விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சமூக நல்லிணக்க அறப்போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக, ``அக்டோபர் 2-ல் காந்தியடிகளின் பிறந்தநாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்துக்கு அரசு தடை விதித்துள்ளது. அந்த அமைப்பு அரசியல் கட்சியல்ல; மாறாக, மதவாத இயக்கம் என அறியப்பட்ட நிலையில், அரசுக்கு எழும் அச்சத்தில் நியாயமுள்ளது.
ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் இணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அதே நாளில் நடத்தவிருந்த மனிதச்சங்கிலி அறப்போராட்டத்துக்குத் தடைவிதித்திருப்பது எந்த வகையில் நியாயம் என்னும் கேள்வி எழுகிறது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்த நிலையில் அதற்குப் பின்வருமாறு காரணங்களைக் கூறுகிறது காவல்துறை.

இந்திய ஒன்றிய அரசால் பாப்புலர் ஃப்ரன்ட் ஆப் இந்தியா அமைப்பு தடைசெய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றன. மாநிலத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்றுவரும் சூழலில் 1மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கைக் காக்க, கண்காணிக்க காவல்துறையினர் முழுவீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய சூழலில், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கும் அனுமதி அளிக்க இயலாது’ எனக் குறிப்பிட்டிருந்தது.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடைசெய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு கூறியிருக்கும் காரணம் ஏற்கத்தக்கதாக உள்ளது. ஏனெனில், அவை இரண்டும் தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அல்ல. ஆனால் சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளும், விசிகவும் தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகள்.

இந்த மூன்று அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து அறிவித்திருந்த `சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி’ அறப்போராட்டத்துக்கு எமது தோழமைக் கட்சிகளான மதிமுக, மமக, தவாக, நாதக, எஸ்டிபிஐ, சிபிஐ (எம்.எல்- வி), தபுக என பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் திக, திவிக, தபெதிக, போன்ற சமூகநீதி இயக்கங்களும் ஆதரவு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. அதாவது இந்தப் போராட்டம் முற்றிலும் அரசியல் கட்சிகள் இணைந்து நடத்துவதாகும். எனவே, இதை மதம் சார்ந்த அமைப்புகளின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுவதும், அனுமதி மறுப்பதும் ஏற்புடையதாக இல்லை. மதவெறி பாசிச ஆர்எஸ்எஸ் அமைப்புடன் ஜனநாயக வழியில் மக்களுக்குப் பணியாற்றும் அரசியல் கட்சிகளை ஒப்பீடு செய்வதே வேதனைக்குரியதாகும்.
ஆர்எஸ்எஸ்-ஸைக் காரணம் காட்டி சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி அறப்போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சரியா... மதவாத அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஸும் அரசியல் கட்சிகளான சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் விசிகவும் ஒரே வகையானவையா... எனவே, காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2-ம் நாளன்று நடக்கவுள்ள எமது 'சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி' அறப்போராட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்'' எனத் தெரிவித்திருக்கிறார்.