப்பார்த்து, அதிபர்களுடன் கை குலுக்கிக்கொண்டதுதான் நூறு நாள் சாதனை. இஸ்ரோ சிவன் செய்த சாதனை மட்டும்தான் இந்தியாவின் சாதனை. குளங்கள், கால்வாய்களை ஜே.சி.பி. மூலம் தூர்வார நடவடிக்கைகளை எடுக்க உள்ளேன். வாழ்நாள் முழுவதும் இருப்பேன் என்று காங்கிரஸ் கட்சிக்கு வரவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் சொல்லியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்து. பயந்தவர்கள் சொல்வதை கட்சியின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது'' என்று கூறினார்.