அரசியல்
அலசல்
Published:Updated:

அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் ஆட்களாக இருக்கிறார்கள் ஆளுநர்கள்!

திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
News
திருமாவளவன்

- போட்டுத்தாக்கும் திருமாவளவன்

இந்திய கடற்படையினர் தமிழக மீனவர்கள்மீது நடத்திய துப்பாக்கிச்சூடு, இந்தித் திணிப்பு, மாநில உரிமைகள் பறிபோவது ஆகிய பிரச்னைகளை மையப்படுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தி முடித்த சூட்டோடு அமர்ந்திருந்த வி.சி.க தலைவர் திருமாவளவனை, அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்தேன். தகிக்கும் தமிழ்நாட்டு அரசியல் குறித்த கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இங்கே...

“கோவை கார் குண்டு வெடிப்புச் சம்பவம், 1998-ல் நிகழ்ந்த கோவை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களை நினைவுபடுத்துவதாக விமர்சிக்கப்படுகிறதே?”

“கோவைச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று. இது போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதற்கு அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளும் மைய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். எனினும், இந்தச் சம்பவம் பா.ஜ.க., சங் பரிவார அமைப்புகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. இதைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்வதற்கும், அவர்கள் விரும்புகிற சமூகப் பதற்றத்தை உருவாக்குவதற்கும் முயல்கிறார்கள். எனவேதான், மீண்டும் 1998 என்பது போன்ற பேச்சுகள் வருகின்றன. ஆனால், சூழல் அப்படி இல்லை என்பதை மக்களே உணர்ந்திருக்கிறார்கள்.”

அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் ஆட்களாக இருக்கிறார்கள் ஆளுநர்கள்!

“சமூகப் பதற்றத்தை உருவாக்குவதன் மூலம் பா.ஜ.க தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்கிறது என்கிறீர்களா?”

“ஆம்... இந்து, இந்து அல்லாதவர்கள் என்கிற அரசியலை அவர்கள் வலிமைப்படுத்துவார்கள். குறிப்பாக இஸ்லாம் வெறுப்பை இன்னும் தீவிரப்படுத்துவார்கள். அதன் மூலம் இந்து சமூகத்தின் பெரும்பான்மை வாக்குவங்கியைத் திரட்ட முடியும் என்று நம்புகிறார்கள். அதற்கு உதாரணம், குஜராத்தில் நடந்த படுகொலையும், பாபர் மசூதி இடிப்பும், அதையொட்டி அவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் வரலாறு.”

“ ‘இஸ்லாமிய சமூகம் வேறு, இஸ்லாம் தீவிரவாதிகள் என்பவர்கள் வேறு என்பதை தி.மு.க கூட்டணிக் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று பா.ஜ.க வலியுறுத்துகிறதே?”

“பா.ஜ.க-தான், முதலில் இதைப் பிரித்துப் பார்க்க வேண்டும். ஒட்டுமொத்தமாக ‘இஸ்லாமியத் தீவிரவாதிகள்’ என்றுதான் அவர்கள் சொல்கிறார்களே தவிர, ‘தீவிரவாத இஸ்லாமியர்’ என்று சொல்வதில்லை... அதேவேளையில் யாரும் ‘இந்துத் தீவிரவாதிகள்’ என்ற சொல்லாடலைப் பயன்படுத்துவதில்லை. அவர்கள் திரும்பத் திரும்ப இஸ்லாம் சமூகத்தையே தீவிரவாத சமூகம், பயங்கரவாத சமூகம் என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இந்த வெறுப்பு அரசியல் இந்து உணர்வை வளர்ப்பதற்கும், வலுப்படுத்துவதற்கும் பயன்படும் என்று நம்புகிறார்கள்.”

“ ‘திருமாவளவன் தொடர்ந்து இஸ்லாமியர்களை ஆதரிக்க, அவர்கள் தரப்பிலிருந்து பெறும் நிதிதான் காரணம்’ என்கிற குற்றச்சாட்டு குறித்து...”

“இது அற்பத்தனமான குற்றச்சாட்டு. சிறுபான்மைச் சமூகத்தின் பாதுகாப்பை வலியுறுத்தக் கூடியவன் நான். மற்றபடி யாரிடத்திலும் போய் இயக்க வளர்ச்சிக்காகக் கையேந்தி நின்றதில்லை. அப்படி ஒரு தேவையும் எனக்கு எழவில்லை.”

“கோவைச் சம்பவம் குறித்த விசாரணையை என்.ஐ.ஏ-விடம் ஒப்படைத்திருப்பதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?”

“ ‘மாநில உரிமைகளில் தலையிடக்கூடிய யதேச்சதிகார அமைப்பு என்.ஐ.ஏ’ என்று நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறோம். ஆனாலும்கூட இந்த வழக்கை என்.ஐ.ஏ விசாரிப்பது ஏற்புடையது என்கிற கருத்து பொதுவாக மக்கள் மத்தியில் மேலோங்கியிருக்கிறது. அதோடு மாநில அரசுமீது தொடர்ந்து பா.ஜ.க பழிபோட்டுவரும் நிலையில், உண்மையைக் கண்டுபிடிப்பது என்.ஐ.ஏ-வின் பொறுப்பாகிறது. பொதுமக்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு பியூரோக்ரஸி சிஸ்டம் சரியா இருக்குமென்று சொல்ல முடியாது. அவர்களுக்கென்று ஒரு நடைமுறை இருக்கிறது. அதைப் பின்பற்றித்தான் எதையும் செய்ய முடியும். எனவே, இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது என்.ஐ.ஏ விசாரிப்பதை நாங்களும் ஏற்கிறோம்.”

“நீட் தேர்வு குறித்து கடும் எதிர்ப்பைப் பதிவுசெய்தவர் நீங்கள்... ‘நீட்’ ஒழிப்பில் தி.மு.க அரசின் நடவடிக்கைகள் திருப்தி தருகின்றனவா?”

“கொள்கை அடிப்படையில் இன்றும் `நீட்’டை எதிர்க்கிறோம். சட்டமன்றத்தில் ஒரு முறைக்கு இரு முறை மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியும் அவர்கள் அதற்கு முக்கியத்துவம் தரவில்லை. இந்திய ஒன்றிய அரசுதான் முட்டுக்கட்டையாக இருக்கிறதே தவிர, தமிழ்நாடு அரசு இல்லை. நம் எதிர்ப்பையும் தாண்டி அவர்களின் அதிகாரம் வலுவாக இருப்பதால் வேறு வழியில்லாமல் பிள்ளைகளை அதற்குத் தயார்படுத்துகிறோம். ஒருவகையில் அதற்கு ஆதரவு தரவேண்டிய சூழல் உருவாகிறது. இன்னும் சொல்லப்போனால் பா.ஜ.க அரசை எதிர்க்கிறோம். ஆனால், பா.ஜ.க அரசிடம்தான் சில கோரிக்கைகள் வைக்கிறோம். தனியார்மயமாதலை எதிர்த்தாலும், அதில் இட ஒதுக்கீடு கேட்கிறோம். இந்த முரண் சந்தர்ப்பவாத அடிப்படையிலானது கிடையாது. இது தவிர்க்க முடியாதது. இதுதான் சிஸ்டத்தில் இருக்கும் பிரச்னை.

“ `தமிழகத்தில் பா.ஜ.க-வின் வளர்ச்சிக்கு தி.மு.க மறைமுகமாக உதவுகிறது’ என்கிற விமர்சனம் பற்றி...”

“பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஸை வளர்க்க தி.மு.க துணைபோகிறது என்று சொன்னால் அதைவிட நகைச்சுவை வேறெதுவும் கிடையாது. தி.மு.க வளர்ந்த கட்சி. அமலாக்கத்துறை, வருமான வரிச் சோதனை போன்ற நெருக்கடிகளையெல்லாம் சந்தித்த கட்சி. பலமுறை ஆட்சி இழந்து மீண்டெழுந்த கட்சி. மைய அரசின் சோதனைகளை எதிர்கொள்ளத் துணிந்தவர்கள் தி.மு.க-வினர். அரசியல்ரீதியாக அவர்கள் சர்வைவல் முக்கியமானது. அ.தி.மு.க-போல கட்சியைக் காப்பாற்றுவதா, வேண்டாமா என்கிற இக்கட்டான நிலையில் தி.மு.க இல்லை. எனவே, தமிழகத்தில் தி.மு.க-வை பா.ஜ.க அடிபணிய வைக்கிறது, பா.ஜ.க வளர்ச்சிக்கு தி.மு.க உதவுகிறது என்பதெல்லாம் கற்பனையான விமர்சனங்கள்.”

“ஆளுநரைத் திரும்பப் பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட தி.மு.க மற்றும் தோழமைக் கட்சி எம்.பி-க்களுக்கு டி.ஆர்.பாலு கடிதம் எழுதியிருக்கிறாரே?”

“தி.மு.க-வின் நிலைப்பாட்டை ஆதரித்து வி.சி.க சார்பாகவும் அதில் கையெழுத்திடுகிறோம். ஆனால், இந்தப் புகாரின் மூலம் ஆளுநர்மீது நடவடிக்கை எடுக்கவோ அல்லது அவரைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சியோ நடக்கும் என்று சொல்லிவிட முடியாது. எனினும், தமிழ்நாட்டைப் பார்த்து பிற மாநிலங்களிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு, இந்தப் பிரச்னை விவாதத்துக்கு உட்படுத்தப்படும் என்கிற நம்பிக்கையில் இதை முன்னெடுக்கிறோம். இது ஒரு மென்மையான நிலைப்பாடுதான். ஆனால், ஆளுநரின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது அவருக்கு எதிரான போராட்டம் பெரிய அளவில் வெடிக்க வேண்டிய தேவை இருக்கிறது. பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் ஆளுநராக இருப்பவர்கள் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் ஆட்களாக இருக்கிறார்கள். ஒருதலைப்பட்சமாக முடிவுகள் எடுக்கிறார்கள். வெளிப்படையாக அரசியல் பேசுகிறார்கள். இதற்கு முன்பெல்லாம் அரசியல் பேசுவதற்கு அச்சப்படுவார்கள். இந்தப் போக்கு ஆரோக்கியமானதில்லை.”

அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் ஆட்களாக இருக்கிறார்கள் ஆளுநர்கள்!

“வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாம் அணி சாத்தியமா... அதில் உடன்படுகிறீர்களா... ஏனென்றால், அதை முன்னெடுக்கும் சந்திரசேகர ராவ் போன்றவர்களோடு நட்பு பாராட்டிவருபவர் நீங்கள்...’’

“மூன்றாம் அணி கூடாது என்பதைத் தொடர்ந்து சொல்லிவருகிறேன். இதைத்தான் தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் கட்சியின் பொதுக்குழுவிலும் அழுத்தமாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். ஏனென்றால், காங்கிரஸைத் தவிர்த்துவிட்டு ஓர் அணி அமைவது நாட்டுக்கு நல்லதல்ல. ஒரே அணி, அதற்கு எதிரணி பா.ஜ.க-வாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதை வீழ்த்த முடியும். கருத்து மாறுபாடுகள் இருந்தாலும்கூட, அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு அரசமைப்புச் சட்டத்தை, நாட்டைக் காப்பாற்ற ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு பா.ஜ.க-வைத் தனிமைப்படுத்த வேண்டும்.”

“அப்படி ஒரு நிலைமை ஏற்படும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?”

“இன்று பா.ஜ.க-வுக்கு எதிராகப் பலர் இருக்கிறார்கள் என்பது உண்மை. அதன் கூட்டணியில் இருந்தவர்களும் வெளியேறிவிட்டார்கள். தேர்தல் நேரத்தில் அவர்கள் யாரும் பா.ஜ.க-வோடு ஒன்றுபடக் கூடாது. தமிழ்நாட்டில்கூட அ.தி.மு.க உட்பட கூட்டணியில் இருக்கும் கட்சிகள் பா.ஜ.க-வுடன் இணையாமல் ஓர் அணியில் நிற்க வேண்டும். பா.ஜ.க-வைத் தனிமைப்படுத்த வேண்டும்.”

“அப்படியென்றால் தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க., பா.ம.க., வி.சி.க எல்லாம் ஓரணியில் திரளும் என்கிறீர்களா... அப்படி ஓர் இணைப்பு சாத்தியமா?”

“சாத்தியப்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கிறது. பா.ஜ.க-வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடுவது நாட்டுக்கு நல்லதல்ல. அந்த ஒற்றைக் குறிக்கோளை வைத்துக்கொண்டுதான் மற்ற விஷயங்களைத் தீர்மானிக்க வேண்டிய தேவை இருக்கிறது.”