மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பாக நெல்லை, பாளையங்கோட்டையிலுள்ள தூய சவேரியார் கல்லூரியில் பொருநை நல்லிணக்கப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டார். சர்வ கட்சிப் பிரமுகர்கள் மற்றும் சர்வ மதப் பெரியவர்கள் பங்கேற்ற இந்த விழாவையொட்டி புதுப் பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து தப்பாட்டம், ஒயிலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்த விழாவில் பேசிய தொல்.திருமாவளவன், ”தமிழர்கள் அனைவரும் சாதி, மத பேதமற்றுக் கொண்டாடும் திருநாள் பொங்கல் பண்டிகை. நல்லதுக்கு இணக்கமாக இருக்க வேண்டும் என்பதை விதைக்கும் நாள் பொங்கல். அதனால் அன்பை, நட்பை விதைப்பதற்கு இணக்கமாக இருக்க வேண்டும்.
அம்பேத்கரிய, பெரியாரிய, இடதுசாரி அரசியல் என்பது சமூகநீதியை விதைக்கும் அரசியலே தவிர, வெறுப்பை விதைக்கிற அரசியல் அல்ல. அதனால் வலதுசாரி அரசியலுக்கும் இடதுசாரி அரசியலுக்குமிடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டு அந்த இடைவெளியைக் களைவதற்காக விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் நடத்த வேண்டுமே தவிர வெறுப்பை ஏற்படுத்தக் கூடாது.

தமிழ்நாடு என்பதற்கும் தமிழகம் என்பதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? அம்மா என்று சொன்னாலும் தாய் என்று சொன்னாலும் ஒன்றுதானே? அன்னை என்று சொன்னாலும் தாய் என்று சொன்னாலும் ஒன்றுதானே? தாய்க்குப் பல பெயர்கள் இருப்பதுபோல தாய்நாட்டுக்கும் பல பெயர்கள் உண்டு. தமிழகம், தமிழ்நாடு, தமிழ் மண், தமிழ் தேசம், தமிழ்த் தாயகம் என்று பல பெயர்களில் சொல்லலாம்.
திராவிட அரசியலை எதிர்ப்பது என்பதற்காக தி.மு.க-வையோ அல்லது தி.க-வையோ எதிர்த்தால் அவர்கள் அதை எதிர்கொள்வார்கள். அதற்கான சக்தி, பலம் அவர்களிடம் இருக்கிறது. ஆனால், திராவிட அரசியலை எதிர்ப்பது என்ற பெயரில் சமூகநீதியை எதிர்ப்பதால்தான் அருணன் போன்ற இடதுசாரிகளும் நானும் ஒரே களத்தில் நின்று அதை எதிர்கொள்கிறோம்.

தமிழ்நாடு என்றே சொல்லக் கூடாது என்பதில் ஒரு சூழ்ச்சி இருக்கிறது. அது தமிழர்களின் ஒற்றுமையைச் சிதைப்பது. ஆந்திரப் பிரதேஷ், மத்தியப் பிரதேஷ், உத்தரப்பிரதேஷ் என்பதில் உள்ள பிரதேஷ் என்பதுகூட வடமொழியில் நாடு என்பதையே குறிக்கும். மகாராஷ்டிரா என்பதில் உள்ள ராஷ்டிரா என்பதுகூட நாடு என்பதையே குறிக்கும். இந்த நாட்டையே இந்து ராஷ்டிராவாக மாற்ற நினைப்பவர்களுக்கு, ராஷ்டிரா என்று இனி யாரும் சொல்லக் கூடாது எனப் பேசும் துணிச்சல் இருக்கிறதா?
அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும் மருத்துவப் படிப்புக்கான ஏழரை சதவிகித இட ஒதுக்கீட்டை அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெறுவதைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டிருக்கும் ஆசிரியர்களுக்கான பணி ஒப்புகை அரசாணையை உடனடியாக வழங்குவதுடன், காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இனிமேல் அனுமதி வழங்கப்படுவதில்லை என அரசு கொள்கை முடிவு எடுப்பதற்கு முன் அங்கீகாரம் கிடைத்த பள்ளிகளுக்கு அரசாணையை வழங்க வேண்டும்” என திருமாவளவன் வலியுறுத்தினார்.