Published:Updated:

அண்ணாமலையின் அரசியல் அரைவேக்காட்டுத்தனமானது! - விளாசும் தொல்.திருமாவளவன்

தொல்.திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
தொல்.திருமாவளவன்

திராவிடம் என்பது கொள்கைபூர்வமான ஒரு சொல்லாடல். ‘திராவிட மாடல்’ என்றால் பா.ஜ.க-வுக்கு எதிரான மாடல்...

அண்ணாமலையின் அரசியல் அரைவேக்காட்டுத்தனமானது! - விளாசும் தொல்.திருமாவளவன்

திராவிடம் என்பது கொள்கைபூர்வமான ஒரு சொல்லாடல். ‘திராவிட மாடல்’ என்றால் பா.ஜ.க-வுக்கு எதிரான மாடல்...

Published:Updated:
தொல்.திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
தொல்.திருமாவளவன்

மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக தேசிய அளவில் இடதுசாரிக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கைகோத்திருக்கிறது. அதற்கான தயாரிப்புப் பணிகளில் பரபரப்பாக இருந்த வி.சி.க-வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒன்றுசேர்ந்து நடத்துவதுதான் தி.மு.க கூட்டணியின் வழக்கம். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைக் கட்சியும் தனியாகப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறீர்களே?”

“மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டிருக்கும் விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவற்றுக்கு எதிராக தேசிய அளவில் இடதுசாரிகள் ஒரு போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். ஒரு வார காலம் விழிப்புணர்வு பரப்புரை நடக்கிறது. இடதுசாரிகள் மட்டுமே முன்னெடுக்கும் அந்தப் போராட்டத்தில், தமிழ்நாட்டில் வி.சி.க-வையும் இணைத்துக்கொள்வோம் என்று முடிவுசெய்து எங்களையும் இணைத்துக்கொண்டிருக்கிறார்கள். வேறொன்றுமில்லை.”

அண்ணாமலையின் அரசியல் அரைவேக்காட்டுத்தனமானது! - விளாசும் தொல்.திருமாவளவன்

“அதிகாரத்துக்கு வந்த பிறகு தி.மு.க., கூட்டணிக் கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்கிற பேச்சு எழுந்திருக்கிறதே?”

“ஆளுங்கட்சி என்கிறபோது இயல்பாகவே அதற்கு நிறைய பணிச்சுமைகள் இருக்கும். தேவையான நேரத்தில் எங்களை முதல்வர் சந்திக்கிறார்... எங்களுடன் கலந்து பேசுகிறார். மற்றபடி, எங்கள் கூட்டணிக்குள் எந்த முரண்பாடும், இடைவெளியும் கிடையாது. நாங்கள் அதிருப்தியடையும் அளவுக்கு எதுவும் இல்லை.”

“தி.மு.க ஆட்சியை நிறைய பாராட்டுகிறீர்கள். ஆனால், அரசுக்கு எதிரான விமர்சனங்கள் எதுவும் உங்களிடமிருந்து வரவில்லையே?”

“அரசுக்குச் சுட்டிக்காட்ட வேண்டியவற்றை எவ்விதத் தயக்கமும் இல்லாமல் சுட்டிக்காட்டுகிறோம். அதேநேரத்தில், கூட்டணியில் இருக்கும் எங்களால், அ.தி.மு.க மாதிரியோ, பா.ஜ.க மாதிரியோ ஒரேயடியாக எதிர்நிலைக்கு மாறிவிட முடியாது.”

“ ‘திராவிட மாடல் ஆட்சியென்றால், அது அனைவருக்குமான ஆட்சி’ என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். கடந்த ஒராண்டில், தலித் மக்களுக்கு இந்த ஆட்சி என்ன செய்திருக்கிறது?”

“திராவிடம் என்பது கொள்கைபூர்வமான ஒரு சொல்லாடல். ‘திராவிட மாடல்’ என்றால் பா.ஜ.க-வுக்கு எதிரான மாடல்... ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவாரத்துக்கும் எதிரான மாடல் என்று அர்த்தம். இதை வெறும் நலத்திட்ட உதவிகளுக்கானது என்று பார்க்காமல், கொள்கைபூர்வமாகப் பார்க்க வேண்டும். இன்றைக்கு தலித்துகள் ஓரளவுக்குக் கல்வியைப் பெற்றிருக்கிறோம் என்றால், கடந்த ஐம்பது ஆண்டுகளில் பெரியார் கொள்கைகளை முன்வைக்கும் அரசுகள் இருந்ததுதான் காரணம். திராவிடக் கொள்கைகளை உள்வாங்கிய அரசு இன்னும் நூறு ஆண்டுகளுக்கு நீடித்தால், தலித் மக்களின் பெரும்பாலான எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேறும்.”

“ `சாதி ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் வேண்டும்’ என்ற கோரிக்கையை தி.மு.க அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறதே?”

“அந்தக் கோரிக்கையை நாங்கள் வலியுறுத்திவருகிறோம். அந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம். தி.மு.க-வும் சாதி ஆணவக்கொலைகளுக்கு எதிரான ஒரு கட்சிதான். ஏற்கெனவே நிலைநிறுத்தப்பட்ட ஓர் ஆட்சி நிர்வாக முறையில், இது போன்ற கோரிக்கைகள் நிறைவேறுவதற்கு கால அவகாசம் தேவைப்படும்.”

“மாநில அரசுக்கு எதிராக வி.சி.க-வும் இடதுசாரிகளும் முன்னெடுக்கும் போராட்டங்கள் குறைந்துவிட்ட சூழலில், பா.ஜ.க-தான் பிரதான எதிர்க்கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு அதன் செயல்பாடுகள் இருக்கின்றனவே?”

“நாங்கள்தான் பிரதான எதிர்க்கட்சி... அ.தி.மு.க-வுக்கு மாற்றாக நாங்கள்தான் இருக்கிறோம் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க நினைக்கிறது. அந்தப் பதற்றத்தில் ஓர் அரைவேக்காட்டுத்தனமான அரசியலை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்துகொண்டிருக்கிறார். அவர் செய்யும் அரசியல் தி.மு.க-வுக்கு எதிரானது அல்ல... அது அ.தி.மு.க-வுக்கு எதிரானது.”

அண்ணாமலையின் அரசியல் அரைவேக்காட்டுத்தனமானது! - விளாசும் தொல்.திருமாவளவன்

“தமிழகத்தில் சில அதிகாரிகள் அரசைத் தவறாக வழிநடத்துகிறார்கள் என்றும், தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள் என்றும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றனவே?”

“எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் ‘அதிகார வர்க்கம்’ என்பது அதற்குரிய குணாம்சங்களுடன்தான் செயல்படும். ஆட்சிக்கு வருபவர்கள் அதைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயல்வார்கள். தாங்கள் விரும்புகிற மாதிரி அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அதையும் மீறி, சில பிரச்னைகளில் ‘ஸ்பாட் ஆபீஸர்’ என்று சொல்லப்படும் களத்தில் இருக்கும் அதிகாரி, தானாகவே முடிவெடுப்பார். அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுகிறார்கள் என்கிற விமர்சனம் அங்கிருந்துதான் எழுகிறது.”

“ `செருப்பைத் தலையில் தூக்கிச் சுமந்தவர்களை வணக்கத்துக்குரிய மேயராக ஆக்கியிருக்கிறோம்’ என்று தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி பேசியதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“அவரது பேச்சை முழுமையாகக் கேட்டேன். காலம் காலமாக இப்படியொரு சமூகம் இருந்தது... அது இன்றைக்கு மாறிக்கொண்டுவருகிறது... அப்படித்தான் அந்தச் சமூகத்திலிருந்து ஒரு பெண்மணி மேயர் ஆகியிருக்கிறார் என்று லியோனி சொல்லவருகிறார். குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் அப்படி அவர் பேசவில்லை. தலித் சமூகத்தை மட்டுமல்லாமல், கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட அனைத்துச் சமூகங்களையும் பற்றிப் பேசிக்கொண்டு வருகையில், `ஒரு காலத்தில் தலையில் செருப்பைச் சுமந்த சமூகம்’ என்று குறிப்பிடுகிறார். அதை மட்டும் வெட்டி சமூக வலைதளங்களில் பரப்பியிருக்கிறார்கள். லியோனி ஒரு பெரியாரிஸ்ட். அவர் ஒரு சமூகத்தை இழிவுபடுத்த வேண்டும் என்று பேசியிருக்க மாட்டார்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism