
முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டுகள் எல்லாம் அப்போதைக்கு கையிலெடுக்கப்பட்டதே தவிர, திரும்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
12 மணி நேர வேலை மசோதாவைத் தடாலடியாக நிறைவேற்றி, அதே வேகத்தில் நிறுத்திவைத்திருக்கிறது தி.மு.க அரசு. திருமண மண்டபங்களில் மது விருந்து, நில ஒருங்கிணைப்பு மசோதா எனக் கடந்த ஒரு வாரத்தில் சர்ச்சைகளின் மையப்புள்ளியாக தி.மு.க அரசு மாறியிருக்கும் சூழலில், வி.சி.க சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸைச் சந்தித்தேன்...
“12 மணி நேர வேலை, திருமண மண்டபங்களில் மது விருந்து, நில ஒருங்கிணைப்பு மசோதா என ஒரே வாரத்தில் தி.மு.க பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறதே?”
“கடந்த 23 மாதங்களில், எதையுமே எடுத்தேன் கவிழ்த்தேன் என்றோ, சர்வாதிகார மனநிலை யிலோ முதலமைச்சரின் அணுகுமுறை இருந்ததில்லை. ஒவ்வொன்றுக்கும் குழு அமைத்து, அறிஞர்களை வைத்து ஆலோசித்து, பார்த்துப் பார்த்து செய்தார். அப்படிப் பார்த்துப் பார்த்து செய்த எல்லாமே சக்சஸ் ஆனது. ஆனால், கடந்த ஒரு வாரத்தில் சர்ச்சைக்குள்ளான இந்தச் சம்பவங்கள் யாரிடமும் ஆலோசிக்கப்பட்டதல்ல. திடீரெனச் செய்யப்பட்டவை. இந்த ஆலோசனைகளை யார் கொடுத்தார்கள் என்றும் தெரியவில்லை. எங்களுக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது!”
“தி.மு.க அரசின் இந்தத் தடுமாற்றம் கூட்டணியிலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறதே?”
“12 மணி நேர வேலை சட்டத் திருத்த முடிவை தி.மு.க அரசு தடுமாற்றத்தில் எடுத்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அண்மைக்கால நிகழ்வுகள் கூட்டணியில் லேசான சலசலப்பை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால், கூட்டணியில் விழுந்த கீறலை முதல்வரே உடனடியாகச் சரிசெய்துவிட்டார்.”
“ `தமிழகத்தை ஆண்ட பிற கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன்’ என்று அண்ணாமலை சொல்லியிருக்கிறாரே?”
“அ.தி.மு.க கூட்டணி இல்லை என்று முடிவாகும் பட்சத்தில் வேண்டுமானால், அவர்கள் மீதான ஊழல் பட்டியலையும் வெளியிடுவார்கள். ஒருவரைப் பணியவைக்க, தங்கள் திட்டங்களை நடைமுறைப்படுத்தத்தான் பா.ஜ.க ரெய்டு நடத்துகிறது.”

“ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடத்தப்பட்ட ரெய்டும் அப்படிப்பட்டதுதானா?”
“புது ரெய்டு போவதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஏற்கெனவே நடந்த ரெய்டுகளின் இன்றைய நிலை என்ன... முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டுகள் எல்லாம் அப்போதைக்கு கையிலெடுக்கப்பட்டதே தவிர, திரும்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆக, அன்றைக்கு அ.தி.மு.க அரசைப் பணியவைக்க ரெய்டுகளை நடத்தியதைப்போல, இன்றைக்கு தி.மு.க அரசைப் பணியவைக்கும் முயற்சியாக ரெய்டு நடத்துகிறார்கள்... அவ்வளவுதான்.”
“ `2026-ல் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்’ என பா.ஜ.க உறுதியாகச் சொல்கிறதே?”
“அதற்குச் சாத்தியமே இல்லை. மதம், சாதியை வைத்து செய்யும் வெறுப்பு அரசியல் தமிழ்நாட்டில் எப்போதும் எடுபடாது. அப்படியொரு முயற்சியை ராமதாஸ் எடுத்த பிறகுதான் பா.ம.க வீழ்ச்சியைச் சந்தித்தது. அதே நிலைமைதான் பா.ஜ.க-வுக்கும் ஏற்படும்.”
‘‘ஆனால், ‘தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் அண்ணாமலைதான்’ என தேஜஸ்வி கர்நாடகாவில் சொல்லியிருக்கிறாரே?”
“இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதை இது. முதலில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதவியைத் தக்கவைப்பார்களா... பா.ஜ.க-வுக்கு நிரந்தரத் தலைவர் என்பதே கிடையாது. ‘எப்போது வேண்டுமானாலும் என்னை மாற்றிவிடுவார்கள். ஊருக்கே சென்றுவிடுவேன்’ என அண்ணாமலையே சொல்லியிருக்கிறார். தேஜஸ்விக்கு அண்ணாமலை மீது என்ன கோபமோ... தெரியவில்லை!”
“ `10 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்துவரும் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்’ என வி.சி.க தொடர்ந்து கோரிக்கை வைக்கிறது. ஆனால், தி.மு.க-விடம் ஒருவித தயக்கம் தெரிகிறதே?’’
“இந்தக் கோரிக்கையை நாங்கள் மட்டும் வைக்கவில்லை. தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்கூட நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் இதே கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். `உரிய நடவடிக்கை எடுப்போம்’ என முதலமைச்சரும் உறுதியளித்திருக்கிறார். கலைஞர் நூற்றாண்டை ஒட்டி விடுதலை செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.”
“ `தமிழ்நாட்டில் சாதி மோதல் இல்லை, காவல் மரணங்கள் இல்லை, அமைதிப்பூங்காவாக இருக்கிறது’ என முதலமைச்சர் கூறுகிறார். உண்மையில் அப்படித்தான் இருக்கிறதா?”
‘‘அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் இருந்ததுபோல சாதி மோதல்கள், காவல் மரணங்கள் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பான கண்காணிப்புக் கூட்டங்களை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூட்ட வேண்டுமென்பது சட்டம். ஆனால் எடப்பாடி ஒரு முறைகூட கூட்டவில்லை. தி.மு.க அரசு அமைந்த பிறகு மூன்று முறை அந்தக் கூட்டத்தை முதல்வர் கூட்டியிருக்கிறார். எஸ்.சி., எஸ்.டி மாநில ஆணையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையை எடப்பாடி சீண்டவே இல்லை, ஆனால் ஸ்டாலின் அரசு அமைத்திருக்கிறது.’’
“சட்டப்பேரவையில் கூட்டணிக் கட்சிகளேகூட சபாநாயகருடன் மோதல் போக்கில் ஈடுபடுவதைப் பார்க்க முடிகிறதே?”
“சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சிகளுக்குத் தான் அதிக நேரம் ஒதுக்குகிறார். கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான நேரம்தான் கொடுக்கப்படுகிறது. வருங்காலத்தில் இது சரியாகும் என்று நம்புகிறோம்!”