Published:Updated:

“தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறப் பேரம் பேசினார்கள்!”

திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
திருமாவளவன்

- ரகசியம் உடைக்கும் திருமாவளவன்...

“தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறப் பேரம் பேசினார்கள்!”

- ரகசியம் உடைக்கும் திருமாவளவன்...

Published:Updated:
திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
திருமாவளவன்
வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி தன் 60-வது வயதில் அடியெடுத்துவைக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான திருமாவளவன். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக நேரடி தீவிர அரசியலில் இயங்கிவருபவரிடம் தற்கால அரசியல் சூழல்கள் பற்றி உரையாடினோம்.

“நாடாளுமன்றத்தில் இரண்டு உறுப்பினர்கள், சட்டமன்றத்தில் நான்கு உறுப்பினர்களுடன் நடைபோடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, உள்ளாட்சியில் கணக்கைத் தொடங்குவது எப்போது?’’

“உள்ளாட்சித் தேர்தல் என்பது சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்கள்போல கிடையாது. அது உணர்வுபூர்வமான களம். அங்கு கட்சி, சின்னம், கொள்கையெல்லாம் இரண்டாம் பட்சம்தான். ஊராட்சி தொடங்கி மாநகராட்சி வரை கவுன்சிலர்கள்தான் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அதில் போட்டியிடுபவர்களின் வெற்றியை சாதி, பொருளாதாரம், தனிநபர் செல்வாக்கு போன்றவைதான் தீர்மானிக்கின்றன. ஆனால் நகர மன்றத் தலைவர், மாநகராட்சி மேயர் போன்ற பதவிகளுக்கு கவுன்சிலர்கள் வாக்களித்துத் தேர்வு செய்யாமல், நேரடியாகத் தேர்வு செய்யும் முறை இருந்தால்தான் நமக்கான இடங்களைக் கேட்டுப் பெற முடியும். எனவே, முதல்வரிடம் நேரடியாகத் தேர்வு செய்யும் முறையைக் கொண்டுவரும்படி கேட்டிருக்கிறோம். தேர்தல் நடக்கும்போதுதான் இடங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும். அதேசமயம், உள்ளாட்சித் தேர்தலிலும் தி.மு.க-வுடனான கூட்டணி தொடரும்.’’

 “தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறப் பேரம் பேசினார்கள்!”

“ஒருவேளை உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க கூட்டணிக்குள் பா.ம.க வந்தால்?’’

“அரசியலில் எதுவும் நடக்கலாம். இந்தக் கட்சிகளுடன் நாங்கள் கடைசிவரை பயணிப்போம் என தி.மு.க-வோ, அ.தி.மு.க-வோ முடிவெடுக்க முடியாது. அந்தவகையில் விடுதலைச் சிறுத்தைகளுடன் எல்லா காலங்களிலும் தி.மு.க பயணிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், எங்கள் கட்சியைப் பொறுத்தவரை, மதவாத சக்தியான பா.ஜ.க-வோடும், சாதியவாத சக்தியான பா.ம.க-வோடும் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.’’

“இந்திய அளவிலும் சரி, தமிழக அளவிலும் சரி... தலித்திய இயக்கங்கள், தலைவர்கள் பா.ஜ.க-வோடு நெருங்கிவிட்ட நிலையில், திருமாவளவன் மட்டும் விலகியே நிற்பது ஏன்?’’

“நான் கல்லூரி மாணவனாக இருந்தபோதே ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள், ‘சாகா’ பயிற்சிகளில் கலந்துகொள்ளச் சொல்லி என்னிடம் பேசியிருக்கிறார்கள். ஆனால், அப்போது திராவிட இயக்கங்களோடு தொடர்புடைய என் சீனியர்கள், விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். அதேபோல, அம்பேத்கர் கடைசிவரை ஒரு விஷயத்தை மூர்க்கமாக எதிர்த்தார் என்றால் அது சனாதனம்தான். ஆனால், ஆர்.எஸ்.எஸ்-ஸின் அடிப்படைக் கொள்கையே அதுதான். அவர்களின் அரசியல் பிரிவுதான் பா.ஜ.க. சமத்துவத்தை, சமூகநீதியை விரும்பாத ஒரு கட்சியோடு பதவிக்காக, தனிப்பட்ட நலனுக்காக உறவாடுவது அல்லது கூட்டணி வைப்பது சரியல்ல என்பதில் நான் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன்.’’

“பா.ஜ.க-விலிருந்து உங்களுக்கு எப்போதாவது அழைப்பு வந்திருக்கிறதா?”

“கடந்த காலங்களில், பா.ஜ.க-வுடன் இணைந்து பணியாற்ற என்னை அழைத்திருக்கிறார்கள். ‘பிரதமர் மோடியை, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறோம்’ என்றெல்லாம் பேசியிருக்கிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில்கூட என்னிடம் பேரம் பேசினார்கள். ‘எங்கள் கூட்டணிக்குக்கூட வர வேண்டாம், வழக்கம்போல பா.ஜ.க-வையும் விமர்சிக்கலாம். ஆனால், தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும்’ என்று கேட்டார்கள். அதற்காக அனைத்துவிதமான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்கள். ஆனால், ‘தி.மு.க கூட்டணியை பலவீனப்படுத்தி, அதன் மூலம் பா.ஜ.க-வுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிற அ.தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது; பா.ஜ.க தமிழகத்தில் ஒருபோதும் காலூன்றிவிடக் கூடாது’ என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதனால்தான், இடங்களைப் பொருட்படுத்தாமல் முதல் ஆளாகச் சென்று தி.மு.க-வுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்.’’

“சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளரானபோது முதல் நபராகச் சென்று சந்தித்தீர்கள்... தற்போது அவரது செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலாவே தொடர்ந்திருந்தால், தமிழகத்தில் பா.ஜ.க ஓர் இடத்தில்கூட வெற்றி பெற்றிருக்க முடியாது. அதற்காக, கொள்கைரீதியாக பா.ஜ.க-வை சசிகலா எதிர்த்திருப்பார் என்று நான் சொல்லவில்லை. மாறாக, பிறர் தன்னை ஆளுமை செலுத்துவதை அவர் விரும்ப மாட்டார். தனித்து இயங்கக்கூடிய வலிமை அவரிடம் இருக்கிறது. பா.ஜ.க-வும் சசிகலாவை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது என்பதால்தான் அ.தி.மு.க-வை உடைத்தது. சசிகலாவை முடக்கி, நான்கு வருடங்கள் அ.தி.மு.க-வின் பெயரில் ஆட்சி செய்தது.’’

“வன்னியர் சமூகத்துக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“தனி இட ஒதுக்கீடோ, உள் இட ஒதுக்கீடோ... சமூகநீதி தொடர்பான எந்த நடவடிக்கையையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. அதேவேளை, இந்த 10.5 சதவிகிதம் என்பது பல கேள்விகளை எழுப்புகிறது. வன்னியர் சமூகத்தின் மக்கள்தொகை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

‘எம்.பி.சி-க்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில், நாங்கள் 16 சதவிகிதம் வரை அனுபவித்துக்கொண்டிருந்தோம். தற்போது அதை, 10.5 சதவிகிதமாகக் குறைத்துவிட்டதால், 5 சதவிகிதத்துக்கும் மேல் நஷ்டமாகிவிட்டது’ என்கிற கருத்துகள் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாலேயே முன்வைக்கப்படுகின்றன. அதேபோல, எம்.பி.சி பிரிவில் இருக்கும் மற்ற சாதியினரும் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதுகிறார்கள். அதனால், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி, எம்.பி.சி-யில் இருக்கும் அனைத்துச் சாதியினருக்கும் அவர்களின் மக்கள்தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு வழங்கினால் இதுபோன்ற விமர்சனங்கள் எழாது.’’

“பாடப் புத்தகங்களில் தலைவர்களின் சாதிப் பெயர்களை நீக்குவது, அவர்களின் அடையாளத்தைச் சிதைக்கும் செயல் என்கிற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றனவே?”

“பெரியார் வாழ்ந்த காலத்தில், நாயக்கர் என்றால்தான் அவரைத் தெரியும். முதலியார் என்றால் திரு.வி.க-வைக் குறிக்கும். ஆனால், தற்போது நிலைமை அப்படியா இருக்கிறது? பெரியார் என்றாலே அனைவருக்கும் தெரியும். சாதிப் பின்னொட்டோடு சொன்னால்தான் தலைவர்கள் யார் என்று தெரியும் என்பது குதர்க்கவாதம். அடுத்த தலைமுறைக்கும் சாதி அடையாளத்தோடு தலைவர்களை ஏன் அறிமுகப்படுத்த வேண்டும்? அவர்களின் புகைப்படத்தோடு, பெயர்களைப் போட்டால் மட்டும் போதுமே. சாதிப் பெயர்களை நீக்குவது சமூகநீதி அரசியலில் முக்கியமான நடவடிக்கை. அதை வரவேற்கிறேன்.’’

“அமைச்சர் ராஜகண்ணப்பன் இல்லத்தில் நடந்த சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் எழுந்த விளைவுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’

“என் சமூகம் சார்ந்து இப்படி உட்கார வைத்துவிட்டார்கள் என்று யோசிப்பதே அயோக்கியத்தனமான சிந்தனை. சாதி சார்ந்த தாழ்வு மனப்பான்மை எனக்கு எப்போதும் இருந்ததே கிடையாது. கையைக் கட்டி உட்காருவது என் மேனரிசம். சாதியவாதிகள், குதர்க்கவாதிகள், வெறுப்பு அரசியலை விதைக்கக்கூடிய பிற்போக்குவாதிகள் வேண்டுமென்றே அதைப் பெரிதுபடுத்திவிட்டார்கள்.’’

 “தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறப் பேரம் பேசினார்கள்!”

“அரும்பாக்கத்தில் வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டபோது ‘இருபது ஆண்டுகளுக்கு முன்பாகக் குடியேறியவர்கள், பூர்வகுடிகள் கிடையாது’ என்கிற கருத்துகள் முன்வைக்கப்பட்டனவே?’’

“பூர்வகுடிகள் என்றால், அந்த இடத்திலேயே பூர்வீகமாக வாழ்பவர்கள் என்று அர்த்தமல்ல. ஒட்டுமொத்தமாக இந்த தேசத்தின் மண்ணின் மைந்தர்கள். சென்னையைப் பொறுத்தவரை பட்டியல் சமூகத்தினரே பெரும்பாலும் கூவம் உள்ளிட்ட கரையோரங்களில் வசிக்கிறார்கள். அவர்களும் சென்னையின் பூர்வகுடிகளே.’’

“ `சென்னையில் பஞ்சமி நிலங்களை மீட்டிருந்தால், பட்டியல் சமூக மக்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது’ என்று அப்போது சில கருத்துகள் முன்வைக்கப்பட்டனவே?’’

“பொத்தாம் பொதுவான பிரச்னையாக இதைப் பேசுவதைவிட, பஞ்சமி நிலங்களைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் இருக்கிறது. தவிர, இதற்காக கலைஞரும் மருதமுத்து கமிஷனை அமைத்தார். ஆனால், மருதமுத்து கமிஷனை ஜெயலலிதா கிடப்பில் போட்டுவிட்டார். ஸ்டாலின் முதல்வரான பிறகு அவரைச் சந்தித்து ‘கலைஞர் அமைத்த ஆணையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். பஞ்சமி நிலங்களைக் கண்டறிந்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்கிற கோரிக்கையை முன்வைத்தேன்.’’

“35 ஆண்டுக்கால அரசியல் பயணத்தில் நீங்கள் அடைந்தது, இழந்தது எவை?’’

“என் இளமையை இழந்திருக்கிறேன். என் அம்மா திருமணம் குறித்துப் பேசும்போது மட்டுமே அதையும் உணர்ந்திருக்கிறேன்.

25 ஆண்டுகளாகத் தேர்தல் அரசியலில் பங்கேற்றபோதும் நீர்த்துப் போகாமல், தனித்த அடையாளங்களோடு தாக்குப்பிடித்து நிற்பதே நான் அடைந்தது!’'

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism