Published:Updated:

“பா.ஜ.க., பா.ம.க இருக்கும் கூட்டணியில் அங்கம் வகிக்கமாட்டோம்!”

தொல். திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
News
தொல். திருமாவளவன்

திருமா திட்டவட்டம்

கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து, புதுச்சேரிக்கு ஷிஃப்ட்டான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இணையம் வழியாகக் கட்சிப் பணிகளை கவனிக்கிறார். கருத்தரங்குகள், நலத்திட்டப் பணிகள் என பிஸியாக இருந்தவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து, ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்புக்கேற்ற ஆங்கிலப் பெயர் மாற்றம் போன்ற பல விஷயங்களில் தமிழக அரசின் செயல்பாடுகளை தொடர்ச்சியாகப் பாராட்டிவருகிறீர்கள்... ஒருவேளை வி.சி.க., அ.தி.மு.க-வை நோக்கி நகர்கிறதா?’’

‘‘எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காகவே ஆளுங்கட்சியின் அத்தனை செயல்பாடுகளையும் விமர்சிக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களைப் பாராட்டலாம். அது நம்முடைய கடமையும்கூட. அந்த அடிப்படையில்தான் சில விஷயங்களை வரவேற்று, பாராட்டினோம். அதில், அரசியல் உள்நோக்கம் எதுவுமில்லை.’’

‘‘ஒருவேளை, பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி சேர்ந்தாலோ, பா.ம.க - தி.மு.க கூட்டணி அமைந்தாலோ, உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்?’’

‘‘விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தனிப்பட்ட ஒரு மனிதருக்கோ, தனிப்பட்ட ஒரு கட்சிக்கோ எதிரானது இல்லை. கொள்கை அடிப்படையிலேயே நாங்கள் எங்கள் தோழமைக் கட்சிகளை முடிவு செய்கிறோம். சமத்துவத்துக்கு எதிரான கொள்கை நிலைப்பாடுகளையுடைய கட்சிகளுடன் எங்களால் கூட்டணி சேர இயலாது. அந்த வகையில், மதரீதியான பிரிவினையை உண்டாக்கும் பா.ஜ.க-வுடனோ, சாதிரீதியான பாகுபாட்டை முன்னிறுத்தும் பா.ம.க-வுடனோ நாங்கள் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம். எக்காரணத்தை முன்னிட்டும் அவர்கள் இருக்கும் கூட்டணியிலும் நாங்கள் இருக்க மாட்டோம். அது, தி.மு.க கூட்டணியாக இருந்தாலும் சரி. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்; தெளிவாக இருக்கிறோம்.’’

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

‘‘பா.ஜ.க-வில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முருகன் தலைவராகியிருக்கிறார்; அதே சமூகத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவர் தற்போது தி.மு.க-விலிருந்து விலகி, பா.ஜ.க-வில் சேர்ந்திருக்கிறார். இதற்கிடையே தி.மு.க-வைக் கண்டித்து, பட்டியல் சமூக மக்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சம்பவங்களையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது பட்டியல் சமூக மக்களின் வாக்குகளைக் குறிவைத்து காய் நகர்த்துகிறதா அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி?’’

‘‘இதனால் மட்டுமே பட்டியல் சமூகம் பா.ஜ.க-வின் பின்னாலோ, அ.தி.மு.க-வின் பின்னாலோ போய்விடும் என்று நினைப்பது கற்பனாவாதம். தி.மு.க-வில் தனிநபர்கள் சிலர், பட்டியல் சமூக மக்களின் மனதைப் புண்படுத்தும்படி பேசியதால் ஒட்டுமொத்தமாக அதை தி.மு.க-வின் கருத்தாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. ஒருவேளை தி.மு.க தலைவர் அப்படிப் பேசியிருந்தால், அதை தி.மு.க-வின் கருத்தாக எடுத்துக்கொள்வதில் ஒரு நியாயமுண்டு. தனிப்பட்ட நபர்கள் தவறாகப் பேசும்போது, தனிப்பட்ட முறையில்தான் அதைக் கண்டிக்க முடியும்; விமர்சிக்க முடியும். அதுதான் நேர்மையான அரசியலாக இருக்க முடியும்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘‘வி.பி.துரைசாமி, ‘தி.மு.க-வில் சாதியப் பாகுபாடு பார்க்கப்படுகிறது’ என்று வெளிப்படையாகச் சொல்லியும் திருமாவளவன் அது குறித்து வாய் திறக்கவில்லையே?’’

‘‘தி.மு.க-வை விட்டு வெளியேறிய பிறகு அவர் இப்படிச் சொல்கிறார். தி.மு.க-வில் இருக்கும்போது அவரைப் பலமுறைச் சந்தித்திருக்கிறேன். ஒருநாளும் வருத்தப்பட்டு இப்படியொரு கருத்தைப் பகிர்ந்துகொண்டதில்லை. ஒருவேளை கட்சிக் கட்டுப்பாடு என்கிற அடிப்படையில் சொல்லாமல் இருந்திருக்கலாம். கட்சியில் இருந்துகொண்டே அவர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தால், நாம் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கலாம். கட்சியைவிட்டு வெளியேறி வேறொரு கட்சியில் சேர்ந்த பிறகு அவர் ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கும்போது, அதற்கு எல்லோரும் குறிப்பாக, அம்பேத்கரிய இயக்கங்களைச் சார்ந்தவர்கள் எதிர்வினையாற்ற வேண்டும் என எதிர்பார்ப்பது பொருளுடையதாக இல்லை.’’

‘‘ஆர்.எஸ்.பாரதியின் பேச்சுக்கு திருச்சி ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் கடுமையாக எதிர்வினையாற்றிய திருமாவளவன், தயாநிதி மாறனின் பேச்சுக்கு ‘தோழமை சுட்டலோடு’ நின்றுகொள்ளக் காரணம், அவர் கருணாநிதியின் குடும்ப வாரிசு என்பதாலா?’’

‘‘தயாநிதி மாறனின் பேச்சு எனக்குள்ளும் வலி உண்டாக்கியதால்தான் உடனடியாக எதிர்வினையாற்றினேன். சில நாள்களுக்குப் பிறகு, பலர் என்னை விமர்சித்த பிறகு நான் கருத்துச் சொல்லியிருந்தால் அது விமர்சனத்துக்குரியது. அதேவேளை, தயாநிதி மாறனின் பேச்சை நான் கேட்டேன். அது உள்நோக்கத்தோடு சொல்லப்பட்ட கருத்து இல்லை. அதோடு, என் ட்விட்டர் பதிவைப் பார்த்துவிட்டு, அவரே என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு. ‘நான் உள்நோக்கத்துடன் பேசவில்லை. ரியலி ஐ ஆம் ஸாரி’ என விளக்கம் தந்தார். உள்நோக்கத்துடன், ஒரு சமூகத்தை இழிவுபடுத்த வேண்டும் எனப் பேசியிருந்தால் நிச்சயமாக நாம் அமைதிகாக்க முடியாது. எதற்காகவும், எந்த நிலையிலும் வளைந்துபோகும், குனிந்து போகும் அளவுக்கு திருமாவளவன் பலவீனமானவன் இல்லை.’’

‘‘அப்படியென்றால், தி.மு.க-வின் ஆர்.எஸ்.பாரதி பேசியதில் உள்நோக்கம் இருந்தது என்று எடுத்துக்கொள்ளலாமா?’’

‘‘அப்படிச் சொல்லவில்லை. ஆர்.எஸ்.பாரதி கொள்கை சார்ந்து ஒரு கருத்தைத் தெரிவிக்கிறார். அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அரசியல் அமைப்பில் உறுதி செய்தது அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அதைத்தான் நான் பேரணியில் தெளிவுபடுத்தினேன்.’’

‘‘கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

‘‘ஊரடங்கை மட்டும்தான் அவர்கள் செய்த சாதனையாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கு என்பது ஒரு யுக்தி. அவ்வளவுதான். அது முழுமையான தடுப்பு நடவடிக்கை கிடையாது.

70 நாள்களைக் கடந்த நிலையில், இவர்கள் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பதை இவர்களால் பட்டியலிட முடியுமா? தொடர்ச்சியாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதானே செல்கிறது.’’

தொல். திருமாவளவன்
தொல். திருமாவளவன்

‘‘அரசு ஒன்றும் செய்யவில்லை சரி... ஆனால், கொரோனா நெருக்கடி காரணமாக பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தடை இருக்கும் வேளையில், மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் உங்கள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியது சரியா?’’

‘‘மாணவர் சேர்க்கைக்கான நேரம் நெருங்கிவிட்டது. போராட்டத் துக்கான அவசரத் தேவை ஏற்பட்டது. அதனாலேயே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதேநேரம் சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடித்து, முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன்தான் போராட்டம் நடத்தினோம்.”

‘‘ `தமிழக வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ என்று தற்போது தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறீர்கள். இது இனவாதம் ஆகாதா?’’

‘‘இனவாதம் என்பது பிற இனத்தின்மீது வெறுப்பை, வன்முறையைத் தூண்டுவதுதான். ஒரு சமூகத்தின் உரிமைகளைக் கோருவது இனவாதமாக மாறாது. அது ஜனநாயக உரிமை. புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனா காலத்தில் மிகுந்த நெருக்கடியைச் சந்தித்துவிட்டார்கள். அந்தந்த மாநில மக்கள் அவர்களின் மாநிலங்களிலேயே வேலை செய்தால், பேரிடர் காலத்தில் இங்கேயும் அங்கேயும் தொழிலாளர்கள் சிக்கித் தவிக்க வேண்டிய, பரிதவிக்க வேண்டிய தேவை ஏற்படாது. அதனால்தான் `தமிழ்நாட்டில் குறு, சிறு தொழில்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ எனக் கோரினோம். இது பிற இனத்தின் மீதான வெறுப்பினால் அல்ல!’’

‘‘எனில், ‘தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும்’ எனச் சொல்வதையும் ஜனநாயகக் கோரிக்கை என எடுத்துக்கொள்ளலாமா?’’

‘‘ `தமிழன், தமிழ்நாட்டை ஆள வேண்டும்’ என்பதும் ஜனநாயகக் கோரிக்கைதான். அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்கள், அந்தந்த மாநில மொழியைப் பேசக்கூடியவர்கள், அந்த மாநிலத்தை ஆளும் உரிமையைப் பெற்றால் அந்த மாநிலத்துக்கு நல்லதுதான். அதேவேளை, இங்குள்ள பிற இனத்தவரை அச்சுறுத்துவது, `அவர்களை வெளியேற்றுவோம்’ என்று சொல்வது, அவர்களுக்கெதிரான வன்முறையைத் தூண்டுவது இனவாதம். அது தவறு. ஏற்றுக்கொள்ள முடியாதது.’’

‘‘சிறுத்தையின் சீற்றம் குறைந்து காணப்படுவதுபோலத் தோன்றுகிறதே?’’

‘‘ஒரே உணர்ச்சியில் எல்லா நேரமும் இருக்க முடியாது. ஒரே உணர்ச்சியை எல்லாச் சூழலிலும் எந்த மனிதராலும் வெளிப்படுத்த முடியாது. சிறுத்தைகூட எல்லா நேரமும் ஓடிக்கொண்டிருப்ப தில்லை. தேவைப்படும் போதுதான் ஓடுகிறது; சீறுகிறது. மற்ற நேரங்களில் இயல்பாகவே இருக்கிறது. அதுபோல, தேவைப்படும் நேரத்தில்தான் நம் ஆற்றலையும், வேகத்தையும், வீரியத்தையும் வெளிப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையிலேயே நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன்.’’