புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே வாக்களிப்பதற்கு ஏதுவாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்யவிருக்கிறது. இந்த இயந்திரம் குறித்து விளக்கமளிக்க அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துவருகிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பா.ஜ.க-வும் தேர்தல் ஆணையமும் கூட்டணி அமைத்துவிட்டதாகக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் திருமாவளவன், ``இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்ந்து வாழ்வோர் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தபடியே தேர்தலில் வாக்களிக்கும் விதமாக `ரிமோட் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்' அறிமுகம் செய்யப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஒரே மெஷினில் வெவ்வேறு தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. 16.01.2023 அன்று அரசியல் கட்சிகளின் முன்னால் அதை செயல்படுத்திக் காட்டப்போவதாகவும் அதற்காக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வரவேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அழைத்திருக்கிறது.

இந்தியாவில் சுமார் 30 கோடி பேர் இப்படி புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அவர்களின் வாக்குகளைக் குறிவைத்தே இந்த இயந்திரம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கெனவே இ.வி.எம்-களில் (மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்) பல்வேறு குளறுபடிகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், `ரிமோட் எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின்' அறிமுகம் செய்தால் இந்திய தேர்தல் ஜனநாயகத்தையே அது சீர்குலைத்துவிடும். ரிமோட் வாக்குப்பதிவு ஜனநாயகத்தின் பேராபத்து. எனவே, இந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினில் முறைகேடுகள் செய்ய முடியும் என்பதைப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். இந்த மெஷின்களில் பயன்படுத்தப்படும் சிப் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடியது (OTP) அல்ல. ஒவ்வொரு முறையும் அதை ப்ரோக்ராம் செய்யும்போது, குறிப்பிட்ட ஒருவர் வெற்றி பெறும் விதத்தில் அதை மாற்றியமைக்க முடியும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டுமென்று காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனாலும்கூட பா.ஜ.க அரசும், தேர்தல் ஆணையமும் அதை ஏற்கவில்லை. 2024 தேர்தலில் வலுவான கூட்டணி கட்சிகள் ஏதும் இல்லாமல் தனித்துவிடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தை கூட்டணி சேர்த்துக்கொண்டு எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பா.ஜ.க திட்டமிட்டு இருப்பதையே இந்த ரிமோட் வோட்டிங் மெஷின் காட்டுகிறது. இதை ஏற்றுக்கொண்டால் அதன் பிறகு இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாமல் போய்விடும். எனவே, இந்த முயற்சியைக் கைவிடுமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம். மக்களாட்சியின் மீது நம்பிக்கைகொண்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்தத் தீய முயற்சியைத் தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்" எனக் கூறியிருக்கிறார்.