Published:Updated:

`அந்த காரை வாங்குறதுக்காகக் கடுமையா உழைச்சார்!' - வசந்தகுமார் நினைவுகள் பகிரும் நண்பர்

வசந்தகுமார்
வசந்தகுமார் ( Photo: Vikatan / T.Vijay )

டெல்லிக்கு கம்பெனிகளுக்கு போனா `படிச்ச இளைஞர்களை வேலைக்குவெக்கணும் சார். குறைஞ்ச சம்பளத்துல வேலைக்கு ஆள் நான் அனுப்புறேன்’னு வசந்தகுமார் சொல்லுவார்.

கொரோனா தொற்று காரணமாக மரணமடைந்த கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், `உழைப்பால் உயர்ந்தவர்’ என்று அனைவராலும் புகழப்படுகிறார். வசந்தகுமார் மாணவர்களிடமும், மக்களிடமும் காட்டிய அன்பு குறித்து அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏ.எம்.டி.செல்லத்துரை நம்மிடம் பேசினார்.

``வசந்தகுமார் எங்க ஊர்க்காரர் என்பதோடு, என்னோட நெருங்கிய நண்பர். அகஸ்தீஸ்வரம் கவர்மென்ட் பள்ளியில படிச்சாரு. அப்புறம் விவேகானந்தா காலேஜில படிச்சவரு, இந்து காலேஜுல எம்.ஏ படிச்சார். சென்னைக்குப் போனவரு அங்கே பன்னீர்தாஸின் வி.ஜி.பி நிறுவனத்தில வேலை செய்தார். கொஞ்சநாள்ல மேனேஜர் ஆகிட்டார். அங்கேயிருந்து வெளியேறினவர், தனிக்கடை ஆரம்பிக்கணும்னு வீட்ல வந்து சொன்னாரு. `பன்னீர்தாஸ் எனக்கு எலெக்‌ஷனுக்கு இருவத்தஞ்சாயிரம் ரூபா செலவழிச்சிருக்காரு. அவரை எதிர்த்துக் கடைபோட நான் ஏற்பாடு பண்ண மாட்டேன். அவனை மறுபடியும் அங்கேயே வேலை பார்க்க வேணும்னா நான் ஏற்பாடு பண்ணுறேன்’னு அவங்க அண்ணன் குமரி அனந்தன் சொல்லிட்டாரு. அதனால ரெண்டு மாசம் இங்கேயே இருந்தாரு.

ஏ.எம்.டி செல்லத்துரை
ஏ.எம்.டி செல்லத்துரை

அவங்க மாமனார் கன்னிகா ஹோட்டல்வெச்சிருந்தார். அங்கே காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் வந்து சாப்பிடுவாங்க. அங்கே வேலைக்குப்போன வசந்தகுமார், மாணவர்களுக்கு சர்வ் பண்ணுவார். மிச்சம் மீதி மீன் இருந்தா ராத்திரி வந்து எங்ககிட்ட சொல்லுவாரு. நாங்க போய்ச் சாப்பிடுவோம். இப்பிடியே இருந்தா சரியாவாதுன்னு அவங்க அப்பா ஒரு விளைய ஒத்திக்குவெச்சு பத்தாயிரம் ரூபா வாங்கி அவர்கிட்ட கொடுத்து, சென்னைக்கு அனுப்பிட்டார். அங்கே போய் திருச்சியிலருந்து ஒருத்தரோட சேர்ந்து கடையைத் தொடங்கினார். இவங்க அப்பா என்கிட்ட வந்து `சென்னைக்கு போனவன் என்ன ஆனான்னு பாக்காண்டமா’ன்னு கேட்டார். நான் சென்னைக்குப் போனேன். ஒரு லாட்ஜுல தங்கியிருந்த வசந்தகுமார், அங்கேயே சமைச்சு சாப்பிட்டு, கடைக்குப் போனார். எனக்கு சாப்பாட்டுக்கு லாட்ஜுல சொல்லிட்டுப் போனார். ஒரு ஸ்கூட்டியில, `கம்பெனிக்குப் போவோம்’னு கூட்டிட்டுப் போனார்.

qபேவர்லுவாங்கிற கம்பெனி வாட்ச் அப்போ ஃபேமஸ். அதே மாடல்ல விலை குறைவா வேற ஒரு கம்பெனி வாட்ச் வித்தார். டி.வி வித்ததுலதான் பிக்கப் ஆனார். `அதிக டி.வி விக்கிறவங்களுக்கு ஒரு கார் பரிசு’னு சாலிடர்ங்கிற கம்பெனி அறிவிச்சுது. அந்த காரை வாங்கிறதுக்காகக் கடுமையா உழைச்சார். கார் பரிசு இவருக்குக் கிடைச்சுது. அந்த காரை வசந்தகுமார் வாங்குற சமயத்துல நானும் குமரி அனந்தனும் போனோம். நாகர்கோவில்ல கடை தொடங்கும்போது ஊர்ல எல்லாரையும் கூப்பிட்டார். படிக்கிற பிள்ளைங்ககிட்ட போட்டி மனப்பான்மையை வளர்க்கணும்கிறதுக்காக ஃபர்ஸ்ட், செக்கண்ட், தேர்டு வர்ற மாணவர்களுக்கு புத்தகப் பை பரிசா கொடுப்பார். விளையாட்டுல ஆர்வம் இருக்கிற பசங்களுக்கு அதை ஊக்குவிக்கும்விதமா பரிசு கொடுப்பார்” என்றார்.

வசந்தகுமார்
வசந்தகுமார்

தொடர்ந்து பேசியவர், ``ஒரு முறை மதுரையில இருந்து கன்னியாகுமரிக்கு கார்ல வந்துக்கிட்டு இருந்தோம். திருநெல்வேலி வர்றப்போ ஸ்கூல் பிள்ளைங்க வழிமறிச்சு ஸ்கூல் டே நடத்தணும்னு சொன்னாங்க.. உடனே பத்தாயிரம் ரூபா எடுத்துக் கொடுத்தார். பல இளைஞர்களுக்கு கம்பெனிகள்ல வேலை வாங்கிக்கொடுத்திருக்கார். டெல்லியில கம்பெனிகளுக்குப் போனா, `படிச்ச இளைஞர்களை வேலைக்கு வெக்கணும் சார். குறைஞ்ச சம்பளத்தில வேலைக்கு ஆள் நான் அனுப்புறேன்’னு சொல்லுவார். படிச்ச இளைஞர்களின் அப்ளிகேஷனை சென்னை ஆபீஸ்ல ஏற்கெனவே வாங்கி வெச்சிருக்கிறதுனால அதுல தகுதியானவங்கலை அந்த கம்பெனிக்கு அனுப்பிவைப்பார்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு