Published:Updated:

`` `ஹரிஜன்' என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா... ஆளுநர் விளக்கமளிக்க வேண்டும்" - திருமாவளவன் வலியுறுத்தல்

திருமாவளவன்

``ஆளுநர், ஹரிஜன் எனக் குறிப்பிட்டுப் பேசியது ஏன் என்று கேள்வி எழுகிறது. திராவிடர் என்னும் சொல் மீதான வெறுப்புதான் காரணமா... அல்லது சனாதன உளவியல்தான் காரணமா?" - திருமாவளவன்

`` `ஹரிஜன்' என்ற சொல்லைப் பயன்படுத்தலாமா... ஆளுநர் விளக்கமளிக்க வேண்டும்" - திருமாவளவன் வலியுறுத்தல்

``ஆளுநர், ஹரிஜன் எனக் குறிப்பிட்டுப் பேசியது ஏன் என்று கேள்வி எழுகிறது. திராவிடர் என்னும் சொல் மீதான வெறுப்புதான் காரணமா... அல்லது சனாதன உளவியல்தான் காரணமா?" - திருமாவளவன்

Published:Updated:
திருமாவளவன்

கடந்த 15-ம் தேதி சென்னையில், மாணவர் விடுதி ஒன்றைத் திறந்துவைத்துப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிலுள்ள பட்டியல் சமூகத்தினரை `ஹரிஜன்' எனக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இது சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியிருந்தது. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி-யுமான தொல் திருமாவளவன் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `` `ஹரிஜன்' என்பது கடவுள் ஹரியின் குழந்தைகள் என்னும் பொருளைத் தருகிறது. அதாவது `அப்பன் பெயர் தெரியாதவர்கள்' என்னும் பொருளைத் தருவதால், அது பட்டியல் சமூகத்தினரை இழிவுபடுத்தக் கூடியதாகும் என அந்தக் காலத்திலேயே அதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. மேலும், இந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என இந்திய ஒன்றிய அரசு 1982-ம் ஆண்டு ஆணையிட்டிருக்கிறது. இது ஆளுநருக்கு தெரியுமா... தெரியாதா?

அரசமைப்புச் சட்டத்தைப் போற்றவேண்டிய ஒரு பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஆளுநரே இப்படிப் பேசியிருப்பதால் மற்றவர்களும் அந்தச் சொல்லைத் தயக்கமில்லாமல் பயன்படுத்தக்கூடும். எனவே, ஆளுநர் அவர்கள் அவ்வாறு தான் பேசியது ஏன் என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும். சென்னையில் பள்ளி விடுதியைத் திறந்துவைத்து உரையாற்றிய ஆளுநர், தமிழ்நாட்டில் உயர்கல்வி நிலையை விமர்சித்து, `உயர்கல்வியில் சேரும் ஹரிஜன்கள் 13 அல்லது 14 சதவிகிதமாக இருக்கிறார்கள்' எனத் தெரிவித்திருக்கிறார்.

திருமாவளவன்
திருமாவளவன்

பட்டியல் சமூகத்தின் உயர்கல்வி குறித்து ஆளுநர் அவர்கள் அக்கறை காட்டியிருப்பதை வரவேற்று, பாராட்டுகிறோம். ஆனால், ஆதிதிராவிடர் என்னும் சொல் இங்கே அதிகாரபூர்வமாக நடைமுறையில் இருக்கும்போது, ஹரிஜன் எனக் குறிப்பிட்டுப் பேசியது ஏன் என்று கேள்வி எழுகிறது. திராவிடர் என்னும் சொல் மீதான வெறுப்புதான் காரணமா அல்லது சனாதான உளவியல்தான் காரணமா... ஆளுநர் ஏனோ தானோ என பேசக்கூடியவரல்ல. பேசவும் கூடாது அல்லவா... எனவே, ஆளுநர் எத்தகைய உளவியல் நிலையிலிருந்து அவ்வாறு உரையாற்றினார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டுகிறோம்.

தமிழ்நாட்டில் உயர்கல்வி பெற்றோரில் பொதுவான நிலையில் உள்ளோரின் சதவிகிதத்துக்கும், பட்டியல் சமூக மாணவர்களின் சதவிகிதத்துக்கும் இடையே வேறுபாடு இருப்பது உண்மைதான். ஆனால், பட்டியல் சமூக மாணவர்களின் விகிதம் ஆளுநர் குறிப்பிட்டதைப்போல அது 13-14 சதவிகிதம் அல்ல. மாறாக 39.6 சதவிகிதம். உண்மையில் தமிழ்நாடு அரசைக் குறை கூறுவதற்காக இப்படி ஆளுநர் பேசியிருக்கிறார். ஆனால், அவர் குறிப்பிட்ட புள்ளிவிவரம் உயர்கல்வி குறித்த அனைத்திந்திய அறிக்கை 2019-20-ல் உள்ளது. அதாவது அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் இருந்த நிலையைக் காட்டுவதாகும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் பட்டியல் சமூகத்தினர் பலவாறாக பாதிக்கப்பட்டனர். அதில் முக்கியமான பாதிப்பு அவர்களது உயர்கல்வியில் ஏற்பட்ட சரிவு. எனவே, ஆளுநர் குறைகூற விரும்பினால் கடந்த அ.தி.மு.க ஆட்சியைத்தான் குற்றம்சாட்ட வேண்டும். மேலும், `ஹரிஜன்' என்ற சொல்லை சாதிச் சான்றிதழிலோ, பிற இடங்களிலோ பயன்படுத்தக் கூடாது என 1982-ம் ஆண்டில் இந்திய ஒன்றிய அரசு தடை விதித்திருக்கிறது.

திரு. ஜெயில் சிங் அவர்கள் உள்துறை அமைச்சராக இருந்தபோது அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னரும் ஒரு சிலரால் அந்தச் சொல் பயன்படுத்தப்படுவதாகப் புகார் எழுந்ததையொட்டி 1990-ம் ஆண்டு, ஆகஸ்ட் 16-ம் தேதி இந்திய ஒன்றிய சமூகநலத்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.

அதற்குப் பிறகும்கூட சிலர் அந்தச் சொல்லைப் பயன்படுத்துவதாகப் புகார் எழுந்தது. அப்போது சமூகநீதி அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்குமாறு தனது ஒன்பதாவது அறிக்கையில் பரிந்துரை செய்திருக்கிறது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி

மாநிலங்களவையில் 19.8.2010 அன்று வைக்கப்பட்ட அந்த அறிக்கையில், சாதிச் சான்றிதழில் மட்டுமல்ல, மற்றவிதங்களிலும் ஹரிஜன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடுமாறு கூறியது. அதன் அடிப்படையில் 2012-ம் ஆண்டு, நவம்பர் 22-ம் தேதி இந்திய ஒன்றிய சமூகநீதி அமைச்சகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.

இந்திய ஒன்றிய அரசு இத்தனை சுற்றறிக்கைகளை வெளியிட்ட பின்னரும், இந்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் மேதகு ஆளுநர் அவர்கள் இவ்வாறு பொதுவெளியில் அதுவும் மாணவர்களிடையே அந்தச் சொல்லைப் பயன்படுத்திப் பேசியிருப்பது சரியானதுதானா என அவர் சிந்திக்க வேண்டும். அவரைப் பின்பற்றி வேறு யாரும் அந்தச் சொல்லை பயன்படுத்தாமல் இருக்க அவர் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.