Published:Updated:

பா.ஜ.க-விடம் குறைந்தபட்ச சமரசத்தைக்கூட தி.மு.க கையாளக் கூடாது! - திருமா க்ளியர்!

தொல்.திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
தொல்.திருமாவளவன்

- பா.ம.க-வுடன் இணைவதற்கான சூழலை அவர்களே கெடுத்துவிட்டார்கள்!

பா.ஜ.க-விடம் குறைந்தபட்ச சமரசத்தைக்கூட தி.மு.க கையாளக் கூடாது! - திருமா க்ளியர்!

- பா.ம.க-வுடன் இணைவதற்கான சூழலை அவர்களே கெடுத்துவிட்டார்கள்!

Published:Updated:
தொல்.திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
தொல்.திருமாவளவன்

வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி, தன் அறுபதாவது வயதில் அடியெடுத்துவைக்கிறார் ‘விடுதலைச் சிறுத்தைகள்’ கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் நடந்த அமளிகள், தமிழகத்தில் தி.மு.க கூட்டணி நிலவரங்கள் உள்ளிட்ட சில கேள்விகளோடு சென்னை இல்லத்தில் அவரைச் சந்தித்தேன்...

“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வெளிநடப்பு செய்வதும், அமளியில் ஈடுபடுவதும் ஏன்?’’

“பா.ஜ.க ஆட்சிக்கு வந்த இந்த எட்டு ஆண்டுக் காலத்தில், எதிர்க்கட்சிகளின் உணர்வுகளைக் கொஞ்சம்கூட மதிப்பதில்லை. அவர்கள் நினைப் பதைச் செய்வதற்கு ஏற்றாற்போல் தனிப் பெரும் பான்மை இருக்கிறது. மாநிலங்களவையில் போதிய வலிமை இல்லை என்றாலும், மாநிலக் கட்சிகளை ஏதோ ஒரு வகையில் அச்சுறுத்தி தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்க வைக்கிறார்கள். பாசிசத் தன்மையோடு நடந்துகொள்கிறார்கள். நாடாளு மன்ற நடைமுறை மரபுக்கு மாறாகச் செயலாற்றி வருகிறார்கள். அதனால்தான் ஜனநாயகரீதியில் எங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டி யிருக்கிறது.”

“அப்படியென்றால் நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தின் குரல் நசுக்கப்படுகிறது என்கிறீர்களா?”

“ஆம்... அதோடு நாடாளுமன்ற ஜனநாயகத்திலேயே மாற்றம் கொண்டுவருவதற்கான வாய்ப்புகளும் அதிகமிருக்கின்றன. தேர்தலே இல்லாத நிலை, பிரதமர் முறை இல்லாமல் அதிபர் முறை என எதை வேண்டுமானாலும் செய்வதற்கு பா.ஜ.க அரசு தயாராகிவருகிறது. நாட்டைப் பற்றி எந்தக் கவலையுமில்லாமல், தன் நண்பர்களான அதானி, அம்பானிக்காக நாடுவிட்டு நாடு பயணப்பட்டுக்கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.”

பா.ஜ.க-விடம் குறைந்தபட்ச சமரசத்தைக்கூட தி.மு.க கையாளக் கூடாது! - திருமா க்ளியர்!

“ `அதானி, அம்பானி வளர்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும் பங்கிருக்கிறது’ என்கிறாரே நிர்மலா சீதாராமன்?”

“நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு அரசுமீது வைக்கும் விமர்சனத்தைச் சரி என்றோ, தவறு என்றோ நான் சொல்லவில்லை. ஆனால், இந்தியாவின் அரசு என்பது டெல்லியில் இருப்பதுதான். மாநிலங்களில் இருப்பதை அரசு என்று நாம் சொல்லிக்கொள்ளலாமே தவிர, இங்கு இயற்றப்படும் தீர்மானங்களைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக்க முடியாது. சட்டம் இயற்றுபவர்கள் மத்தியில் இருப்பவர்களே. எனவே, அவர்களைத்தான் விமர்சிக்க வேண்டியிருக்கிறது.”

“கூட்டணியில் இருப்பதால், உங்களால் மாநில அரசை வலுவாக எதிர்க்க முடியவில்லையோ?”

“கட்சிநலன், தனித்துவம் எல்லாம் கடந்து, நாட்டுநலன் என்று பார்க்கும்போது எங்கள் கூட்டணி 2024 தேர்தல் வரை தொடர்ந்து பயணிக்கவேண்டியிருக்கிறது. அதற்காகத் தவறுகளையோ, பிழைகளையோ கண்டும் காணாமலும் போய்விடுவதில்லை. சுட்டிக்காட்ட வேண்டிய இடங்களில் சுட்டிக்காட்டுகிறோம். நட்பு இல்லாதவர்களிடம் எதிர்த்துச் சொல்கிறோம். நட்பாக இருப்பவர்களிடம் எடுத்துச் சொல்கிறோம்.”

“நீங்கள் எடுத்துச் சொல்வதை தமிழக அரசு கேட்கிறதா?”

“எங்கள் கோரிக்கைகளை அரசிடம் வைக்கிறோம்; சிலவற்றைச் செய்கிறார்கள். அதைத் தாண்டி அதிகாரிகளால் ஆன அதிகார வர்க்கம் என்ற ஒன்று இருக்கிறது. அது, சில விஷயங்களை ஏற்றுக்கொள்ளும், சில விஷயங்களை ஏற்றுக்கொள்ளாது. அங்குதான் அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் வேறுபட்ட கருத்து வரும். மக்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்; அடுத்த தேர்தலில் வெற்றிபெற வேண்டும்; மக்களின் நன்மதிப்பைப் பெற வேண்டுமென்று அரசியல்வாதிகள் யோசிப்பார்கள். ஆனால், அதிகாரவர்க்கம் வேறொன்றாக யோசிக்கும்.”

“ `தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்காது’ என்கிற விமர்சனம் தொடர்ச்சியாக எழுகிறதே?’’

“அண்ணா, கலைஞர் காலத்திலிருந்தே இது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. காரணம், தி.மு.க-வை பெரியார் இயக்கத்தின் தொடர்ச்சியாகப் பார்க்கிறார்கள். அ.தி.மு.க-வையோ, திராவிடம் என்கிற பெயரில் இருக்கின்ற மற்ற இயக்கங்களையோ பெரியார் இயக்கத்தின் தொடர்ச்சியாக யாரும் பார்ப்பதில்லை. பெரியாரை எதிர்க்கக்கூடிய சக்திகள், தி.மு.க-வையும் தொடர்ந்து எதிர்க்கிறார்கள்.’’

பா.ஜ.க-விடம் குறைந்தபட்ச சமரசத்தைக்கூட தி.மு.க கையாளக் கூடாது! - திருமா க்ளியர்!

“ `திராவிடக் கட்சி’, `திராவிட மாடல்’ இரண்டுக்குமான வித்தியாசம் என்ன?”

“திராவிடக் கட்சி என்றால் அது தி.மு.க-தான். திராவிட மாடல் என்பது என் பார்வையில், ஒரு கருத்தியல் சார்ந்த சொல்லாடல். ஒரு நிலப்பரப்பைச் சார்ந்த சொல்லாடலா அல்லது கட்சி சார்ந்த சொல்லாடலா என்று பார்ப்பதை விட ஆரியத்துக்கு எதிரான அனைத்தும் திராவிடம்தான் என்று புரிந்துகொள்ளலாம்.”

“அமலாக்கத்துறை போன்ற புலனாய்வுத் துறைகளை, பா.ஜ.க தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதாக விமர்சனம் எழுகிறதே?”

“பா.ஜ.க-வின் முன்னோடிகளான இந்துத்துவ சக்திகளின் நூறாண்டுக்காலக் கனவுத் திட்டம் ‘இந்து ராஷ்டிரம்.’ அதை அடைவதற்கு எல்லா வேலைகளையும் செய்துவருகிறார்கள். ஒரே நாடு, ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே மதத்தைப் பின்பற்றக்கூடிய தேசத்தைக் கட்டமைக்க விரும்புகிறார்கள். அதற்கு அரசியல்ரீதியான பகைவர்களை ஓரங்கட்ட வேண்டும். அவர்களின் அரசியல் பகை என்று பார்த்தால் காங்கிரஸ், இடதுசாரிகள்தான். அதற்குத்தான் அமலாக்கத்துறை போன்ற புலனாய்வுத் துறைகளைப் பயன்படுத்துகிறார்கள்.”

“தமிழ்நாட்டில் காங்கிரஸார், பா.ஜ.க-வுக்கு எதிராகத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்குத் தடையாக இருக்கின்றனவா தி.மு.க-வின் சமீபத்தியச் செயல்பாடுகள்?”

“தி.மு.க அரசியலாக முடிவெடுக்கிறது. அதிகாரிகள் சட்டம்-ஒழுங்குக்காக முடிவெடுக் கிறார்கள். பிரதமரை அழைக்க வேண்டும் என்பது அரசியல் முடிவு. ‘பிரதமர் வருகையில் சட்டம்-ஒழுங்குக்குக் குந்தகம் நேர்ந்துவிடக் கூடாது. கறுப்புக்கொடி, போராட்டம் போன்றவை நடந்துவிடக் கூடாது. அதைத் தடுத்தாக வேண்டும்’ என்பது அதிகாரிகள் முடிவு. என்னைப் பொறுத்தவரை பினராயி விஜயன் எப்படி உறுதியாக நிற்கிறாரோ, அந்த மாதிரி முதல்வர் ஸ்டாலின் நிற்கலாம். கேரளாவைவிடப் பன்மடங்கு வலுவான மாநிலம் தமிழ்நாடு. கேரள முதல்வரைவிட வலுவான மக்கள் பின்னணி கொண்டிருக்கிற ஒரு முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். மத்தியில் ஆட்சியில் இருப்பதால் அவர்களை அழைக்க வேண்டும் என்பது அவசியமற்றது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஸிடம் குறைந்தபட்ச சமரசத்தை தி.மு.க கையாண்டால்கூட, தி.மு.க அணியில் பா.ஜ.க எதிர்ப்பு என்பது மெல்ல மெல்ல நீர்த்துப்போய்விடும். அது தி.மு.க-வின் எதிர்காலத்துக்கு பாதிப்பை உண்டாக்கும் என்பது என் கருத்து.”

“ `பழைய பிரச்னைகளையெல்லாம் மறந்து, மீண்டும் இணைந்து பணியாற்றலாம்’ என்று பா.ம.க அழைத்தால் இணைவீர்களா?”

“நாங்கள் வன்னியர் சமூகத்தோடு முரண்படவில்லை; மோதவில்லை; பகையாகப் பார்க்கவில்லை. ஆனால் பா.ம.க-வுடன் இணைந்து பணி செய்வதற்கான சூழல் இல்லை. அதை அவர்களே கெடுத்துவிட்டார்கள்.”

“தமிழ்நாட்டில் `நாங்கள்தான் எதிர்க்கட்சி’ என்கிற வாதம் அதிகமாக இருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு மேல் இயங்கிவரும் வி.சி.க அதில் பங்கெடுத்துக்கொள்ளவில்லையா அல்லது அந்த அளவுக்கு இன்னும் வளரவில்லையா?”

“நாங்கள் பொறுப்புணர்ந்து வேலை செய்கிறோம். சாதாரண மக்களை அமைப்பாக்குகிறோம், அரசியல்படுத்துகிறோம். பொருளாதார நெருக்கடிகள், விமர்சனங்கள், அரசியல் அவதூறுகள் கடந்து தாக்குப்பிடித்து நிற்கிறோம். ஒருகாலத்தில் மக்கள் எங்களை அங்கீகரிப்பார்கள். எங்களை எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ அந்த இடத்தில் வைப்பார்கள். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது!”