அலசல்
Published:Updated:

“தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க வரமாட்டார்கள்!” - அடித்துச் சொல்லும் திருமாவளவன்

திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
News
திருமாவளவன்

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், உடனே நடவடிக்கை எடுக்கச் சொன்னால்கூட, நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடிகள் அதிகாரிகளுக்கு இருக்கலாம்.

“புதுக்கோட்டையில் நடந்த தீண்டாமைக் கொடுமை, ‘அது திராவிடக் கட்சிகளின் தோல்வி’ என்கிற விமர்சனம், ‘அதற்கு ஜனநாயகச் சக்திகள் குரல் கொடுக்கவில்லை’ என்கிற திருமாவளவனின் வருத்தம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவனை அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்துக் கேள்விகளை முன்வைத்தேன்...

“ ‘புதுக்கோட்டை மாவட்டத்தை வன்கொடுமைப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று திருமாவுக்கு இப்போதுதான் தெரிகிறதா...’ என்கிறார்களே?”

“நிறைய முறை சொல்லியிருக்கிறோம். இது இப்போதுதான் கேள்வி கேட்பவர்களின் காதில் விழுந்திருக்கிறது என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்... புதுக்கோட்டை மட்டுமல்ல, தமிழ்நாடே வன்கொடுமைப் பிரதேசமாகத்தான் இருக்கிறது.”

“தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க வரமாட்டார்கள்!” - அடித்துச் சொல்லும் திருமாவளவன்

“அப்படியென்றால், சாதி ஒழிப்பு, சமூகநீதி என்பதெல்லாம் வெறும் பேச்சளவில் மட்டும்தான் தமிழ்நாட்டில் இருக்கின்றன என்கிறீர்களா?”

“சமூகநீதி ஆட்சி என்று சொல்லக்கூடிய தி.மு.க ஆட்சியில் இது எப்படி நடந்தது என்று கேட்பது குதர்க்கமான வாதம். தி.மு.க-விடம் சமூகநீதி கோட்பாடு இருக்கிறது. அதற்காகத்தான் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். ஆனால், தீண்டாமை ஆயிரக்கணக்கான வருடங்களாகச் சமூகத்தில் நிலவிவரும் மிக மோசமான ஓர் உளவியல் பிரச்னை. இது போன்ற சமூகக் கொடுமைகள் தலைதூக்கும்போது, அதைத் தடுக்க எந்த அளவுக்கு அரசு முன்வருகிறது என்பதை கவனிக்க வேண்டும். அதற்கு உதாரணம் இந்த புதுக்கோட்டைச் சம்பவம். கவிதா ராமு ஐ.ஏ.எஸ் சுதந்திரமாக முடிவெடுக்க, செயல்பட, இந்த அரசு இலகுவாக இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.”

“அரசு இலகுவாக இருந்தால், இது போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் என்ன சிக்கல்?”

“ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், உடனே நடவடிக்கை எடுக்கச் சொன்னால்கூட, நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடிகள் அதிகாரிகளுக்கு இருக்கலாம். அதிகாரிகள் மத்தியிலும் தலித் எதிர்ப்பு மனநிலை இருக்கத்தான் செய்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதைவிட, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்பதில்தான் கவனமாக இருக்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு எதிரான நடவடிக்கையாக இது மாறுகிறது. இது அதிகார வர்க்கத்தின் ஸ்டைல்.”

“இதுதான் அதிகார வர்க்கத்தின் ஸ்டைல் என்றால்... ஆட்சியாளர்களை நம்பி வாக்களித்த மக்களின் நிலை?”

“ஆட்சியாளர்களின் உத்தரவைக் கேட்டு உடனே அதிகாரிகள் களத்தில் செய்துவிடுவது கிடையாது. இந்த உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆட்சியாளர்கள் போய் நாற்காலியில் உட்கார்ந்ததும், அவர்கள் நினைப்பதையெல்லாம் செயல்படுத்திவிட முடியாது. அதற்கு இந்த அரசு இயந்திரம் இடம் கொடுக்காது. இங்கு மாற்ற வேண்டியது அந்த சிஸ்டத்தைத்தான்.”

“புதுக்கோட்டைச் சம்பவத்தை ஒட்டி, ‘ஜனநாயக சக்திகள் அமைதி காப்பது வருத்தமாக இருக்கிறது’ என்றீர்களே..?”

“அமைச்சர்கள், முற்போக்கு அமைப்புகள் என எல்லோரும் நண்பர்களாக, ஜனநாயக சக்திகளாக இருந்தாலும், அவர்கள் இதுவரை மனிதாபிமானத்தின் அடிப்படையில்கூட எந்தவொரு கருத்தும் சொல்லவில்லையே என்று எனக்கு வருத்தம்தான். இது வி.சி.க-வுக்கான, தலித் மக்களுக்கான பிரச்னை மட்டுமில்லை. ஒட்டுமொத்தச் சமூகத்தின் பிரச்னை. எல்லோரும் பேச வேண்டிய பிரச்னை. அதனால்தான் 2002-ல் நான் யாழ்ப்பாணத்தில் பிரபாகரனைச் சந்தித்தபோது, திண்ணியத்தில் மலத்தை வாயில் திணித்த கொடுமை பற்றிக் கேட்டார். ‘எப்படி தமிழ்நாட்டில் இதைச் சகித்துக்கொண்டிருக் கிறார்கள்... இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த பிறகும் தலைவர்கள் யாரும் கண்டிக்காமல் இருக்கிறார்கள்... இன்னும் அவன் உயிரோடுதான் இருக்கிறானா... அவனை எப்படி விட்டுக் கொண்டிருக்கிறீர்கள்..?’ என்று கொந்தளித்தார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே மாதிரி ஒரு சம்பவம் நடக்கிறது எனும்போது, இப்போதும் நாம் மௌனம் சாதிப்பது ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது.”

“ `தீண்டாமைக் கொடுமை செய்தவர்களைச் சுட்டுத்தள்ளினால், அடுத்து இதுபோல் எவனும் செய்யத் துணிவானா?’ எனும் சீமானின் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அவருடைய கருத்து நேர்மறையாக இருந்தாலும், யதார்த்தத்தில் ஜனநாயகத்துக்கு மாறாக இருக்கிறது. எனவே, அது நடைமுறைக்கு ஒவ்வாத கருத்து.”

“தமிழ்த் தேசியம், ஈழம், தமிழர் நலன் என்று நீங்களும் சீமானும் ஒற்றைக் கருத்தியலில் நிற்கிறீர்கள். அப்படியிருக்க அவருடன் இணைந்து பயணிக்கும் வாய்ப்பிருக்கிறதா?”

“இந்திய தேசியவாதத்தையும், அதன் பின்புறமாக இருக்கும் பார்ப்பனியத்தையும் எதிர்க்காமல், நம் அண்டை மாநிலத்தைச் சார்ந்தவர்களை வடுக வந்தேறிகள், திராவிடக் கட்சிகள் என எதிர்க்கும்போது நம் நோக்கம் முழுமையாக மடைமாற்றம் செய்யப்படுகிறது. எனவே, தமிழ்த் தேசியத்தின் முதன்மையான எதிரி யார் என்பதை வரையறுப்பதில் ஒரு முரண்பாடு இருக்கிறது. உரிமைக்காகக் குரல் கொடுக்க முன்வரும் அனைத்து மாநிலச் சக்திகளையும் நட்பாக ஒருங்கிணைத்து, இந்திய தேசியவாதம் பேசுபவர்களை எதிர்க்க வேண்டும். உண்மையான தமிழ்த் தேசியத்தின் எதிரிகளை விட்டுவிட்டு, தமிழ்த் தேசியத்தின் நட்புச் சக்திகளை மக்களிடம் எதிரியாகக் காட்டுகிறார்கள். இதனால் உண்மையான எதிரியைத் தப்பவிடுகிறார்கள். இது போன்ற காரணங்களால் நாங்கள் முரண்பட்டு நிற்கிறோம்.”

“ `மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் என்.எல்.சி-க்கு எதிராக, பா.ம.க-வோடு இணைந்தும் போராடத் தயார்’ என்கிறார் த.வா.க வேல்முருகன். வி.சி.க-வும் இதற்கு முன்வருமா?”

“இணைந்துதான் போராட வேண்டும் என்கிற அவசியமில்லை. அந்தப் பிரச்னை சார்ந்து மக்களுடன் உறுதியாகத் துணை நிற்கிறோம். ஆனால், பா.ம.க-வுடன் இணைந்து களத்தில் நிற்பதற்கான சூழலெல்லாம் இப்போது இல்லை.”

“அ.தி.மு.க - பா.ம.க கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், அதனால் பா.ம.க., தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கலாம் என்றும் பேச்சு இருக்கிறது. அப்படி நடந்தால் வி.சி.க-வின் நிலைப்பாடு?”

“தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க வர மாட்டார்கள். அதை நான் உறுதியாக நம்புகிறேன். சாதிய, மதவாதச் சக்திகளான பா.ஜ.க., பா.ம.க ஆகிய இரு கட்சிகளுடன், இனி எந்தக் காலத்திலும் தேர்தல் அரசியல் என்பதற்கான வாய்ப்பே இல்லை. அதில் வி.சி.க தெளிவான முடிவோடு இருக்கிறது.”

“ ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை மத்திய சட்டக்குழு பரிசீலனை செய்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான போக்கு. இதற்கு வி.சி.க சார்பாகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறோம். ஏற்கெனவே, `ஒரே தேசம் ஒரே கலாசாரம்’ என்கிற முழக்கத்தைத் தீவிரப்படுத்திவருகிறார்கள். இப்போது ஒரே தேர்தல் மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தைப் பறிக்கவும், மாநிலக் கட்சிகளின் வீரியத்தைக் குறைக்கவும் திட்டமிடுகிறார்கள். சர்வாதிகார அதிபர் ஆட்சி முறையைக் கொண்டுவருவதற்கான பாசிசவாதிகளின் மறைமுகச் செயல் திட்டம்தான் இது.”

“தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க வரமாட்டார்கள்!” - அடித்துச் சொல்லும் திருமாவளவன்

“ ‘ஜனநாயகம் பற்றிப் பேசும் திருமா, வி.சி.க-வின் தலைமைப் பொறுப்பை மற்ற கட்சிகள்போல் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தித் தேர்ந்தெடுப்பதில்லை’ என்கிற விமர்சனம் இருக்கிறதே?”

“அந்த அளவுக்கு இன்னும் நாங்கள் கனியவில்லை. அமைப்புரீதியான வளர்ச்சி இருந்தால்தான் தேர்தல் நடத்த முடியும். தேர்தல் நடத்தித்தான் தலைமைப் பதவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஒவ்வொரு மூன்றாம் ஆண்டிலும் முயற்சிகள் எடுக்கிறோம். அதேவேளையில் இந்தப் பொறுப்பில் நானாக அமரவில்லை. கட்சியின் மாநில செயற்குழு, மையக்குழுவின் முடிவுகளுக்குப் பிறகே தலைமையை நியமிக்கும் முறையைப் பின்பற்றுகிறோம்.”

“ராகுல் காந்தியின் நடைப்பயணம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்குக் கைகொடுக்குமா?”

“இந்த நடைப்பயணத்தை வெறும் பா.ஜ.க எதிர்ப்பாகவும், தேர்தல் அரசியலுக்கானதாகவும் மட்டும் நான் பார்க்கவில்லை. தேசத்தைப் பாதுகாப்பதற்கான பயணமாகப் பார்க்கிறேன். அந்த அளவுக்கு அவரின் பேட்டிகள், உரைகள் என எல்லாமே கொள்கை சார்ந்திருக்கின்றன. இதன் மூலம் இளம் புதிய தலைமுறையின் ஆதரவு அவருக்குப் பெருகியிருக்கிறது. அவர்மேல் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்த நம்பிக்கை, நிச்சயம் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்!”