அரசியல்
Published:Updated:

“தி.மு.க மனது வைத்தால் சிறிய கட்சிகளிலிருந்தும் மேயர்கள் வர முடியும்!” - ஏதோ சொல்ல வருகிறார் திருமா

தொல்.திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
News
தொல்.திருமாவளவன்

தி.மு.க கூட்டணியில்தான் என்றில்லை... அ.தி.மு.க கூட்டணி அல்லது தேசிய அளவில் பா.ஜ.க கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி என எல்லாவிதக் கூட்டணியிலுமே இது உண்டுதான்.

கூட்டணிப் பேச்சு வார்த்தை, தொகுதிப் பங்கீடு, வேட்புமனு, மேயர் கனவு என நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இப்போதே களைகட்ட ஆரம்பித்துவிட்டது. சென்னை, தாம்பரம், ஆவடி என முக்கிய மாநகராட்சி மேயர் பதவிகள் தனித்தொகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனிடம் பேசினேன்...

“ ‘சென்னை நகர மேயர் பதவியைப் பட்டியலினத்தவருக்கு ஒதுக்க வேண்டும்’ என்ற வி.சி.க-வின் நீண்ட நாள் கோரிக்கையை, தமிழக அரசு நிறைவேற்றியிருக்கிறதே?’’

“தமிழ்நாட்டிலுள்ள 21 மாநகராட்சிகளில், ஆதிதிராவிட மக்களின் எண்ணிக்கை எங்கெல்லாம் அதிகமாக இருக்கிறதோ அந்தப் பகுதியைச் சேர்ந்த மாநகராட்சிகளை முதற்கட்டமாக தனித்தொகுதிகளாக அறிவிக்க வேண்டும். அந்த வகையில் சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிப் பகுதிகளில்தான் ஆதிதிராவிட மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. எனவே, இந்த முறை இந்த மூன்று தொகுதிகளும் தனித்தொகுதிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. வரும் காலங்களில் இதற்கடுத்த நிலையில் ஆதிதிராவிட மக்கள் எண்ணிக்கையைக் கொண்ட மாநகராட்சிகள் சுழற்சி முறையில் தனித்தொகுதிகளாக அறிவிக்கப்படும்.

ஆக, இது சட்டபூர்வமாக ஓர் அரசு செய்யவேண்டிய கடமை. அதைத்தான் தி.மு.க அரசு தற்போது செய்து முடித்திருக்கிறது. வி.சி.க, 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி சட்டப் போராட்டம் நடத்திவந்திருக்கிறது. அதனால், எங்கள் கோரிக்கையை ஏற்றுத்தான் தி.மு.க அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது என நாங்கள் உரிமை கோரவில்லை. அதேசமயம் எங்கள் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்ற வகையில் தி.மு.க அரசின் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்!’’

“தி.மு.க மனது வைத்தால் சிறிய கட்சிகளிலிருந்தும் மேயர்கள் வர முடியும்!” - ஏதோ சொல்ல வருகிறார் திருமா

“ஆனால், ‘மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்ற வி.சி.க-வின் நீண்ட நாள் கோரிக்கை இன்னமும் நிறைவேறவில்லையே?’’

“ ‘மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தப்பட வேண்டும், மேயர் பதவி மட்டுமல்லாமல் துணைத் தலைவர் பதவியும் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட வேண்டும்’ என்பதெல்லாம்கூட வி.சி.க-வின் நீண்ட நாள் கோரிக்கைகள். தற்போதைய நடைமுறையில் கவுன்சிலர்களால் மேயர் தேர்வு செய்யப்படுவதென்பது, மறைமுகத் தேர்தல் அடிப்படையிலானது. இந்தவகையில், கவுன்சிலராக வெற்றி பெற்றுவிட்ட ஓர் எளிய நபர், மேயராகவும் போட்டியிட்டு வெற்றிபெறுவதென்பது முடியாத காரியம். ஏனெனில், அரசியல் வலிமை, வாக்குவங்கி வலிமை மட்டுமல்லாமல் பொருளாதார வலிமையும் கொண்டவர்களால் மட்டும்தான் மறைமுகத் தேர்தலில், மேயர் பதவிக்காகப் போட்டியாளராக களத்தில் நிற்கவே முடியும்.

மக்களால் நேரடியாக மேயரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டாலும், மேயராக வெற்றிபெறுவதற்குப் பொருளாதார வலிமை முக்கியமானதாகவே இருக்கிறது... என்றாலும்கூட, குறைந்தபட்சமாக எளிய மக்களும் களத்தில் போட்டியிடுவதற்கான சூழலாவது ஏற்படும். எனவே, தமிழக முதல்வரிடம், எங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துவோம்.’’

“மறைமுகத் தேர்தல் என்றால், தி.மு.க., அ.தி.மு.க எனப் பெரிய கட்சிகள் மட்டுமே வெற்றிபெறும் என்கிறீர்களா?’’

“நிச்சயமாக. அதேசமயம், தி.மு.க தனது தோழமைக் கட்சிக்காக மேயர் தொகுதியை ஒதுக்கலாம் என மனமுவந்து ஒதுக்கினால் மட்டுமே சிறிய கட்சிகளிலிருந்தும் மேயர்கள் வர முடியும். இல்லையென்றால், 21 மாநகராட்சி களுக்கான மேயர் தேர்தல் என்பது ஆளுங்கட்சி - எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான போட்டியாக மட்டுமே அமையும்.’’

“தி.மு.க மனது வைத்தால் சிறிய கட்சிகளிலிருந்தும் மேயர்கள் வர முடியும்!” - ஏதோ சொல்ல வருகிறார் திருமா

“அப்படியென்றால், விரைவிலேயே வி.சி.க மேயர்களை எதிர்பார்க்கலாமா?’’

“இந்தக் கேள்விக்கான பதிலாக, யூகமாக நாங்கள் எதையும் சொல்ல முடியாது. எங்கள் விருப்பங்களை நிச்சயமாக நாங்கள் கேட்போம்!’’

“தி.மு.க கூட்டணியில், தோழமைக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் தொடர்ந்துவருகிறதே?’’

“தி.மு.க கூட்டணியில்தான் என்றில்லை... அ.தி.மு.க கூட்டணி அல்லது தேசிய அளவில் பா.ஜ.க கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி என எல்லாவிதக் கூட்டணியிலுமே இது உண்டுதான். தோழமைக் கட்சிகளின் எதிர்பார்ப்புகளை, கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சிகளால் முழுமையாக நிறைவேற்ற முடியாது. எனவே, எல்லாக் கூட்டணிகளுமே அப்படியும் இப்படியுமான ஓர் உறவாகத்தான் இருந்துவரும். எனவே, தி.மு.க கூட்டணியில் மட்டுமே இப்படியான நெருடல்கள் இருக்கின்றன என்று சொல்லிவிட முடியாது.’’

“சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க பெரும்பான்மை பெற வேண்டும் என்ற சிக்கல் இருந்தது. ஆனால், கடந்த உள்ளாட்சித் தேர்தல் தொகுதிப் பங்கீட்டிலும்கூட தி.மு.க தாராளமாக நடந்துகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததே?’’

“கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்பது தமிழகம் தழுவியதானதல்ல... புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கிடையே மட்டுமே நடைபெற்ற தேர்தல் அது. எனவே, கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சி, தோழமைக் கட்சிகள் என்று யாருமே அதை மிகப்பெரிய தேர்தலாக நினைக்கவில்லை. ஆனால், இப்போது நடைபெறப்போகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் என்பது தமிழகம் தழுவிய மிக முக்கியமான தேர்தல். எனவே, தோழமைக் கட்சிகளின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப தொகுதி ஒதுக்கீடுகளை தி.மு.க செய்யும், எங்களை அரவணைத்துச் செல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது.’’

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மகளிருக்கு 50% இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“மிக மிக மகிழ்ச்சியளிக்கக்கூடிய, பாராட்டுதலுக்குரிய நிலைப்பாடு இது. தி.மு.க-வையும், தமிழக முதல்வரையும் வி.சி.க மனப்பூர்வமாகப் பாராட்டுகிறது... வாழ்த்துகிறது!’’

“ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலை முன்னெடுக்கிற வி.சி.க-வும்கூட, தேர்தல் அரசியலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் கொடுப்பதில்லையே?’’

“கேள்வி நியாயமானது. ஆனால், நடைமுறையில் சில சிக்கல்கள் இருந்தன. எனவேதான், பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை எங்களால் தர முடியவில்லை. இதற்காக உள்ளபடியே வருத்தப்படுகிறோம். எதிர் காலத்தில், இது போன்று நிகழாமல் பார்த்துக் கொள்வோம்!’’

“தி.மு.க மனது வைத்தால் சிறிய கட்சிகளிலிருந்தும் மேயர்கள் வர முடியும்!” - ஏதோ சொல்ல வருகிறார் திருமா

“பொங்கல் பரிசுத்தொகுப்பின் தரம் குறித்துக் கேள்வி எழுப்பிய நபர் கைதுசெய்யப்படுகிறார், இதன் தொடர்ச்சியாக ஒருவர் உயிரிழக்கிறார்... இதுதான் விடியல் தரும் அரசா?’’

“உண்மையிலேயே இந்தச் சம்பவம் வேதனைக்குரிய நிகழ்வு. செய்தியைப் படித்தபோதே அதிர்ச்சியடைந்தேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். இது போன்ற போக்குகள் நடைபெறாவண்ணம் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல் களை அரசு தர வேண்டும். ஏனெனில், காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளின் தவறான அணுகுமுறைகளால், பல இடங்களில் இது போன்ற எளிய மக்கள் பாதிக்கப்படுகிற சூழல்கள் உருவாகின்றன. கூட்டணிக் கட்சி என்ற வகையில் அரசின் கவனத்துக்கு இந்தப் பிரச்னையைக் கொண்டுசெல்வோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்றும் கட்சியின் சார்பில் வலியுறுத்துவோம்!’’

“பொங்கல் பரிசுத்தொகுப்பில் நடைபெற்ற ஊழலை மறைக்கும் முயற்சியாகத்தான் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்மீது ரெய்டுகள் நடத்தப்படுகின்றன என்கிறார்களே?’’

“எதிர்க்கட்சியாக யார் இருந்தாலும், வழக்கமாக இது போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவார்கள்தான். ஆளுங்கட்சி என்ற வகையில், தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, கடந்த பத்தாண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியைப் பற்றிய மீளாய்வைச் செய்துவருகிறது. ஏனெனில், கடந்தகாலங்களில் அ.தி.மு.க அரசுமீது எத்தனையோ குற்றச்சாட்டுகள், புகார்கள் இருந்தன. அதன் அடிப்படையில்தான் தி.மு.க அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உதாரணமாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது விவகாரமும்கூட தனிப்பட்ட நபர் கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான். அரசாங்கமே முன்வந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்றபடி முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டு நடவடிக்கைகள் குறித்தெல்லாம் என்னிடம் போதுமான விவரங்கள் இல்லை!’’