விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அரியலூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``தமிழக அரசின் பொது மற்றும் வேளாண்துறை நிதிநிலை அறிக்கை பல்வேறு சிறப்பம்சங்களுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பொது நிதி நிலை அறிக்கையில் சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு உரிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வரவேற்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஏழை, எளிய மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் பட்ஜெட்டாக தமிழக அரசின் பட்ஜெட் விளங்குகிறது. அடித்தட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் நலனை மேம்படுத்தவும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல் இலங்கைக்கு இந்தியா உதவி செய்வது வழக்கமானதாக இருந்தாலும், சீனா மற்றும் பாகிஸ்தானுடன் இணைந்துகொண்டு இந்தியாவுக்கு எவ்வளவு விதமான நெருக்கடிகளை இலங்கை தந்தது என்பது நம் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். எனவே, இதைக் கருத்தில்கொண்டு மத்திய அரசு இலங்கைக்கு உதவி செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும், உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவ, மாணவிகள் படிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். அதற்கான செலவை அரசே ஏற்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்ததால்தான் அ.தி.மு.க தொடர்ந்து சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அந்தக் கட்சியின் சரிவுக்கு முக்கியக் காரணம் பி.ஜே.பி-தான். இதைத் தெரிந்துகொண்டுதான் அவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்றிருக்கிறார்கள்.

அரியலூரிலிருந்து கடலூர், சிதம்பரத்துக்கு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல், மாவட்ட தலைநகரான அரியலூரில் கேந்திர வித்தியாலயா பள்ளி அமைப்பதற்காக ஐந்து ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இடம் கிடைத்தால் உடனடியாக பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு கலைக் கல்லூரியில், சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி வழங்கப்படவிருக்கிறது" என்றார்.