
- போட்டுத்தாக்கும் வி.சி.க எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி
‘சனாதன எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் பேரணியை அனுமதிக்கக் கூடாது, ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்’ என அதிரடி அரசியலைத் தொடர்ச்சியாக முன்வைத்துவருகிறது வி.சி.க. மத்தியில் ஆளும் பா.ஜ.க-வுக்கு எதிராகவும் கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவுசெய்துவருகிறார் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். சனாதன எதிர்ப்பை மேடைதோறும் முழங்கிவரும் அவரின் ‘கட்சிக்குள்ளேயே சனாதனம் இருக்கிறது’ என வெடித்திருக்கிறார் வி.சி.க மகளிரணி முன்னணி நிர்வாகி. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜியைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...
``உங்கள் கட்சியினர், குறிப்பாக உங்கள் தலைவர் திருமாவளவன் தொடர்ச்சியாக பா.ஜ.க-வைக் குறிவைத்து விமர்சனம் செய்வது ஏன்?’’
``விடுதலைச் சிறுத்தைகளின் அடிப்படைக் கருத்தியலுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டது பா.ஜ.க. அது அரசியல் கட்சியாக இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் ஓர் அங்கம்தான். அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல் பொதுச் சமூகத்திலும் இந்துத்துவ, சனாதனக் கருத்துகளுடன் அவர்கள் இயங்குகிறார்கள். நாங்கள் அதற்கு எதிரான அம்பேத்கரின் ஜனநாயகக் கொள்கைகளின்படி செயல்படுகிறோம். அதனால்தான் தொடர்ந்து எதிர்த்துவருகிறோம்.’’

``ஆனால், உங்கள் கட்சியிலேயே சனாதனம் இருக்கிறது என உங்கள் கட்சியின் மகளிரணி மாநிலத் தலைவி நற்சோனை வெளிப்படையாகப் பேசியிருக்கிறாரே?’’
``கட்சியில் வெளிப்படையாக நடக்கக்கூடிய ஒரு கூட்டத்தில் ஒரு நிர்வாகி, நிர்வாகரீதியான சிக்கல்களைப் பேசுகிறார் என்றால், எங்கள் கட்சி எவ்வளவு ஜனநாயகத்துடன் செயல்படுகிறது என்பதை இதிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ளலாம்.’’
``ஆனால், உங்கள் தலைவர் திருமாவளவன் மைக்கை ஆஃப் செய்யச் சொன்னதாகவும், நற்சோனையைப் பேச வேண்டாம் எனக் கூறியதாகவும் செய்திகள் வெளியாகினவே?’’
``இல்லை, அவர் அப்படிச் சொல்லவில்லை. அவரைப் பேசவிடுங்கள் என்றுதான் சொன்னார். ஒவ்வொரு நிர்வாகியின் கருத்தையும் கேட்க வேண்டும் என்றுதான் எங்கள் தலைவர் நினைப்பார். எங்கள் கட்சி மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் செயல்படும் இயக்கம். எங்கள் கட்சியிலேயே ஒருசிலர் பேசும் முறை கொஞ்சம் கடுமையாக இருக்கலாம். அவர்களின் சுபாவம் அதற்குக் காரணமாக இருக்கலாம். நற்சோனை பேசிய விஷயங்கள் குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறோம்.’’
``ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்’ எனத் தொடர்ச்சியாக வி.சி.க கோரிக்கை வைப்பது ஏன்?’’
``ஆளுநர் பதவியே வேண்டாம் என்பதுதான் எங்களின் அடிப்படைக் கொள்கை. அதேவேளையில், அரசியலமைப்பின்படி ஆளுநருக்கு வரையறுக்கப்பட்ட வேலைகளைக் கடந்து, அடிப்படை தார்மிகத்தை மீறி ஆர்.என்.ரவி செயல்படுகிறார். வெளிப்படையாகச் சொல்வதென்றால், தமிழக பா.ஜ.க-வின் தலைவரைப்போல, அந்தக் கட்சியை வளர்க்கத் தன் பதவியைப் பயன்படுத்திக்கொள்கிறார். அதனால்தான் அவரை விமர்சிக்கிறோம், எதிர்க்கிறோம், திரும்பப் பெறச் சொல்கிறோம்.’’
``ஆனால், வடகிழக்கு மாநிலங்களில் தமிழை இரண்டாவது மொழியாகச் சேர்க்க முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக ஆளுநர் கூறியிருக்கிறாரே?’’
``விஷத்தின்மீது வெண்ணெய் தடவும் செயல்தான் இது. விஷமத்தனமான வேலைகளுக்கு மேலே சுகர் கோட்டிங் கொடுத்தால் மக்கள் நம்பிவிடுவார்களா?”
`` `பிரதமர் பாதுகாப்பில் குளறுபடிகள்’ என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆளுநரிடம் புகார் அளித்திருக்கிறாரே?’’
``தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சட்டம்- ஒழுங்கு சரியில்லை என இந்த அரசுக்கு எதிராக ஒரு வெறுப்பை, அவப்பெயரை உருவாக்கத் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறார்கள். அதைவைத்து அரசியல் செய்யப் பார்க்கிறார்கள்.’’
``ராணுவ வீரர் குருமூர்த்தியை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் மிரட்டியதாகச் செய்தி வெளியானதே?’’
``அது குறித்து மிகத் தெளிவான விளக்கத்தை நாங்கள் ஏற்கெனவே கொடுத்துவிட்டோம். பா.ஜ.க-வுக்குத் தமிழகத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலே விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். அதனால் எங்களைப் பற்றி அவதூறு பரப்புவதற்குக் காரணத்தைத் தேடுகிறார்கள். இந்த விஷயமும் அதில் ஒன்றுதான்.’’
``கடலூரில் காவல்துறையின் தடையை மீறி உங்கள் கட்சியினர் கொடியேற்றியிருக்கிறார்கள். ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருந்துகொண்டு சட்டம்-ஒழுங்கை மீறலாமா?’’
``இந்த விஷயத்தில், மற்ற கட்சிகள், அமைப்புகளுக்கு இருக்கிற கொடி ஏற்றுதல் போன்ற ஜனநாயகரீதியான உரிமைகளுக்குக்கூட வி.சி.க-வினர் போராடவேண்டியிருக்கிறது. இதெல்லாம் ஒருசில கட்சிகள், அமைப்புகளின் தூண்டுதலின்பேரிலேயே நடக்கின்றன. குறிப்பாக, பாட்டாளி மக்கள் கட்சியின் தூண்டுதலின்பேரில் இது தொடர்ந்து நடந்துவருகிறது. அரசு, ஜனநாயகரீதியில் செயல்பட நினைத்தாலும் அனைத்து அதிகாரிகளும் அதற்கேற்ப நடந்துகொள்கிறார்கள் எனச் சொல்ல முடியாது. தவிர, இந்த விஷயத்தைச் சட்டம்-ஒழுங்குப் பிரச்னையாகப் பார்க்க முடியாது. எங்கள் அடிப்படை உரிமை சார்ந்த பிரச்னை.’’
``கட்சித் தலைவரான பிறகு அன்புமணியின் அரசியல் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’
``வளர்ச்சியை நோக்கிய தலைவராக அவருக்கு ஒரு தோற்றத்தைத் தர முயல்கிறார்கள். ஒரு மாபெரும் திறமையாளராக அவரைக் காட்ட முயல்கிறார்கள். ஆனால், உண்மைநிலை அப்படி இல்லை. உதாரணமாக, கடலூர் கொடியேற்றப் பிரச்னையில்கூட அவரின் கட்சிக்காரர் ஒருவர் சாதி குறித்துப் பேசுகிறார். அதுவும் சின்னையாவின் ஆசியோடுதான், தான் செயல்படுவதாகக் கூறுகிறார். இப்படி உள்ளே ஒரு முகம், வெளியே ஒரு முகம் என இரட்டை முகத்தோடுதான் அவர் இருக்கிறார்.’’