Published:Updated:

“இந்தியாவை ‘இந்து ராஷ்டிரா’வாக மாற்ற போகிறார்கள்!”

தொல்.திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
தொல்.திருமாவளவன்

- ஆதங்கப்படும் திருமாவளவன்

“இந்தியாவை ‘இந்து ராஷ்டிரா’வாக மாற்ற போகிறார்கள்!”

- ஆதங்கப்படும் திருமாவளவன்

Published:Updated:
தொல்.திருமாவளவன்
பிரீமியம் ஸ்டோரி
தொல்.திருமாவளவன்

மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிரான வலுவான குரல்களில் ஒன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுடையது. ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற முயற்சி நடக்கிறது’ என்று தொடர்ச்சியாகப் பேசிவருகிறார் அவர். அது தொடர்பாகவும், ஆ.ராசாவின் பேச்சு குறித்த சர்ச்சை உள்ளிட்ட விவகாரங்கள் பற்றியும் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ ‘2024-க்குப் பிறகு இந்திய அரசியல் சூழல் மாறப் போகிறது. அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றப்போகிறார்கள். எதிர்க்கட்சியினர் சிறையில் தள்ளப்படுவார்கள்’ என்றெல்லாம் பேசிவருகிறீர்கள். அவர்களுக்கு, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டிய தேவை என்ன?”

“மத்தியில் ஆளும் பா.ஜ.க-வை ஆர்.எஸ்.எஸ்-தான் இயக்குகிறது. ஆர்.எஸ்.எஸ்-ஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் முதன்மையான எதிரி யார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் எதிரி காங்கிரஸ் அல்ல; கம்யூனிஸ்ட் கட்சிகள் அல்ல; தி.மு.க-வோ, வி.சி.க-வோ அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டம்தான், அவர்களின் முதன்மையான எதிரி. அவர்களின் நோக்கங்களை நிறைவேற்ற அதுதான் தடையாக இருக்கிறது. இந்துக்களுக்கு மட்டுமே உரிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்பது அவர்களின் மிகப்பெரிய திட்டம். அதன் பெயர், ‘இந்து ராஷ்டிரா.’ அரசியலமைப்புச் சட்டம், இந்து ராஷ்டிராவைக் கொண்டுவருவதற்கு மிகப்பெரியத் தடையாக இருப்பதால், அதை மாற்ற வேண்டுமென்று முயல்கிறார்கள்.”

“ஆனால், பிரதமர் மோடி உட்பட பா.ஜ.க-வினர் யாருமே இது பற்றிப் பேசியதாகத் தெரியவில்லையே?”

“இதை அவர்கள் வெளிப்படையாகப் பேச மாட்டார்கள். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் 30 பேர்கொண்ட ஒரு குழுவை அமைத்து ‘இந்து ராஷ்டிரா’ என்ற பெயரில் 750 பக்கங் களுக்கு வரைவுச் சட்டம் ஒன்றை உருவாக்கிவருகிறார்கள். அதில், இந்தியாவின் பெயரையே மாற்று கிறார்கள். டெல்லிக்கு பதிலாக வாரணாசிதான் தலைநகர். முஸ்லிம் களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் வாக்குரிமை கிடையாது என்று பல ஆபத்துகளைக் கொண்டு வருகிறார்கள். வாரணாசியைச் சேர்ந்த ‘சங்கராச்சார்யா பரிஷத்’ என்ற அமைப்பின் தலைவரான ஸ்வாமி ஆனந்த் ஸ்வரூப், இந்த விவரங்களையெல்லாம் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.”

“இந்தியாவை ‘இந்து ராஷ்டிரா’வாக மாற்ற போகிறார்கள்!”

“ஏதோ சில அமைப்புகளின் செயல்பாடுகளைவைத்து, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றப்போகிறார்கள் என்று சொல்வது சரியா?”

“வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதே, அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்கான முயற்சியாக, நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் ஒரு குழு அமைத்தனர். அந்தக் குழுவின் அறிக்கையை அப்போதைய குடியரசுத் தலைவரான கே.ஆர்.நாராயணன் பொருட் படுத்தவில்லை. அப்போதே அப்படியென்றால், தற்போது, மோடி தலைமையில் மிருக பலத்துடன் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறது பா.ஜ.க. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370-ஐ நீக்கியது, ராமர் கோயில் கட்டுவது, குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவந்தது என்று நினைத்ததைச் சாதித்து விட்டார்கள். அதேபோல, இனி எதையும் செய்துவிடலாம் என்று நினைக்கிறார்கள்.”

“இதைத் தடுக்க எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?”

“இந்த நேரத்தில், மதச்சார்பற்ற, ஜனநாயகக் கட்சிகள் அனைத்தும், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு ஓரணியில் திரள வேண்டும். தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தேசிய அளவில் தீவிரமாக இறங்க வேண்டும்.”

“சனாதனம் குறித்து தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்த கருத்து சர்ச்சையாக மாறியிருக்கிறதே?”

“அது, ஆ.ராசாவின் கருத்து அல்ல. மனு தர்மத் தின் கருத்து. ‘மனு தர்மத்தில் இப்படிச் சொல்லப் பட்டிருக்கிறது’ என்றுதான் ஆ.ராசா சொன்னார். அவர் சொன்ன கருத்துக்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், அந்த கருத்து இடம் பெற்றிருக்கும் புத்தகத்தின் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் புத்தகத்தையே தடை செய்ய வேண்டும். ஆ.ராசா மீது மட்டும் பாய்பவர்கள், அந்தக் கருத்து பற்றி ஏன் விவாதிக்க மறுக்கிறார்கள்... ஆ.ராசா சொன்ன அதே கருத்தை அம்பேத்கரும் பேசியிருக்கிறார். அம்பேத்கரையும் பா.ஜ.க-வினர் விமர்சிப்பார்களா?”

“மின்கட்டண உயர்வுக்கு எதிராக நீங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கருத்து தெரிவித்ததை சகித்துக்கொள்ள முடியாமல், ‘முரசொலி’யில் குமுறியிருக்கிறார்களே?”

“மின்கட்டண உயர்வால் சாதாரண ஏழை எளிய மக்களும் பாதிக்கப்படுவார்கள். நிதிச்சுமை இருந்தாலும்கூட, ஏழை மக்களின் நிலையைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்று சொன்னேன். அதேபோல, சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் கட்டண உயர்வுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார். அதற்கு, தவிர்க்க இயலாமல் அந்த முடிவை அரசு எடுக்க வேண்டியிருந்தது என்று ‘முரசொலி’ கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்கள். நாம் கூட்டணியில் இருக்கிறோம். இந்த மாதிரி அறிக்கை வெளியிடுவதன் மூலமாக எதிரிகள் பேசுவதற்கு வாய்ப்பு கொடுத்துவிடக் கூடாது என்று ‘அலர்ட்’ செய்வதுபோல சொல்லியிருந்தார்கள் என்றுதான் அதை நான் பார்க்கிறேன்.”

“கணியாமூர் தனியார் பள்ளி விவகாரத்தில் வி.சி.க-வின் பெயர் அடிபட்டது. அதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தினீர்கள். அதில், இப்போது உங்கள் நிலைப்பாடு என்ன?”

“எங்கள் கட்சியின் பெயரை வீணாக இதில் சம்பந்தப்படுத்துகிறார்கள். மாணவியின் மரணத்தில் ஏதோ சதிப் பின்னணி இருக்கிறது. உண்மையான புலன்விசாரணை நடக்க வேண்டும். அது குறித்து முதல்வரிடம் நேரடியாகக் கோரிக்கை வைத்திருக்கிறோம். பொதுக் கூட்டத்திலும் அதை வேண்டுகோளாக வைத்திருக்கிறோம். மரணமடைந்த மாணவியின் தாயார் எங்கள் கட்சி அலுவலகத்துக்கு வந்து பேசினார். தமிழக அரசு எப்படியும் நீதியைப் பெற்றுத்தரும் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.”