Election bannerElection banner
Published:Updated:

வி.சி.க போட்டியிடும் தொகுதிகள் எவையெவை... வேட்பாளர்கள் யார் யார்?

திருமாவளவன் - வி.சி.க
திருமாவளவன் - வி.சி.க

இரண்டாம்கட்டப் பேச்சுவார்த்தையில் நான்கு தனித் தொகுதிகளும், இரண்டு பொதுத் தொகுதிகளும் என ஆறு தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க தி,மு.க ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் கையெழுத்தானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தி.மு.க கூட்டணி தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்துவருகிறது. தி.மு.க நிர்வாகிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் இரண்டுகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இன்று மாலை 5 மணிக்கு மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தை நடக்கவிருக்கிறது. அதேபோல, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க ஆகிய கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையிலும் இன்னும் சுமுக உடன்பாடு எட்டப்படாததால் தொடர்ந்து இழுபறியே நீடித்துவருகிறது. அதேவேளையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு மூன்று இடங்கள், மனிதநேய மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு இடங்கள் என தொகுதிப் பங்கீடு நிறைவடைந்திருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் தொகுதி உடன்படிக்கை
விடுதலைச் சிறுத்தைகள் தொகுதி உடன்படிக்கை

திமு.க-வுடன் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எட்டு தொகுதிகள் முதல் 10 தொகுதிகள் வரையில் கேட்டதாகவும் ஆனால், ஐந்து தொகுதிகளை ஒதுக்க தி.மு.க முன்வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இரண்டாம்கட்டப் பேச்சுவார்த்தையில் நான்கு தனித் தொகுதிகளும், இரண்டு பொதுத் தொகுதிகளும் என ஆறு தொகுதிகளை ஒதுக்க தி,மு.க ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் கையெழுத்தானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பா.ஜ.க - வி.சி.க மோதல்: தொடரும் மனுதர்ம சர்ச்சை... எப்போது முடிவுக்கு வரும்?

ஆனால், இந்த ஆறு இடங்களில், தங்களுக்கு இந்தத் தொகுதிகளுக்குள் ஒதுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பத்து தொகுதிகள் அடங்கிய பட்டியல் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் வேளச்சேரி, சோளிங்கநல்லூர், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, திட்டக்குடி, மயிலம், குன்னம், பெரம்பலூர், சிதம்பரம், அரூர் ஆகிய தொகுதிகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், சிதம்பரம் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேட்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலில் அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருப்பதால், தேர்தல் பணிகள் செய்ய வசதியாக இருக்கும் என சிறுத்தைகள் தரப்பு விரும்புகிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

மேலும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில், எழில் கரோலின், ஆளூர் ஷாநவாஸ், சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, வன்னி அரசு, பாலசிங்கம், கௌதம சன்னா, ஆதிமொழி ஆகியவர்களின் பெயர்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த எட்டு பேரில் சூழலைப் பொறுத்து ஆறு பேரின் பெயர் டிக் செய்யப்படலாம் என்கிறது சிறுத்தைகள் வட்டாரம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு